இந்தியா

“FMGE தேர்வு எழுதுவதற்கான மையங்கள் ஒதுக்கியதில் சிக்கல்” - மத்திய அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

FMGE தேர்வு எழுதும் தமிழகத்தைச் சேர்ந்த வெளிநாட்டு மருத்துவ மாணவர்களின் கோரிக்கையை எடுத்துரைக்கும் வகையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தி.மு.க தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், இன்று வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரி மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களுடன் காணொலிக் காட்சி மூலமாகக் கலந்துரையாடினார்.

அப்போது, அம்மாணவர்கள் இந்தியாவில் மருத்துவப் பயிற்சி மேற்கொள்வதற்கு நடத்தப்படும் FMGE தேர்வு, இந்த ஆண்டு வரும் 31ஆம் தேதி நடைபெறுவதாகவும், தேர்வு மையங்கள் வெவ்வேறு மாநிலங்களில் இருப்பதால், தாங்கள் தேர்வு எழுதச் செல்வதில் நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டனர். அந்தத் தேர்வை தங்களது வசதிக்கேற்ப நடத்த உதவிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர்.

இதனைக் கேட்ட தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ஏற்கனவே ஆகஸ்ட் 13 அன்று கழக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி., FMGE தேர்வு எழுதும் மாணவர்களின் நிலைகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதியிருப்பதாக அவர்களிடம் கூறினார்.

அத்துடன், அவர்களது கோரிக்கையை அடனடியாக ஏற்று, இன்று (18.08.2020) கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், FMGE தேர்வு எழுதும் தமிழகத்தைச் சேர்ந்த வெளிநாட்டு மருத்துவ மாணவர்களின் கோரிக்கையை எடுத்துரைக்கும் வகையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அவர்களுக்கு தாமே ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், ஆகஸ்ட் 31-ம் தேதி நடைபெற உள்ள வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகளுக்கான FMGE தேர்வு எழுதுவதற்கான மையங்கள் வெவ்வேறு மாநிலங்களில் ஒதுக்கப்பட்டுள்ளதால், கொரோனா ஊரடங்குச் சூழலில் மாணவர்கள் செல்வதில் பல சிரமங்கள் இருப்பதைச் சுட்டிக்காட்டி உள்ளார்.

எனவே, FMGE தேர்வு எழுதும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு, தமிழ்நாட்டுக்குள்ளேயே தேர்வு மையங்களை ஒதுக்குமாறு அகில இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அக்கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், மாணவர்கள் இத்தேர்வுக்கு தயாராவதற்கு உதவும் வகையில், ஏற்கனவே நடைபெற்ற தேர்வுகளின் வினா-விடைத் தொகுப்புகளை வெளியிட தேசியத் தேர்வு வாரியத்திற்கு உத்தரவிட வேண்டும் எனவும் அக்கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எழுதிய இந்தக் கடிதத்தை, தி.மு.க நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி., மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அவர்களை டெல்லியில் நேரில் சந்தித்து அவரிடம் வழங்கி உள்ளார்.

banner

Related Stories

Related Stories