இந்தியா

#CAA - தீவிரமடைந்த போராட்டம் - பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் துப்பாக்கிச்சூடு; 3 பேர் பலி: அதிர்ச்சி தகவல்!

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள சூழலில் பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

#CAA - தீவிரமடைந்த போராட்டம் - பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் துப்பாக்கிச்சூடு; 3 பேர் பலி: அதிர்ச்சி தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க கடந்த ஆட்சியில் நிறைவேற்ற முடியாமல் போன குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை, தற்போது பெரும்பான்மை பலத்துடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது.

இந்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. மேலும், எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் என பல்வேறு தரப்பினரும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தங்களின் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், எதிர்க்கட்சியினர் மற்றும் ஜனநாயக அமைப்பினர் நாடுமுழுவதும் போராட்டம் நடத்துவதாக இன்று அறிவித்திருந்தனர். இதையடுத்து பா.ஜ.க ஆளும் உத்தர பிரதேசம் மற்றும் கர்நாடகாவின் பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஆனாலும் தடையை மீறி டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி.ராஜா உள்பட 1200 பேரை கைது செய்தனர். அதுமட்டுமின்றி, முன்னதாக போராட்டம் பரவுவதைத் தடுக்க ஏர்டெல், வோடஃபோன் உள்ளிட்ட நிறுவனங்களின் செல்போன் சேவைகளை பா.ஜ.க அரசு முடக்கப்பட்டது.

அதன் தொடர்சியாக பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இதுவரை மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றய தினம் கர்நாடக மாநிலம் மங்களூருவில் தடையை மீறி ஆயிரக்கணக்கானோர் ஊர்வலமாக சென்றுள்ளனர்.

நெல்லிக்காய் சாலையில் ஊர்வலம் வந்தபோது, போலிஸார் அவரைகளை தடுத்து நிறுத்தினர். அப்போது போராட்டகாரர்களுக்கும், போலிஸாருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு இருதரப்பிற்கும் இடையே மோதல் உருவாகியது.

இதனால் ஆத்திரமடைந்த போலிஸார் கண்ணீர் புகைகுண்டு வீசியும், துப்பாக்கிச்சூடு நடத்தியும் போராட்டக்காரர்களை விரட்டினர். இதில் குண்டு அடிப்பட்டு 23 வயதான நவ்ஷீலாமற்றும் 49 வயதான ஜலீல் என்பவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன என்றும் உள்ளூர் அரசு அதிகாரி இந்து பி ரூபேஷ் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதேப்போல் உத்தர பிரதேச மாநிலத்தில், லக்னோவில் நடைபெற்ற போராட்டம் தீவிரமடைந்தன. போலிஸாரின் அடக்குமுறைக் காரணமாக சம்பால் மாவட்டத்தில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

இதனால் போலிஸார் அங்கு நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் ஒருவர் பலியானார். அவர் முகமது வகீல் என்று தெரியவந்துள்ளது. அவரது சடலம் கிங் ஜார்ஜ் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் மேலும் 2 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள சூழலில் பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களில் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories