இந்தியா

“இப்போதாவது புரிந்ததே... நன்றி பிரதமரே” - மோடியை கிண்டல் செய்த ராகுல் காந்தி!

100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை முன்பு விமர்சித்த பிரதமர் மோடி, இப்போது அந்தத் திட்டத்துக்கு கூடுதலாக ரூ.40 ஆயிரம் கோடி நிதிஒதுக்கீடு செய்ததற்கு ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார்.

“இப்போதாவது புரிந்ததே... நன்றி பிரதமரே” - மோடியை கிண்டல் செய்த ராகுல் காந்தி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை முன்பு கடுமையாக விமர்சித்த பிரதமர் மோடி, இன்று அந்தத் திட்டத்துக்கு கூடுதலாக ரூ.40 ஆயிரம் கோடி நிதிஒதுக்கீடு செய்ததற்கு காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பிலருந்து நாட்டை மீட்க பிரதமர் மோடி ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான திட்டத்தை அறிவித்தார்.

பிரதமர் மோடி அறிவித்த திட்டம் குறித்த விவரங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த ஐந்து நாட்களாக அறிவித்தார். அதில், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சொந்த கிராமங்களில் வேலை வழங்கும் வகையில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு கூடுதலாக ரூ.40 ஆயிரம் கோடி ஒதுக்குவதாக அறிவிக்கப்பட்டது.

பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் முன்னர் ஒருமுறை “மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத்திட்டம் என்பது காங்கிரஸ் கட்சித் தோல்வியின் வாழும் நினைவுச்சின்னம்” என விமர்சித்தார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, “காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் கொண்டுவரப்பட்ட மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்காக பட்ஜெட்டில் ஒதுக்கிய தொகையைக் காட்டிலும் கூடுதலாக ரூ.40 ஆயிரம் கோடியை பிரதமர் மோடி ஒதுக்க ஒப்புதல் அளித்துள்ளார்.

இதற்காக பிரமதர் மோடிக்கு நன்றி தெரிவிக்கிறேன். காங்கிரஸின் தொலைநோக்குத் திட்டமான மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை பிரதமர் புரிந்துகொண்டார். அதை ஊக்கப்படுத்தவும் செய்கிறார்” எனத் தெரிவித்துள்ளார்.

அதோடு, மோடி பேசிய வீடியோவையும் பகிர்ந்துள்ளார் ராகுல் காந்தி. இந்த வீடியோ வைரலாவதோடு, #ModiUTurnOnMNREGA எனும் ஹேஷ்டேக்கில் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories