இந்தியா

“மருத்துவப் படிப்பில் இந்தாண்டே இடஒதுக்கீட்டை உறுதி செய்க” - பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

அகில இந்தியத் தொகுப்புக்கு மாநிலங்களால் வழங்கப்படும் மருத்துவக் கல்விக்கான இடங்களில், ஓபிசி இடஒதுக்கீட்டினை நடப்பு ஆண்டே உறுதி செய்ய வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு தி.மு.க தலைவர் கடிதம் எழுதியுள்ளார்.

“மருத்துவப் படிப்பில் இந்தாண்டே இடஒதுக்கீட்டை உறுதி செய்க” - பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!
ASHWIN_KUMAR
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

அகில இந்தியத் தொகுப்புக்கு மாநிலங்களால் வழங்கப்படும் மருத்துவக் கல்விக்கான இடங்களில், இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டினை நடப்பு ஆண்டே உறுதி செய்ய வலியுறுத்தி இன்று (26.10.2020) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தின் தமிழாக்கம் வருமாறு:

“அகில இந்தியத் தொகுப்பிற்கு மாநிலங்களால் வழங்கப்பட்ட மருத்துவ இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டினை நடைமுறைப் படுத்துவது தொடர்பாக மாண்புமிகு உச்சநீதிமன்றம் இன்று வழங்கியுள்ள தீர்ப்பின் அடிப்படையில் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். மாநிலங்களின் இடஒதுக்கீட்டுக் கொள்கைகளின் அடிப்படையில் இதரபிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்கள், இந்தக் கல்வியாண்டில் பயன்பெற முடியாத ஒரு நிலை ஏற்பட்டிருக்கிறது என்பது உண்மையிலேயே கவலையுறச் செய்கிறது.

மேற்படி, இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படாததால், ஆயிரக்கணக்கான மாணவர்கள், மருத்துவத் துறையில் மேல்படிப்புப் படிக்கும் வாய்ப்பினை இழக்கின்றனர். எனவே, தாங்கள் உடனடியாகத் தலையிட்டு, வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் மருத்துவக் கனவில் இருப்போர் இந்தக் கல்வியாண்டிலேயே மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான வாய்ப்புக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்த வழக்கில், அகில இந்திய தொகுப்பில் உள்ள இடங்களில் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் இடஒதுக்கீட்டைப் பெறுவதற்கான உரிமையை மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்ததுடன், மாநில அரசுகளின் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து ஆய்வு செய்யுமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

இதற்கான குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், நடப்பு கல்வியாண்டில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படாதது என்பது உண்மையிலேயே ஏமாற்றமளிக்கிறது. அதனால், ஆயிரக்கணக்கான இதரபிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மற்றும் மருத்துவம் பயில விரும்புவோரின் கனவுகள் இந்த ஆண்டு நிறைவேறாது என்பது வருத்தமளிக்கிறது.

“மருத்துவப் படிப்பில் இந்தாண்டே இடஒதுக்கீட்டை உறுதி செய்க” - பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

குறிப்பாக, முன் எப்பொழுதுமில்லாத பேரிடர் காலத்தில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சார்ந்த மாணவர்கள் மருத்துவம் கற்பதற்கும், நாட்டுக்கு சேவை செய்யவும் வாய்ப்பளிக்கப்படவில்லையெனில் அது நம் நாட்டுக்கு கற்பனை செய்து பார்த்திட முடியாத அளவிலான இழப்பாகும்.

நமது நாட்டின் அரசியலானது சமூகநீதிக் கொள்கைகளினால் அமைக்கப்பட்டது; எப்பொழுதுமே அரசியல் கட்சிகள் கருத்தியல்ரீதியான வேறுபாடுகளைத் தாண்டி சமூகத்தின் தாழ்த்தப்பட்ட மற்றும் விளிம்புநிலை மக்களின் முன்னேற்றத்திற்காக ஒன்றிணைந்து செயலாற்றியிருக்கின்றன.

எனவே, இந்த ஆண்டே இடஒதுக்கீட்டை அமல்படுத்திடும் வகையில் தாங்கள் உடனடியாகத் தலையிட்டு, சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் இதர பிற்படுத்தப்பட்ட சமூக மாணவர்களின் நலனுக்காக, மாநிலங்கள் வழங்கும் இடங்களில் இடஒதுக்கீட்டை கமிட்டி உறுதி செய்திடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.”

இவ்வாறு அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

banner

Related Stories

Related Stories