கொரோனா ஊரடங்கு தொடங்கிய மார்ச் 25ம் தேதி முதல் இந்தியாவில் வெளி மாநிலங்கள் மற்றும் வெளியூர்களில் பணியில் ஈடுபட்டிருந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், வேலையில்லாமல் அவதியுற்றதால் ஊருக்கு செல்ல முற்பட்டு போக்குவரத்தும் இல்லாததால், வேறு வழியின்றி நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தொலைவுக்கு நடந்தே சென்று சேர்கின்றனர்.
அவ்வாறு செல்கையில், வழிகளில் விபத்தினாலும், வெயிலின் தாக்கத்தினால் ஏற்பட்ட சோர்வாலும், பசியால் வாடியும் இதுவரையில் 200க்கும் அதிகமான தொழிலாளர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். இது தொடர்பான செய்திகளும் நித்தமும் ஊடகங்களில் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இறப்பது குறித்த செய்திகளை கண்ட உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து மே 26 அன்று வழக்காக பதிவு செய்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும், உச்ச நீதிமன்றம் சார்பாக மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் சிங்வி, கபில் சிபல் உள்ளிட்ட பலர் ஆஜராகினர்.
சொந்த ஊருக்கு படையெடுத்து செல்லும் தொழிலாளர்கள் பலர் உணவும், தண்ணீரும் இல்லாமல் உயிரிழப்பதாக வழக்கறிஞர்கள் குற்றஞ்சாட்டியதற்கு மறுப்பு தெரிவித்த துஷார் மேத்தா, அவர்களுக்கு ஏற்கெனவே உடல் ரீதியிலான உபாதைகள் இருந்த காரணத்தாலேயே உயிரிழந்திருக்கிறார்கள் என கூறியுள்ளார்.
மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் இவ்வாறு கூறியிருப்பது சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊரடங்கு அறிவிக்கும் முன்பே புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருந்தால், 70 நாட்களை கடந்துள்ள நிலையில், அவர்கள் நாட்டின் சாலைகளில் படையெடுத்து செல்வது தவிர்க்கப்பட்டதோடு, கொரோனா பரவலை தடுத்திருக்க முடியும் என கருத்து தெரிவித்துள்ளனர். ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் விட்டுவிட்டு, பொறுப்பின்றி இவ்வாறு பதிலளித்திருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.