இந்தியா

“அடிப்படையே பாரபட்சமாக உள்ளது” : குடியுரிமை சட்டத்திற்கு ஐ.நாவின் மனித உரிமை ஆணையம் கண்டனம்!

குடியுரிமை சட்டம் அடிப்படையிலேயே பாரபட்சத்தோடு இருப்பதாக ஐ.நாவின் மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.

“அடிப்படையே பாரபட்சமாக உள்ளது” : குடியுரிமை சட்டத்திற்கு   ஐ.நாவின் மனித உரிமை ஆணையம் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க அரசு குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. பெரும்பான்மை பலத்துடன் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை மோடி அரசு நிறைவேற்றியிருப்பது சிறுபான்மையினர் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிரான ‘இந்து ராஷ்டிர’த்தை உருவாக்கவே என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்த சட்டத்திருத்தம் நிறைவேற்றிய போதே, அமெரிக்காவின் சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஆணையம் (யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப் ) கடும் கண்டனத்தைப் பதிவு செய்தது.

குறிப்பாக, ”இந்தச் சட்டம் அரசியலமைப்புக்கு எதிராக மத உள்நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டிருக்கும் பட்சத்தில் அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட ஆட்சியாளர்களுக்கு அமெரிக்கா தடைவிதிக்க வேண்டும்” எனவும் அமெரிக்காவிற்கு அந்த ஆணையம் கோரிக்கை வைத்தது. மேலும் சர்வதேச அளவில் இந்தச் சட்டம் பெரும் விமர்சனத்துக்கும் கண்டனத்துக்கும் உள்ளாகியுள்ளது.

இந்நிலையில், முஸ்லிம் மக்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டு கொண்டுவரப்பட்டுள்ள இந்தச் சட்டம் அடிப்படையிலேயே பாரபட்சமாக இருப்பதாக ஐ.நாவின் மனித உரிமை ஆணையம் வருத்தம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த சட்டத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

“அடிப்படையே பாரபட்சமாக உள்ளது” : குடியுரிமை சட்டத்திற்கு   ஐ.நாவின் மனித உரிமை ஆணையம் கண்டனம்!

இதுகுறித்து ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையத்தின் நிர்வாகி ஜெரமி லாரன்ஸ் கூறுகையில், “இந்தியாவில் கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டம் முஸ்லிம்களை மட்டும் வேறுபடுத்தும் விதத்தில், அடிப்படையே பாரபட்சமாக உள்ளது.

குறிப்பிட்ட ஆறு மதங்களைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் குடியுரிமை வழங்கப்படும் என்றும் முஸ்லிம் மக்களுக்கு அதில் விலக்கு என்றும் அறிவித்துள்ளது ’சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ என்ற இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கோட்பாட்டை குறைத்து மதிப்பிட வைக்கிறது” என்று அவர் கூறினார்.

மேலும், “இந்திய அரசின் இந்தச் சட்டமானது, உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வுக்கு உட்படும் என்பதை உணர்கிறோம். மேலும் ஐ.நாவுடனான இந்திய ஒப்பந்தங்களுக்கு முரணில்லாத வகையில் அந்த இறுதித் தீர்ப்பு அமையும் என்று நம்புகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

நாடுமுழுவதும் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், ஐ.நா-வின் இந்த எச்சரிக்கை மத்திய பா.ஜ.க அரசிற்கு மேலும் கலக்கத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

banner

Related Stories

Related Stories