இந்தியா

30 ஆண்டுகால பா.ஜ.க-சிவசேனா கூட்டணியை வீழ்த்திய ‘கிங்மேக்கர்’ சரத் பவார்!

மராட்டிய அரசியலில் பா.ஜ.க - சிவசேனாவின் கூட்டணியை தனது வியூகத்தால் உடைத்துப் பிரித்திருக்கிறார் தேசியவாத காங். தலைவர் சரத் பவார்.

30 ஆண்டுகால பா.ஜ.க-சிவசேனா கூட்டணியை வீழ்த்திய ‘கிங்மேக்கர்’ சரத் பவார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அரசியலில் மாயாஜாலங்கள் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம்; அதை நிகழ்த்தும் ராஜதந்திரிகள் எல்லாக் காலத்திலும் இருக்கிறார்கள். அப்படி, மகாராஷ்டிர அரசியலில் சத்தமில்லாமில் மாயத்தை நடத்திக்காட்டி ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறார் 50 ஆண்டு கால பழுத்த அரசியல் அனுபவம் கொண்ட சரத் பவார்.

மராட்டியத்தில் கடந்த மாதம் 21ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று 24ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகின. பாஜக-சிவசேனா கூட்டணி ஆட்சி அமைக்க தேவையான இடங்களைப் பெற்ற நிலையில் முதல்வர் பதவியும் முக்கிய அமைச்சரவை இலாகாக்களும் வேண்டும் என்பதில் சிவசேனா உறுதியாக இருந்தது. மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க முதல்வர் பதவியை விட்டுத்தரத் தயாராக இல்லை.

தேர்தல் முடிவுகள் வெளியான சமயத்தில் உத்தவ் தாக்கரே அனைத்து கதவுகளும் திறந்து இருப்பதாக செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். சிவசேனாவின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள பா.ஜ.க தயாராக இல்லை என்பது தெரியவே தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் உடன் சிவசேனாவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவத் தொடர்ந்து பேசி வந்தார்.

30 ஆண்டுகால பா.ஜ.க-சிவசேனா கூட்டணியை வீழ்த்திய ‘கிங்மேக்கர்’ சரத் பவார்!

தேசியவாத காங்கிரஸ் சிவசேனாவிற்கு ஆதரவு தரத் தயார் என்ற நிலையில், ஒரு நிபந்தனையை விதிக்கிறது. அது, முதல்வர் பதவியை 5 ஆண்டுகளுக்கு சிவசேனாவே வைத்துக்கொள்ளட்டும்; ஆனால் பா.ஜ.க உடனான கூட்டணியை விட்டு முற்றிலுமாக வெளியேறி, மத்தியில் பா.ஜ.க அரசில் வகிக்கும் அமைச்சர் பதவியை உதறவேண்டும் என்பதாகும்.

அதோடு, பா.ஜ.க சிவசேனாவை அடக்கி ஆள முற்படுவதையும், இது தொடர்ந்தால் சிவசேனாவின் அரசியல் வீழ்ச்சியை நோக்கி செல்லக்கூடும் என்பதையும் சிவசேனாவிற்கு புரிய வைத்திருக்கிறார் சரத்பவார்.

மராட்டிய அரசியலில் சிவசேனா வீழ்ந்து வருவது கண்கூடு. 1995ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 73 தொகுதிகளை வென்ற சிவசேனா தற்போது நடந்து முடிந்த தேர்தலில் 54 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 2014ம் ஆண்டு பா.ஜ.க மத்தியில் ஆட்சியைப் பிடித்த பின்னர் மாநில தேர்தல்களில் மாநிலக் கட்சிகளை விட அதிக இடங்களில் போட்டியிட்டு வருகிறது.

30 ஆண்டுகால பா.ஜ.க-சிவசேனா கூட்டணியை வீழ்த்திய ‘கிங்மேக்கர்’ சரத் பவார்!

2009 சட்டமன்ற தேர்தலில் 169 தொகுதிகளில் போட்டியிட்ட சிவசேனா 2019 தேர்தலில் 124 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும் நிலை ஏற்பட்டது. பாஜக 2009ல் 119 தொகுதிகளில் போட்டியிட்டது; 2019ல் 152 தொகுதியில் போட்டியிட்டது. மராட்டியத்தில் பா.ஜ.க தங்களைக் கட்டுக்குள் வைக்க முற்படுகிறது என்பதை சிவசேனாவுக்கு புரியவைத்திருக்கிறார் சரத் பவார்.

5 ஆண்டுகால ஆட்சி முழுமைக்கும் சிவசேனாவே முதல்வர் பதவியை வைத்துக்கொள்ள சரத் பவார் ஒப்புதல் தெரிவித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த அஸ்திரத்தின் மூலம் 30 ஆண்டுகால பா.ஜ.க - சிவசேனாவின் கூட்டணியைப் பிரித்து இருக்கிறார் பவார்.

2014ம் ஆண்டு முதல் வலுவான எதிர்கட்சி இல்லாத இந்தியாவை, குறிப்பாக வலுவான மாநிலக் கட்சிகள் இல்லாத இந்தியாவை உருவாக்கி வந்த பா.ஜ.கவுக்கு தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா ஆகிய மாநிலக் கட்சிகள் மூலம் சரத் பவார் ஆட்டம்காட்டி இருக்கிறார்.

30 ஆண்டுகால பா.ஜ.க-சிவசேனா கூட்டணியை வீழ்த்திய ‘கிங்மேக்கர்’ சரத் பவார்!

78 வயது நிரம்பிய சரத்பவார் சட்டமன்றத் தேர்தல் பிரசாரக் காலகட்டத்தில் மொத்தம் 66 கூட்டங்களில் பங்கேற்றுப் பேசி இருக்கிறார். குறிப்பாக, உடல்நலனையும் கருதாமல் மழையில் நனைந்துகொண்டே பிரச்சாரக் கூட்டத்தில் பேசியது மராட்டியத்தில் பேசுபொருளாக மாறிப்போனது. அதுவே தேர்தலில் ஒரு முக்கிய காரணியாகவும் எதிரொலித்திருக்கக்கூடும்.

50 ஆண்டுகால அரசியல் அனுபவங்களைக் கொண்டு, அசுர பலத்தில் இருக்கும் பா.ஜ.கவை எதிர்த்து அரசியல் செய்து, அவர்களின் கண்முன்னேயே ஆட்சியைத் தட்டிப்பறித்து இருக்கிறார் இந்த மூத்த அரசியல்வாதி!

- சி.ஜீவா பாரதி

banner

Related Stories

Related Stories