இந்தியா

“நான் இந்தியை மொழிபெயர்த்ததாகக் கூறுவது பொய்; முடிந்தால் நிரூபியுங்கள்” - கனிமொழி பதிலடி!

“நான் இதுவரை யாருக்கும் மொழிபெயர்த்தது கிடையாது. ஆங்கிலத்தில் இருந்துகூட தமிழில் மொழிபெயர்த்ததில்லை.” என கனிமொழி எம்.பி பேட்டி.

“நான் இந்தியை மொழிபெயர்த்ததாகக் கூறுவது பொய்; முடிந்தால் நிரூபியுங்கள்” - கனிமொழி பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்த தி.மு.க எம்.பி கனிமொழி இந்தி தெரியாது எனக் கூறியதற்காக “நீங்கள் இந்தியரா?” என அங்கு பணியிலிருந்த சி.ஐ.எஸ்.எஃப் பெண் அதிகாரி கேட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கனிமொழி எம்.பி, “இந்தியராக இருப்பது என்பது இந்தி மொழி தெரிந்திருப்பதற்கு சமம் என்கிற நிலை எப்போதிலிருந்து உள்ளது என்பதை அறிய விரும்புகிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினரிடம் இந்தி ஆதிக்க எண்ணத்தை வெளிப்படுத்திய அதிகாரிக்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்தனர். தி.மு.க உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரின் கடுமையான எதிர்ப்புக்கு பின்னர் விமான நிலையங்களில் உள்ளூர் மொழி தெரிந்தவர்களையே அதிகளவில் பணியமர்த்த மத்திய தொழில் பாதுகாப்பு படை முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே, கனிமொழிக்கு இந்தி தெரியும் என்றும், அவர் 1989ல் முன்னாள் துணைப் பிரதமர் தேவிலாலின் பேச்சை மொழிபெயர்த்திருக்கிறார் என்றும் சமூக வலைதளங்களில் பா.ஜ.கவின் எச்.ராஜா உள்ளிட்ட பலர் பொய்யான தகவலைப் பரப்பி வந்தனர்.

இந்நிலையில் இன்று டெல்லியிலிருந்து சென்னை திரும்பிய கனிமொழி எம்.பி, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் முன்னாள் துணை பிரதமர் தேவிலாலின் உரையை இந்தியில் இருந்து தமிழில் மொழிபெயர்த்ததாக பரவும் தகவல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த கனிமொழி எம்.பி, “நான் இதுவரை யாருக்கும் மொழிபெயர்த்தது கிடையாது. ஆங்கிலத்தில் இருந்துகூட தமிழில் மொழிபெயர்த்ததில்லை.

இந்தி தெரிந்தால்தான் மொழிபெயர்க்க முடியும். நான் படித்த பள்ளியில் இரண்டு மொழிதான்: ஒன்று தமிழ், மற்றொன்று ஆங்கிலம். இத்தனை ஆண்டுகளாக டெல்லியில் இருந்தபோதும் நான் இந்தி கற்றுக்கொள்ளவில்லை. அப்படி நான்தான் மொழிபெயர்த்தேன் என்றால் அதை நிரூபிக்கட்டும்” என்று தெரிவித்தார்.

“நான் இந்தியை மொழிபெயர்த்ததாகக் கூறுவது பொய்; முடிந்தால் நிரூபியுங்கள்” - கனிமொழி பதிலடி!

மேலும், “எனக்கு இந்தி தெரியுமா, தெரியாதா என்பதைத் தாண்டி ஒருவருக்கு இந்தி தெரிந்தால்தான் அவர்கள் இந்தியர்களாக இருக்கமுடியும் என்று சொல்வது எவ்வளவு பெரிய அவமானம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அதைப் புரிந்துகொள்ளாமல், எனக்கு இந்தி தெரியுமா, நான் மொழிபெயர்த்தேனா? என்பது விவாதமில்லை.

இந்தி தெரிந்தால்தான், ஒரு மதத்தில் இருந்தால்தான், ஒரு வாழ்க்கை முறையை பின்பற்றினால்தான், ஒரு கருத்தியலை பின்பற்றினால்தான் ஏற்றுக்கொள்ள முடியும் என்பதைத்தான் கண்டிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து, “நமது உணர்வுகளை புரிந்துகொண்டு சி.ஐ.எஸ்.எஃப் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததற்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற பிரச்சனைகள் அரசு அலுவலகங்கள், குறிப்பாக மத்திய அரசு அலுவலகங்களில் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

எல்லா இடங்களிலும் இதுபோன்ற மனப்பான்மைகளை சரி செய்தால் சாதாரண மனிதர்களுக்கும் அவர்களும் இந்தியர்கள் என்ற உணர்வை நிச்சயமாக ஏற்படுத்தும். மாநிலத்தின் உரிமைகளையும் ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள மொழிக்கும் இந்த நாட்டில் இடம் இருக்கிறது என்ற நம்பிக்கை தரும்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories