இந்தியா

“பயணிகள் ரயிலை தனியார் மயமாக்கினால் மக்களைத் திரட்டி போராடுவேன்” - காங்கிரஸ் எம்.பி எச்சரிக்கை!

மத்திய அரசு சாமானிய மக்கள் பயணிக்கும் ரயில்களை தனியார்மயமாக்கும் முடிவை கைவிட வேண்டி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் ப.மாணிக்கம் தாகூர் M.P வலியுறுத்தல்.

“பயணிகள் ரயிலை தனியார் மயமாக்கினால் மக்களைத் திரட்டி போராடுவேன்” - காங்கிரஸ் எம்.பி எச்சரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதிக்குள் வரும் எந்த ஒரு தனியார்மயமாக்கப்பட்ட ரயில்களையும் அனுமதிக்க மாட்டோம். மேலும் திருப்பரங்குன்றம், விருதுநகர் சாத்தூர் ஆகிய ரயில் நிலையங்களில் தனியார் ரயில்கள் நிறுத்தினால் அந்தந்த ரயில் நிலையத்தில் மக்களை திரட்டி ரயில் மறியலில் ஈடுபடுவேன் என காங்கிரஸ் எம்.பி. ப.மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது :

“கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இந்திய ரயில்வேயில் ஒரு அறிவிப்பு வந்தது. அதில் 109 வழித்தடங்களில் ரயில்களை இயக்க தனியாருக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த வழித்தடங்கள் அனைத்தும் லாபத்தில் இயங்கக்கூடிய வழித்தடங்கள் ஆகும். இதனை அரசாங்கம் இயக்காமல் தனியாருக்கு விடுவதால் இனி வேலைவாய்ப்பு இல்லாமல் போகும் மற்றும் மக்களுக்கு கட்டணச் சுமை கூடுதலாக அமையும். ரயில்வே தனியார்மயம் ஆகாது என்று கூறிக்கொண்டே தனியாருக்கு விற்க முயற்சி செய்வது கண்டிக்கக்கூடியது.

இதேபோல கடந்த மாதம் வெளிவந்த ஒரு அறிக்கையில், லாபத்தில் இயங்காத ரயில்களையும், வழித்தடங்களையும் மூடப்பட போவதாக அறிவித்தது. மூடாமல் அதற்கு பதில் இந்த ரயில்களையும், வழித்தடங்களையும் தனியார் இயக்க அனுமதிக்கலாமே! அதை விடுத்து லாபத்தில் இயங்கும் வழித்தடங்களான சென்னை- கோயம்புத்தூர், சென்னை- மதுரை, சென்னை -நெல்லை, சென்னை -குமரி, சென்னை-திருச்சி, சென்னை-டெல்லி போன்ற வழித்தடங்களில் தனியாருக்கு ரயில்களை இயக்க அனுமதிக்கக்கூடாது. அவ்வாறு அனுமதி வழங்கினால், தனியார் வைத்த கட்டணம்தான் மக்கள் செலுத்த நேரிடும். இது மக்களின் மேல் கூடுதல் சுமையாக தான் சேரும்.

“பயணிகள் ரயிலை தனியார் மயமாக்கினால் மக்களைத் திரட்டி போராடுவேன்” - காங்கிரஸ் எம்.பி எச்சரிக்கை!

உதாரணமாக இப்பொழுது இயங்கிக் கொண்டிருக்கும் தனியார் ரயில் ஆன டெல்லி - லக்னோ கட்டணம் இந்திய ரயில்வே கட்டணத்தைவிட அதிகம். தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னையிலிருந்து பிற மாவட்டங்களுக்கு எத்தனை ரயில்கள் இயங்கினாலும் மக்கள் கண்டிப்பாக பயணம் மேற்கொள்வார்கள். அதனைப் புரிந்துகொண்டு ரயில்வே ரயில்களை இயக்கினால், ரயில்வேக்கு நல்ல வருவாய் கிட்டும்.

மேலும் ரயில்வே துறையில் ஏற்கனவே உள்ள காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்யாமல் இருக்கும்போது, இப்போது உள்ள பணியிடங்களை திரும்ப ஒப்படைப்பது (Surrender) என்ற முடிவினை எவ்வாறு எடுத்துக் கொள்வது? ஒருபுறம் தனியார்மயம் இல்லை என்று சொல்லிக்கொண்டே தனியார்மயமாக்குவதையும், வேலைவாய்ப்பை உருவாக்குவோம் என்று வேலையில் இருக்கும் பணியாளர்களை வீட்டிற்கு அனுப்ப திட்டமிடுவதையும் எவ்வாறு புரிந்துகொள்வது?

எனவே லாபத்தில் இயங்கக்கூடிய வழித்தடங்கள் மற்றும் ரயில்வே துறையில் தனியார்மயத்தை கைவிட வேண்டும் என்றும், காலி பணியிடங்களை பூர்த்தி செய்து ரயில்வே ஊழியர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறோம். தெற்கு ரயில்வே கீழ்க்கண்ட 24 ரயில்களை தனியார் மயமாக்க ரயில்வே அமைச்சகம் அனுமதியளித்துள்ளது. இதற்கு தலைவர் ராகுல்காந்தி கடும் எதிர்ப்பை தெரிவித்து இருக்கிறார். நாடாளுமன்றத்தில் இதை எதிர்ப்போம். இதைப்போல திருப்பரங்குன்றம், விருதுநகர், சாத்தூர் வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் சாமானிய மக்களின் ரயில் போக்குவரத்து சேவை ஆகும். இந்த ரயில்களை தனியாருக்கு தாரை வார்ப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. இதனால் பொதுமக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படும்.

எனது விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதிக்குள் வரும் எந்த ஒரு தனியார் மயமாக்கப்பட்ட ரயில்களையும் அனுமதிக்க மாட்டோம். மேலும் திருப்பரங்குன்றம், விருதுநகர், சாத்தூர் ஆகிய ரயில் நிலையங்களில் தனியார் ரயில்கள் நிறுத்தினால் அந்தந்த ரயில் நிலையத்தில் மக்களை திரட்டி ரயில் மறியலில் ஈடுபடுவேன்.

மத்திய அரசு ரயில்களை தனியார் மயமாக்கும் இந்த முடிவை உடனடியாக நிறுத்த வேண்டும். எங்கள் பகுதியில் அதிக லாபம் ஈட்டுவதற்கு அம்பானி, அதானி போன்ற பெரும் பணக்காரர்களுக்கு தாரை வார்ப்பதை மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன். தனியாரிடம் திருப்பரங்குன்றம், விருதுநகர் சாத்தூர் பகுதியில் வரும் ரயில்களை அனுமதிப்பதை உடனடியாக கைவிட வேண்டும்.” என ப.மாணிக்கம் தாகூர் எம்.பி குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories