இந்தியா

"சாப்பாடு போடுவார்கள் என நினைத்தோம்;கிருமி நாசினியை தெளித்தனர்”- புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நடந்த சோகம்!

டெல்லியில் இருந்து நடந்தே ஊருக்கு வந்த எங்களுக்கு உண்ண சாப்பாடு கொடுப்பார்கள் என்றே எதிர்ப்பார்த்தோம் என தொழிலாளி ஒருவர் வேதனையுடன் கூறியுள்ளார்.

"சாப்பாடு போடுவார்கள் என நினைத்தோம்;கிருமி நாசினியை தெளித்தனர்”- புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நடந்த சோகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆகையால் இந்த வைரஸ் சமூகப் பரவலாக உருவெடுப்பதைத் தடுக்கும் விதமாக மத்திய அரசு ஏப்ரப் 14ம் தேதி வரை தேசிய ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனையடுத்து, மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.

இதனையடுத்து, அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு மட்டுமே வீட்டை விட்டு மக்கள் வெளியே வரவேண்டும் என்று பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து மாநிலங்கள், மாவட்டங்களின் எல்லைகளை மூடி மாநில அரசுகள் சீல் வைத்துள்ளன.

"சாப்பாடு போடுவார்கள் என நினைத்தோம்;கிருமி நாசினியை தெளித்தனர்”- புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நடந்த சோகம்!

இப்படி இருக்கையில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வெளி மாநிலங்களில் கூலித் தொழிலாளர்களாக உள்ள மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு வழியில்லாமல் நிற்கதியாகத் தவிக்கின்றனர். அத்தியாவசிய தேவைக்கு என எவ்வித போக்குவரத்து வசதிகளும் இல்லாத காரணத்தால் டெல்லியில் பிழைப்பு நடத்தி வந்த தொழிலாளர்கள் 200 கி.மீ தொலைவுக்கு கால்நடையாகவே படையெடுத்து சொந்த ஊர்களுக்குச் செல்கின்றனர்.

இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. வைரஸ் தொற்று ஏற்பட்டு உயிரிழப்பதற்கு முன்பு பசியாலும், பொருளாதாரமின்மையாலும் மக்கள் உயிரிழக்க நேரிடும் என்றும் எச்சரிக்கப்படுகிறது. மேலும், ஊரடங்கு அறிவிப்பதற்கு முன்பு அன்றாடம் பிழைப்பு நடத்துபவர்களுக்கு அடுத்த 21 நாட்களுக்கு தேவையான வசிப்பிடம், உணவு, பொருளாதார தேவை போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்திவிட்டு அறிவிப்பை வெளியிட்டிருக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மோடி அரசைச் சாடியுள்ளனர்.

இந்நிலையில், டெல்லியில் இருந்து உத்தர பிரதேசத்தில் உள்ள பரேலி பகுதிக்கு நடந்தே வந்து சேர்ந்த 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை அங்குள்ள பேருந்து நிலையத்துக்கு முன்புள்ள சாலையில் உட்கார வைத்து, சாலைகளில் தெளிக்க வைத்திருந்த கிருமி நாசினிகளை நகர அரசு அதிகாரிகள் அவர்கள் மீது தெளித்துள்ளனர்.

"சாப்பாடு போடுவார்கள் என நினைத்தோம்;கிருமி நாசினியை தெளித்தனர்”- புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நடந்த சோகம்!

இது தொடர்பாக பேசியுள்ளா அஃப்சல் என்ற தொழிலாளி ஒருவர், “எங்களை பேருந்து நிலையம் முன்பு உட்கார வைத்ததும் உண்பதற்கு ஏதும் சாப்பாடு கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால் திடீரென எங்கள் மீது இந்த கிருமி நாசினியை பீய்ச்சி அடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எங்களுடன் பெண்கள் குழந்தைகள் எனப் பலர் இருந்தனர்” என வருத்தத்துடன் கூறியுள்ளார்.

வைரஸை ஒழிப்பதற்காக பயன்படுத்தும் கிருமி நாசினியை தொழிலாளர்கள் மீது தெளித்துள்ள இந்த விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தொழிலாளர்களின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகலாம் என்றும், இவ்வாறு செய்யக்கூடாது என்ற அடிப்படை அறிவுகூட பணியாளர்களுக்கு இருக்காதா என்றும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

banner

Related Stories

Related Stories