இந்தியா

“மோடி அரசு விவசாயிகளுக்கானது அல்ல; கொள்ளைக்காரர்களுக்கும், சூட்-பூட் போட்டவர்களுக்குமானது”: ராகுல் சாடல்!

“பா.ஜ.க அரசு கொள்ளைக்காரர்களுக்கும், கோட்-சூட் போட்டவர்களுக்குமானது” என காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

“மோடி அரசு விவசாயிகளுக்கானது அல்ல; கொள்ளைக்காரர்களுக்கும், சூட்-பூட் போட்டவர்களுக்குமானது”: ராகுல் சாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

“பா.ஜ.க அரசு அவர்களது நண்பர்களின் வருவாயைத்தான் நான்கு மடங்காக்குகிறது. விவசாயிகளின் வருவாயை பாதியாகக் குறைக்கிறது” என காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

பா.ஜ.க அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லியில் ஏழாவது நாளாகப் போராடி வருகின்றனர். விவசாயிகளின் கோரிக்கையை காதுகொடுத்துக் கேட்காத பா.ஜ.க அரசின் போலிஸார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டு வீசியும், தண்ணீரை பீய்ச்சியடித்தும் கூட்டத்தை கலைக்க முயன்றனர்.

தொடர் போராட்டங்களுக்குப் பிறகு சில விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லாததால் போராட்டம் தொடர்ந்து வருகிறது. நாளையும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளைய பேச்சுவார்த்தையில் வேளாண் சட்டங்களை முழுமையாக திரும்பப் பெற மத்திய அரசு முன்வரவில்லை என்றால் டெல்லியின் அனைத்து எல்லைகளையும் முற்றுகையிட்டு போராட்டத்தை தீவிரப்படுத்தப் போவதாக விவசாய சங்க கூட்டமைப்பு முடிவு செய்திருக்கிறது.

இந்நிலையில், விவசாயிகள் போராட்டத்தின்போது போலிஸார் தடியடி நடத்தியது தொடர்பான வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ள காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி பதிவிட்டுள்ளதாவது :

“வேளாண் சட்டத்தால் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என்று பா.ஜ.க அரசு கூறுகிறது. ஆனால், அவர்களது நண்பர்களின் வருவாயைத்தான் நான்கு மடங்காக்குகிறார்கள். விவசாயிகளின் வருவாயை பாதியாகக் குறைக்கிறார்கள். இந்த அரசு, கொள்ளைக்காரர்களுக்கும், சூட்-பூட் போட்டவர்களுக்குமானது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு ட்வீட்டில், “மோடி அரசே, கொடுங்கோண்மை ஆட்சியை நிறுத்துங்கள், உரையாடலை தொடங்குங்கள், விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களையும் ஒழியுங்கள்” என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

banner

Related Stories

Related Stories