இந்தியா

“மருத்துவ இடஒதுக்கீட்டில் OBC-க்கு ஒரு இடம்கூட ஒதுக்காமல் பா.ஜ.க அரசு வஞ்சித்து வருகிறது”: வைகோ ஆவேசம்!

மருத்துவப் படிப்புகளில் அநீதி இழைக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டோருக்கு சிறப்பு ஒதுக்கீடு வழங்க வேண்டும் என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

“மருத்துவ இடஒதுக்கீட்டில் OBC-க்கு ஒரு இடம்கூட ஒதுக்காமல் பா.ஜ.க அரசு வஞ்சித்து வருகிறது”: வைகோ ஆவேசம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மருத்துவப் படிப்புகளில் அநீதி இழைக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டோருக்கு சிறப்பு ஒதுக்கீடு வழங்க வேண்டும் என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் ஒரு இடம்கூட ஒதுக்காமல் கடந்த நான்கு ஆண்டுகளாக மத்திய பா.ஜ.க. அரசு திட்டமிட்டே வஞ்சித்து வருகின்றது.

மாநிலங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருக்கும் இளநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்களில் 15 விழுக்காடும், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களில் 50 விழுக்காடும், அகில இந்திய தொகுப்புக்கு மத்திய அரசால் பெறப்படுகிறது. இந்த இடங்களை நிரப்பும்போது பிற்படுத்தப்பட்டோரின் அகில இந்திய ஒதுக்கீடு 27 விழுக்காட்டை ஒதுக்காமல், தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக பா.ஜ.க. அரசு தட்டிப் பறித்து வருகின்றது.

பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு உரிய ஒதுக்கீடு செய்யப்படும்போது, பிற்படுத்தப்பட்டோருக்கு மட்டும் சட்டப்பூர்வ இடஒதுக்கீட்டை பா.ஜ.க. அரசு மறுத்து வருவது ஏன்? இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில், இந்த ஆண்டு இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு புறக்கணிக்கப்பட்டுள்ளது தொடர்பாக அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் ஊழியர் நலச் சங்கக் கூட்டமைப்பு சார்பில், சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சகத்திலும், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

“மருத்துவ இடஒதுக்கீட்டில் OBC-க்கு ஒரு இடம்கூட ஒதுக்காமல் பா.ஜ.க அரசு வஞ்சித்து வருகிறது”: வைகோ ஆவேசம்!

இதனையடுத்து தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் இதுகுறித்து 15 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பி உள்ளது. மருத்துவப் படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர் சேர்க்கை ஏன் நிரப்பப்படவில்லை என்று கேட்டு அரசமைப்புச் சட்டப் பிரிவு 338பி பிரிவின் கீழ் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் விசாரணையைத் தொடங்கி உள்ளது.

2020 ஆம் ஆண்டுக்கான முதுநிலை மருத்துவப் படிப்பில், மாநிலங்களிலிருந்து 7981 இடங்களை அகில இந்தியத் தொகுப்புக்கு மத்திய அரசு பெற்றுள்ளது. இதில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அறவே இல்லாமல் பூஜ்ஜியம் என்ற நிலைமை உள்ளது.

முதுநிலை பல் மருத்துவப் படிப்புகளுக்கு நடப்பு ஆண்டான 2020-21 இல் மொத்த இடங்கள் 274. இதில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு பூஜ்ஜியம். கடந்த 2017-18 ஆம் ஆண்டிலிருந்து 2019-20 ஆம் ஆண்டு வரை மூன்று ஆண்டுகளில் மத்தியத் தொகுப்புக்கு மாநிலங்களிடமிருந்து பெறப்பட்ட இளநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்கள் மொத்தம் 11,879. இதில் 27 விழுக்காடு இடஒதுக்கீடு மறுக்கப்பட்டதால், அகில இந்திய அளவில் பிற்படுத்தப்பட்டோருக்கான 3207 இடங்கள் பறிபோய்விட்டன.

அதே போன்று இளநிலை பல் மருத்துவப் படிப்பில் மொத்தம் உள்ள 931 இடங்களில் பிற்பட்ட மாணவர்கள் இழந்தது 251 இடங்கள் ஆகும். தமிழகத்தில் நடப்பு ஆண்டு மருத்துவ மேற்படிப்புக்கான மொத்த இடங்கள் 1882. இதில் 50 விழுக்காடு இடங்கள் அதாவது 941 இடங்கள் அகில இந்தியத் தொகுப்புக்குத் தரப்பட்டுள்ளது. இதில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு இல்லை என்று மத்திய அரசு மறுப்பது சமூக நீதிக்கு சாவுமணி அடிக்கும் திட்டமிட்ட சதி ஆகும். இந்த இடங்கள் தமிழ்நாட்டிலேயே இருக்குமானால் பிற்படுத்தப்பட்டோருக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு அடிப்படையில் 470 இடங்கள் கிடைத்திருக்கும்.

“மருத்துவ இடஒதுக்கீட்டில் OBC-க்கு ஒரு இடம்கூட ஒதுக்காமல் பா.ஜ.க அரசு வஞ்சித்து வருகிறது”: வைகோ ஆவேசம்!

அகில இந்தியத் தொகுப்புக்கு மாநிலங்களிலிருந்து பெறப்பட்ட முதுநிலை மருத்துவ இடங்களில், பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு மறுக்கப்பட்டதால், 2017 இல் 3101 இடங்களும், 2018 இல் 2429 இடங்களும், 2019 இல் 2207 இடங்களும், 2020 இல் 2155 இடங்களுமாக நான்கு ஆண்டுகளில் மொத்தம் 9892 இடங்களை பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் இழந்து உள்ளனர்.

ஆக மொத்தம் கடந்த நான்கு ஆண்டுகளில் மருத்துவப் படிப்புக்களுக்காக மாநிலங்கள் வழங்கிய மொத்த இடங்கள் 42,842 இல் ஒரு இடம்கூட பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கீடு இல்லை. ஆனால் பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு மட்டும் 10 விழுக்காடு இடங்களை வாரி வழங்குவதில் தாராளமான மனப்பான்மையுடன் பா.ஜ.க. அரசு நடந்து கொள்கிறது.

சமூக நீதியை மறுக்கும் மத்திய பா.ஜ.க. அரசின் இந்நடவடிக்கைகளைக் கண்டித்து கடந்த மே 13 ஆம் தேதி அறிக்கை வெளியிட்டிருந்தேன். தற்போது தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மத்திய அரசிடம் விளக்கம் கேட்டுள்ள நிலையில், முதுநிலை மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இந்தியா முழுவதும் கடந்த நான்கு ஆண்டுகளாகக் கிடைக்க வேண்டிய 9,892 இடங்களையும், அதேபோன்று இளநிலை மருத்துவப் படிப்புகள், இளநிலை மற்றும் முதுநிலை பல் மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 விழுக்காடு சட்டப்பூர்வ இடஒதுக்கீட்டுக்கான 1135 இடங்களையும் சேர்த்து ஆக மொத்தம் 11,027 இடங்களை சிறப்பு ஒதுக்கீட்டின் மூலம் நிரப்ப மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories