இந்தியா

“வீரர்களை நிராயுதபாணியாக எல்லைக்கு அனுப்பியது ஏன்?” - கேள்விகளை அடுக்கும் ராகுல்! #IndiaChinaFaceOff

இந்திய வீரர்கள் உயிர் துறந்து இரண்டு நாட்கள் கழித்து இரங்கல் தெரிவிப்பது ஏன் என ராஜ்நாத் சிங்கிற்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

லடாக் எல்லையில் கல்வான் பகுதியில் கடந்த 15ம் தேதியன்று இந்திய - சீன இராணுவ வீரர்களுக்கு இடையே தாக்குதல் நடைபெற்றது. இந்த சண்டையின் போது இந்திய தரப்பில் இருந்து 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 35 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆனால், இது தொடர்பாக சீன அரசு எவ்வித தகவலையும் கொடுக்கவில்லை.

கொரோனா பேரிடரால் நாட்டு மக்கள் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வரும் வேளையில் இந்திய வீரர்களின் மரணம் மேலும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், அரசியல் கட்சியினரிடையே இந்த விவகாரம் பெரும் விமர்சனத்துக்கும் உள்ளாகியுள்ளது.

அவ்வகையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி “பிரதமர் ஏன் மௌனமாக இருக்கிறார்? அவர் ஏன் மறைக்கிறார்? போதும். என்ன நடந்தது என்பது நமக்கு தெரிய வேண்டும். நம்முடைய வீரர்களை கொல்வதற்கு சீனாவுக்கு எவ்வளவு தைரியம்? நம்முடைய நிலங்களை ஆக்கிரமிக்க அவர்களுக்கு என்ன தைரியம்?” என நேற்று (ஜூன் 17) கேள்விக்கணைகளை தொடுத்திருந்தார்.

அதையடுத்து, பாதுகாப்புத் துறை அமைச்சராக உள்ள ராஜ்நாத் சிங், இந்திய வீரர்களின் மறைவுக்கு இரண்டு நாட்கள் கழித்து இரங்கல் தெரிவித்திருந்தார். ட்விட்டரில் பதிவிட்டிருந்த அவரது இரங்கல் பதிவில் ஒரு இடத்தில் கூட சீனாவை விமர்சித்தோ, அதன் செயல்பாடுகளை கண்டிக்கும் விதமாக ஒரு வார்த்தை கூட இடம் பெறாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், ராஜ்நாத் சிங்கின் இரங்கல் ட்விட்டர் பதிவை குறிப்பிட்டு 5 முக்கியமான கேள்விகளை முன்வைத்து பதிவிட்டுள்ளார் ராகுல் காந்தி. அதில், இந்திய வீரர்களின் மறைவு உங்களுக்கு வலி மிகுந்ததாக இருப்பின், சீனாவை குறிப்பிடாதது ஏன்? அதன் மூலம் இந்திய இராணுவத்தை ஏன் அவமதிக்கிறீர்கள்?

இராணுவ வீரர்களின் உயிர் தியாகத்துக்கு இரண்டு நாட்கள் கழித்து இரங்கல் தெரிவித்தது ஏன்? வீரர்கள் உயிர்த் தியாகம் செய்த நேரத்தில் பேரணியில் பங்கேற்றது ஏன்? எங்கேயோ ஒளிந்திருந்து விட்டு ஊடகங்கள் மூலம் இராணுவத்தின் மீது பழி போட வைத்தது ஏன்? அரசை விமர்சிப்பதற்கு பதிலாக விலை கொடுத்து வாங்கிய ஊடகங்கள் இராணுவத்தை குறை கூறுவது ஏன்? என மோடி அரசுக்கும், அதன் அமைச்சகத்தில் உள்ள பாதுகாப்புத்துறை அமைச்சருக்கும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுமட்டுமல்லாமல், முன்னாள் இராணுவ வீரரின் பேட்டியை பகிர்ந்த ராகுல் காந்தி, லடாக் எல்லைக்கு நிராயுதபாணியாக இராணுவ வீரர்களை அனுப்பியது ஏன்? நிராயுதபாணியாக இருந்த பாதுகாப்பு வீரர்களை கொல்வதற்கு சீனாவுக்கு எப்படி துணிச்சல் வந்தது? என்றும் ராகுல் காந்தி தனது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories