இந்தியா

வேளாண் சட்டங்களை திரும்பப்பெற முடியாது: பாஜக அரசு பிடிவாதம்- போராட்டம் தொடரும் என விவசாயிகள் திட்டவட்டம்!

விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையேயான இன்றைய பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்துள்ளது.

வேளாண் சட்டங்களை திரும்பப்பெற முடியாது: பாஜக அரசு பிடிவாதம்- போராட்டம் தொடரும் என விவசாயிகள் திட்டவட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பா.ஜ.க அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து, விவசாயிகள் 10-வது நாளாக போராட்டங்களைத் தொடர்ந்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக பல்வேறு மாநிலங்களிலும், விவசாயிகளுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள், விவசாய அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் விவசாயிகள் போராட்டம் நடத்துவதற்கு அரசு அனுமதி மறுத்ததால், டெல்லி புறநகர் பகுதியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து, நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தைகளில் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்காமல் பிடிவாதம் செய்து வருகிறது மத்திய அரசு.

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற முடியாது என்றும், மின்சார திருத்தச் சட்டத்தையும், சுற்றுச்சூழல் திருத்தச் சட்டத்தையும் வேண்டுமானால் திரும்பப் பெறுகிறோம் என்று மத்திய அரசு பேச்சுவார்த்தையின் போது கூறியிருக்கிறது.

இதனால், விவசாயிகளுடனான ஐந்தாம் கட்டப் பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்துள்ளது. இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை டிசம்பர் 9ம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தையின்போது, வேளாண் சட்டங்களில் திருத்தங்கள் வேண்டுமானால் கொண்டு வருகிறோம் என்றும், எட்டு திருத்தங்களை மேற்கொள்ள தயார் என்றும் மத்திய அரசு தரப்பு தெரிவித்துள்ளது. ஆனால், இதற்கு விவசாய சங்கங்களைச் சேர்ந்தவர்கள் மறுப்பு தெரிவித்துவிட்டனர். முற்றிலுமாக சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று விவசாயிகள் வாதங்களை முன்வைத்தனர்.

வேளாண் சட்டங்களை திரும்பப்பெற முடியாது: பாஜக அரசு பிடிவாதம்- போராட்டம் தொடரும் என விவசாயிகள் திட்டவட்டம்!
Vignesh

இதற்கிடையே மத்திய அரசு சட்டங்களை திரும்பப் பெற முடியாது என்று பிடிவாதமாகக் கூறியதைத் தொடர்ந்து கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்யப்போவதாக விவசாய சங்கங்கள் அறிவித்தன. இதனைத் தொடர்ந்து அவர்களை அமைதிப்படுத்தி மீண்டும் அமரவைத்து பேச்சுவார்த்தையை அமைச்சர்கள் தொடர்ந்தனர்.

பேச்சுவார்த்தைக்கு வந்த விவசாயிகள் குடிநீர், உணவு உள்ளிட்ட அனைத்தையும் அவர்களை கொண்டு வந்திருந்தனர். பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கும் சூழலில், போராட்டம் நடைபெறக்கூடிய இடங்களில் 62 மத்திய படை கம்பெனிகளை மத்திய அரசு குவித்திருக்கிறது. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டெல்லி போலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

பேச்சுவார்த்தைக்கிடையே விவசாயிகளிடம் மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் முதியவர்களையும் சிறுவர்களையும் போராட்டக் களத்தில் இருந்து வீட்டுக்கு அனுப்பி வையுங்கள் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.

இதற்கிடையே, 8ஆம் தேதி தேசிய அளவிலான வேலைநிறுத்தப் போராட்டம் நிச்சயமாக நடைபெறும் என்றும், தொடர்ந்து அந்தந்த இடங்களிலேயே விவசாயிகள் போராட்டத்தை தொடரப்போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories