இந்தியா

“ஏழை எளிய மாணவர்களின் கல்விக் கனவை காவு வாங்க சதி” : கலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு?

கலை, அறிவியல் படிப்புகளுக்கும் தேசிய மற்றும் மாநில அளவில் நுழைவுத்தேர்வை நடத்த யுஜிசி-க்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Premkumar
Updated on

இந்தியாவில் கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு பொதுவாகவே ஏழை மற்றும் எளிய மக்களுக்கானது. குறைந்த ஊதியம் பெறும் பெற்றோர்களின் பிள்ளைகளே கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவார்கள் என்ற நிலை இருந்து வந்தது.

காலப்போக்கில் புதிய தொழில்நுட்பத்துடன் வந்த பொறியியல் படிப்புகள், மருத்துவப் படிப்புகள் போன்றவை அத்தகைய எண்ணத்தை மாற்றின. ஆனால் மீண்டும் அந்த மனநிலைக்கு தற்போது மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

மருத்துவப் படிப்பிற்கு நீட் தேர்வு கட்டாயம் மற்றும் பொறியியல் படிப்புகளில் குறைந்த வேலைவாய்ப்பு போன்ற காரணங்களால் மருத்துவ மற்றும் பொறியியல் படிப்புகள் மீது மாணவர்களின் மோகம் குறைந்து வருகிறது. அதேநேரத்தில் மாணவர்களின் கவனம் கலை அறிவியல் பட்டப் படிப்புகளின் பக்கம் திரும்பியுள்ளன.

“ஏழை எளிய மாணவர்களின் கல்விக் கனவை காவு வாங்க சதி” : கலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு?

இந்தியாவில் கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்புகளுக்கு கோடி கோடியாய் பணம் கட்டத் தேவையில்லை; கல்விக் கட்டணம் குறைவு, மூன்றாண்டுகளில் இளநிலை படிப்பை முடித்து விடலாம்.

படிக்கும்போது கிடைக்கும் அதிக நேரத்தால் மாற்றுத் திறன்களை வளர்த்துக் கொள்ளவும், போட்டித் தேர்வுகளில் அதிகம் பங்கேற்கும் வாய்ப்பும் அமைகிறது. ஆனால் பொறியியல், மருத்துவம் படித்தால் அந்தத் துறைகளில் மட்டுமே வேலைவாய்ப்புக்கான சூழல் உள்ளது. இதுபோன்ற காரணங்களால் தற்போது மாணவர்கள் கலை மற்றும் அறிவியல் படிப்புகளை தேர்ந்தெடுக்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

ஆனால் இந்த நிலையில் கலை அறிவியல் கல்லூரியின் தரத்தை உயர்த்துவற்கு பதிலாக மாணவர் சேர்க்கையை தடுக்கும் வேலையில் இறங்கியுள்ளது மோடி அரசு. கலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வை தேசிய மற்றும் மாநில அளவில் நடத்த யுஜிசி-க்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

“ஏழை எளிய மாணவர்களின் கல்விக் கனவை காவு வாங்க சதி” : கலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு?

நாட்டில் கல்வி மேம்பாடு தொடர்பாகவும், 2020-21ம் ஆண்டிற்கான கல்வி அட்டவணையும் ஆன்லைன் கற்றலை ஊக்குவிப்பதற்கான வழிகளையும் பரிந்துரைக்க, யுஜிசி இந்த மாதத்தில் இரண்டு குழுக்களை அமைத்தது.

அதில் அரியானா மத்திய பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் குஹத் தலைமையிலான குழு, இளங்கலை மற்றும் முதுகலை அளவில் பொது நுழைவுத் தேர்வுகளை நடத்த பரிந்துரைத்ததாகக் கூறப்படுகிறது. அதாவது, கலை, அறிவியல் படிப்புகளுக்கும் தேசிய மற்றும் மாநில அளவில் நுழைவுத்தேர்வு நடத்தவும், வரும் கல்வியாண்டை ஜூலைக்கு பதிலாக செப்டம்பரில் தொடங்கலாம் என்றும் கூறியுள்ளது.

இந்த பரிந்துரைகளையும் மனித வள மேம்பாட்டுத்துறை ஆய்வுசெய்து வருவதாகவும், இதை விரிவாக வல்லுநர்களிடம் கலந்தாய்வு செய்து அறிவிப்புகளை விரைவில் மத்திய அரசு வெளியிடும் என்றும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. இது மாணவர்களின் இடைநிற்றலை அதிகரிக்கும் என கல்வியாளர்கள் எச்சரித்துள்ளனர். இந்தக் குழுவின் பரிந்துரைக்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories