இந்தியா

“சீனா ஊடுருவல் இல்லை என்றால், 20 வீரர்கள் உயிரிழந்தது ஏன்” : பிரதமர் மோடிக்கு ப.சிதம்பரம் கேள்வி!

பிரதமர் மோடி சொல்வது போல, எல்லையில் ஊடுருவல் இல்லை என்றால் மே 5,6 ம் தேதி நடந்தது என்ன என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

லடாக் எல்லையில் கடந்த திங்கட்கிழமை இந்திய- சீன ராணுவத்துக்கு இடையே நடந்த கடும் மோதலில், இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் பல்வேறு சந்தேகங்களை கிளப்பின.

இந்நிலையில், லடாக் நிலவரம் குறித்து எதிர்க்கட்சிகளுக்கு விளக்கும் வகையில் பிரதமர் மோடி நேற்று மாலை அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினார். அந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில் , “சீனா வீரர்கள் எல்லையில் ஊடுருவவில்லை. அவர்களால் எந்த ஒரு இந்திய முகாமும் கைப்பற்றப்படவில்லை. 20 வீரர்கள் உயிர்த் தியாகம் செய்துள்ளனர். நமது பாதுகாப்பு படைகள் நமது எல்லையை பாதுகாக்கும் முழு திறனுடன் உள்ளனர் என்பதை நான் உறுதி அளித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.

பிரதமர் மோடி சொல்வது போல எல்லையில் எந்த மோதலும் இல்லாமல் நமது தீரம்மிக்க வீரர்கள் எப்படி இறந்தனர்? பிறகு எதற்கு இந்த எதிர்க்கட்சி கூட்டம் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் பேசியது தொடர்பாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ள ப.சிதம்பரம், “சீன துருப்புகள் எல்லையத் தாண்டி இந்திய நிலப்பகுதியில் நுழையவில்லை என்று பிரதமர் திரு மோடி கூறியுள்ளார். அப்படியென்றால், எதற்காக மோதல்? எதற்காக சண்டை? எதற்காக ராணுவ தளபதிகள் இடையே பேச்சுவார்த்தை? எதற்காக வெளியுறவுத் துறை அமைச்சரின் அறிக்கை?

இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டார்களே, அது எங்கே நடந்தது? இந்திய நிலப்பகுதியிலா அல்லது சீன நிலப்பகுதியிலா?ஊடுருவல் இல்லை என்றால் மே 5,6 ம் தேதிகளில் நடந்த பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது? ஜூன் 16, 17 ம் தேதிகளில் ஏன் இருநாட்டு துருப்புக்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டது ஏன்? 20 வீரர்கள் உயிரிழந்தது ஏன்” என கேள்வி எழுப்பியுள்ளார்.

banner

Related Stories

Related Stories