இந்தியா

விவசாயிகளையே விற்கத் திட்டமிடும் பா.ஜ.க அரசு - வேளாண் மசோதாக்களால் விளையப்போவது என்ன?

ஒழுங்குமுறை விற்பனைக் கூடமும் குறைந்தபட்ச ஆதார விலையும் இன்ன பிற வசதிகளும் முற்றிலும் ஒழித்துக்கட்டப்பட உள்ளன.

விவசாயிகளையே விற்கத் திட்டமிடும் பா.ஜ.க அரசு - வேளாண் மசோதாக்களால் விளையப்போவது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விவசாயிகளை வாழவைக்கப் போவதாகச் சொல்லிக்கொண்டு வந்திருக்கும் மூன்று சட்டங்களையும் நாம் ஏன் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான சட்டம் என்று சொல்கிறோம்…

தற்போது விவசாயிகளின் நலன் காக்க ஒரு சில ஏற்பாடுகள் உள்ளன. குறைந்த பட்ச ஆதார விலை என்பது அதில் ஒன்று.

விவசாயிகள் தங்களின் உற்பத்திப் பொருளுக்கு அரசு குறைந்த பட்ச ஆதார விலை என்று ஒரு விலையை நிர்ணயிக்கிறது. இந்த விலை விவசாயிகளுக்கு குறைந்தபட்ச உத்தரவாதத்தை அளிக்கிறது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகள், விளைபொருட்கள் வணிகம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) மசோதாவின்படி (Farmers Produce Trade and Commerce (Promotion and Facilitation) Bill) குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயம் என்ற நடைமுறையே முற்றிலுமாக வழக்கொழிந்து போகும்.

குறைந்தபட்ச ஆதார விலை என்பதை நிர்ணயித்து, அதன் அடிப்படையில் விவசாயப் பொருட்களைக் கொள்முதல் செய்வதற்கென்று மாவட்டந்தோறும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் உள்ளன. இந்த ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் விவசாயிகளிடம் வேளாண் பொருட்களைக் கொள்முதல் செய்கின்றன. பிறகு அதை வியாபாரிகளுக்கு விற்பனை செய்கிறார்கள்.

விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்காத பட்சத்தில், விலை உயரும் வரையில் விவசாயப் பொருட்களைப் பாதுகாப்பதற்காக குடோன் வசதிகளையும் விவசாயிகளுக்குச் செய்து வைத்திருக்கிறார்கள்.

தற்போது புதிய மசோதா விவசாயிகள் நேரடியாக இந்த ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களைத் தவிர்த்து விட்டு யாருக்கு வேண்டுமானாலும் விற்பனை செய்து கொள்ளலாம் என்று சொல்கிறது. இதன் மூலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடமும் குறைந்தபட்ச ஆதார விலையும் இன்ன பிற வசதிகளும் முற்றிலும் ஒழித்துக்கட்டப்பட உள்ளன.

இன்னொரு விஷயம். ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் பொருட்களை வாங்கும் வியாபாரிகள் உரிமம் பெற வேண்டும். இதன் மூலம் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் இடையிலான பரிவர்த்தனை கண்காணிப்புக்கு உட்பட்டு இருக்கும். இது தவிர வியாபாரிகள் மூலம் தமிழக அரசுக்கு வரி வருவாயும் உண்டு. புதிய மசோதா மூலம் இது அத்தனையும் துடைத்தெறியப்படும்.

குறைந்தபட்ச ஆதார விலை இல்லை என்றால் என்ன செய்வது என்ற கேள்விக்கு மத்திய அரசு மற்றொரு மசோதாவைப் பதிலாக வைத்திருக்கிறது. அந்த மசோதாவின் பெயர் விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு) மசோதா (Farmers (Empowerment and Protection) Agreement of Price Assurance and Farm Services)

இந்த மசோதாவின் படி விவசாயம் சார்ந்த தொழில் நிறுவனங்கள் மற்றும் மிகப்பெரிய சில்லறை விற்பனையாளர்களுடன் முன்கூட்டியே விலையை நிர்ணயித்து விவசாயிகள் ஒப்பந்தம் போட்டுக் கொள்ளலாம் என்கிறார்கள்.

இதன் மூலம் விவசாயிகள் தான் விரும்பிய விலையை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்பதைப் போன்ற தோற்றத்தை இந்த மசோதா காட்டுகிறது. உண்மையில் விவசாயம் சார்ந்த தொழில் நிறுவனங்கள் அல்லது மெகா சில்லறை வியாபாரிகள் எனப்படும் கார்ப்பரேட் நிறுவனங்கள் என்ன சொல்கிறதோ அதுதான் விலையாக இருக்கப் போகிறது.

இதில் விவசாயிகளே விலையை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று சொல்வதெல்லாம் பம்மாத்து.

உண்மையில் விவசாயம் சார்ந்த தொழிலில் மிகப்பெரிய மூலதனத்துடன் பன்னாட்டுக் கம்பெனிகள் இறங்குவதற்கு இந்த மசோதாக்கள் உதவுகின்றன. யாருக்கு வேண்டுமானாலும் விற்கலாம் என்பதற்குப் பின்னால் உள்ள உண்மை, பகாசுரக் கம்பெனிகளுக்கு நீங்கள் விற்கலாம் என்பதுதான்.

விவசாயிகளையே விற்கத் திட்டமிடும் பா.ஜ.க அரசு - வேளாண் மசோதாக்களால் விளையப்போவது என்ன?

மூன்றாவது மசோதா கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு இன்னொரு பெரிய உதவியைச் செய்கிறது.

அந்த மசோதாவின் பெயர் அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா 2020 (Essential Commodities (Amendment) Bill)

நீங்கள் பனியனையோ சட்டையையோ செருப்பையோ சிகரெட்டையோ எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் ஸ்டாக் வைத்து எப்போது வேண்டுமானாலும் விற்பனை செய்யலாம். பொருட்களைப் பதுக்கி வைத்து தேவையைப் பெருக்கி, அதன் மூலம் விலையைக் கூட்டி அதிக லாபம் பார்க்கலாம். ஆனால் அத்தியாவசியப் பொருட்களில் இந்த லாப விளையாட்டு கூடாது என்பதற்காக சில கட்டுப்பாடுகள் உள்ளன.

தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு போன்றவை அந்த அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் வருகின்றன. இந்தப் பொருட்களை இவ்வளவுதான் ஒருவர் ஸ்டாக் வைத்துக்கொள்ள முடியும் என்று வரையறை உள்ளது.

தற்போது வந்துள்ள திருத்த மசோதா இந்தப் பொருட்களை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டது. ஸ்டாக் வைக்கும் வரையறையையும் தளர்த்திவிட்டது. அழுகும் பொருளுக்கு சராசரி விலையை விட 50 சதவீதத்திற்கு மேல் விலை ஏறினால் மட்டும்தான் அந்த ஸ்டாக் வரையறை வருமாம். அழுகாத பொருளுக்கு 100 சதவீதம் வரையில் விலை ஏறினால் மட்டும்தான் ஸ்டாக் வரையறை வருமாம். இந்த அளவுகோலே ஒரு மாய அளவுகோல்.

அத்தியாவசியப் பொருள் என்று எதுவும் கிடையாது. எந்த வரையறையும் இல்லை. யாருக்கெல்லாம் எதை எல்லாம் ஸ்டாக் வைத்துக் கொள்ள பெரும் முதலீடு இருக்கிறதோ அவர்கள் எல்லாம் வைத்துக் கொள்ளலாம் என்பதுதான் அவர்கள் சொல்ல வருவது.

இதன் மூலம் அன்னிய நேரடி முதலீட்டையும் ஈர்க்க முடியும் என்று பெருமை பொங்கச் சொல்கிறார்கள்.

மொத்தத்தில் உள்நாட்டுக் கார்ப்பரேட்டுகளும் வெளிநாட்டுக் கார்ப்பரேட்டுகளும் சேர்ந்து விவசாய விளைபொருட்களை மட்டுமல்ல விவசாய நிலங்களையும் விவசாயிகளையுமே விலைக்கு வாங்கவே இந்த மூன்று மசோதாக்களும் கொண்டு வரப்பட்டுள்ளன.

banner

Related Stories

Related Stories