இந்தியா

ஆந்திராவில் ஒரு சாத்தான்குளம் சம்பவம் : பட்டியலின இளைஞரை தாக்கி மொட்டையடித்த போலிஸார்!

அரசியல் கட்சி பிரமுகரின் மணல் லாரியை மாற்றுப்பாதையில் திருப்பியனுப்பியதற்காக பட்டியலினத்தைச் சேர்ந்த இளைஞரை போலிஸார் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா ஊரடங்கு தொடங்கிய நாள் முதல், மாநிலத்தில் காவல்துறையினரின் அதிகார அத்துமீறல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. அண்மையில் சாத்தான்குளத்தில் தந்தை மகனான வியாபாரிகள் இருவர் போலிஸாரால் லாக்-அப்பில் வைத்து அடித்தே கொல்லப்பட்ட சம்பவம் உலகெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கை தற்போது சி.பி.சி.ஐ.டி-யில் இருந்து சி.பி.ஐ விசாரித்து வருகிறது. சாத்தான்குளம் கொலை வழக்கின் தடமே இன்னும் மறையாதபோது ஆந்திர மாநிலத்தில் காவல்துறையினரால் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவின் கோதாவரி மாவட்டத்தில் வேதுல்லப்பள்ளி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் வரபிரசாத். அந்த இளைஞர் வசிக்கும் பகுதியில் மரணம் ஒன்று நிகழ்ந்ததால் அவ்வழியே வரும் வாகனங்களை திருப்பியனுப்பும் பணியில் வரபிரசாத்தும் அவரது நண்பர்களும் ஈடுபட்டிருக்கிறார்கள்.

அப்போது ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரமுகருக்குச் சொந்தமான மணல் லாரியும் சென்றிருக்கிறது. அதனையும் வரபிரசாத் தடுத்தி நிறுத்தி மாற்றுப்பாதையில் செல்லுமாறு கூறியிருக்கிறார். இது தொடர்பாக தகவலறிந்த அந்த கட்சி பிரமுகர் காரை வைத்து வரபிரசாத் மீது ஏற்றியதாகக் கூறப்படுகிறது.

ஆந்திராவில் ஒரு சாத்தான்குளம் சம்பவம் : பட்டியலின இளைஞரை தாக்கி மொட்டையடித்த போலிஸார்!

அதன்பிறகு இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இந்தச் சம்பவத்தில் அப்பகுதி சட்டமன்ற உறுப்பினருக்கும் தொடர்பிருந்துள்ளது. அடுத்த நாளே, வரபிரசாத் தொடர்பாக எம்.எல்.ஏ அப்பகுதி காவல்நிலைய உதவி ஆய்வாளரிடம் பேசியிருக்கிறார். இதனையடுத்து, மறுநாள் வரபிரசாத்தையும் அவரது இரு நண்பர்களையும் காவலர்கள் வந்து விசாரணை என அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

வாக்குவாதம் செய்ததற்காக காவல்நிலையத்தில் வைத்து வரபிரசாத்தை சரமாரியாக காவல் ஆய்வாளர்கள் இருவர் தாக்கியிருக்கிறார்கள். மேலும் அந்த இளைஞரின் தலையை மொட்டையடித்து, மீசையை மழித்தும் இருக்கிறார்கள். பட்டியலினத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு காவல்நிலையத்தில் நேர்ந்த கொடூரத்துக்கு மக்கள் நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

கொரோனா பரவும் நேரத்தில் இந்தச் சம்பவம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதனையடுத்து காவல்துறை டி.ஜி.பி மோகன் ராவ், இளைஞரை தாக்கிய காவல்துறையினர் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்துக்கு ஆந்திராவின் எதிர்க்கட்சியான தெலுங்குதேசம் கட்சியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு கண்டனம் தெரிவித்துள்ளார். அதிகார அத்துமீறலில் ஈடுபட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

banner

Related Stories

Related Stories