இந்தியா

இருமல் மருந்தில் உயிரைக்குடிக்கும் வேதிப்பொருள் - 1973ல் நிகழ்ந்த கொடூரத்தை நினைவுகூர்ந்த பத்திரிகையாளர்!

இருமல் மருந்து குடித்த குழந்தைகள் 9 பேர் ஜம்மு காஷ்மீரில் உயிரிழந்த சம்பவத்தைப் போலவே, 47 ஆண்டுகளுக்கு முன்பும் நடந்துள்ளது குறித்து ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருக்கிறார் ஊடகவியலாளர் முரளிதரன்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஜம்மு காஷ்மீரில் கடந்த மாதம், இருமல் மருந்து குடித்து 9 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதற்கு காரணமாக இருந்த மருந்தை ஆய்வு செய்ததில் அதில் டைஎத்திலீன் க்ளைக்கால் (diethylene glycol) என்ற விஷத்தன்மை கொண்ட மருந்து கலக்கப்பட்டது தெரியவந்தது.

இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த டிஜிட்டல் விஷன் என்ற நிறுவனம் உற்பத்தி செய்த Coldbest - PC இருமல் மருந்தில் இந்த diethylene glycol கலக்கப்பட்டதே உயிரிழப்புகளுக்கு காரணமாக இருந்திருக்கிறது. இந்த மருந்தை உட்கொண்டதால் மேலும் 17 சிறுவர்கள் உடல்நல பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் diethylene glycol கலக்கப்பட்ட இந்த மருந்து உத்தர பிரதேசம், ஹரியானா, தமிழ்நாடு, ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட 8 மாநிலங்களில் இருந்து விற்கப்பட்டுள்ளது என்றும், தமிழகத்தின் சென்னை, திருச்சி பகுதியில் இருந்து விற்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார் இமாச்சலப் பிரதேச மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி நவனீத் மார்வா.

எனவே, இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டுக் கழகம் அந்த மருந்தின் உற்பத்தி மற்றும் விற்பனையை பிப்ரவரி 17 முதல் தற்காலிகமாக தடை செய்துள்ளது.

இந்நிலையில், இதேபோன்ற சம்பவம் கடந்த 1973ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் நடந்துள்ளதை நினைவுகூர்ந்து மருத்துவர் ரவிக்குமார் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் எழுதியுள்ள கட்டுரையை பி.பி.சி பத்திரிகையாளர் முரளிதரன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதில், “47 ஆண்டுகளுக்கு முன்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்ட ஒன்றரை வயதுக் குழந்தைக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனளிக்காமல் உயிரிழந்தது.

அதன் பிறகு நாளொன்றுக்கு ஓரிரு குழந்தைகளுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டன. முடிவில் 15 குழந்தைகள் சிறுநீரக செயலிழப்பு காரணமாக உயிரிழந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவர் ரவிக்குமார், உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோரிடம் உடல்நல பாதிப்புக்காக குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்ட மருந்துகளின் விவரங்களை கேட்டுப் பெற்றிருக்கிறார்.

அதில், பொதுவாக காய்ச்சலுக்கு கொடுக்கப்படும் பாராசிட்டமால் மாத்திரையையே கொடுத்துள்ளனர். திருப்பம் என்னவெனில், Pipmol-C என்ற பெயரில் புதிதாக சந்தைக்கு வந்த தண்ணீர் வடிவிலான பாராசிட்டமால் மருந்தை கொடுத்ததாலேயே குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணமாக அமைந்திருக்கிறது. அதனை ஆய்வுக்கு உட்படுத்திய மருத்துவர் ரவிக்குமாருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.

அந்த Pipmol-C மருந்தில் புரொப்போலின் க்ளைக்கால் என்ற வேதிப்பொருளுக்கு பதிலாக டைஎத்திலீன் க்ளைக்கால் கலக்கப்பட்டுள்ளது. இந்த டைஎத்திலீன் க்ளைக்கால் சிறுநீரகத்தை செயலிழக்கச் செய்யும் மருந்து.

இதனையறிந்த மருத்துவர் ரவிக்குமார், போர்க்கால அடிப்படையில் அகில இந்திய வானொலி நிலையத்திடம் பிப்மால்-சி மருந்தை உட்கொள்ளவேண்டாம் என சொல்லி பரப்புரை செய்யவைத்திருக்கிறார். அதன் பின்னர், சம்மந்தபட்ட மருந்து தயாரித்த நிறுவனம் மூடப்பட்டது” என முரளிதரன் பதிவிட்டுள்ளார்.

அதுமட்டுமல்லால், இதேபோன்று 1937ம் ஆண்டும் இந்த டைஎத்திலீன் க்ளைக்கால் உலகம் முழுவதும் பல உயிர்களைக் காவு வாங்கியுள்ளதும் தெரியவந்ததுள்ளது. ஆகவே, மக்கள் யாரும் மருத்துவர்கள் பரிந்துரைக்காத மருந்துகளை நேரடியாக மருந்தகங்களில் சென்று வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories