இந்தியா

“விவசாயத்தை ஒழித்துக்கட்டும் உலக வர்த்தக ஒப்பந்தத்தை அப்படியே ஏற்கக்கூடாது” - வைகோ எச்சரிக்கை!

விவசாயத்தை ஒழித்துக்கட்ட நினைக்கும் உலக வர்த்தக ஒப்பந்தத்தை அப்படியே ஏற்கக்கூடாது என இந்திய அரசை வைகோ வலியுறுத்தியுள்ளார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

உலக வர்த்தக ஒப்பந்தம் வேளாண் தொழிலையே நசுக்கி விட அனுமதிக்கக் கூடாது என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“உலக அளவில் வர்த்தகத்தைப் பெருக்குவதற்கு 1995 இல், உலக வர்த்தக அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. நடைமுறையில் இந்த அமைப்பு, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் வர்த்தக நலன்களைப் பாதுகாப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறது.

2011 ஆம் ஆண்டில், உலக வர்த்தக அமைப்புப் பிரதேசங்களுக்கு இடையில் விரிவான பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தம் (Regional Comprehensive Economic Partnership-RCEP) ஒன்றை வரையறுத்தது. இதன்படி இந்தியா, ஆஸ்திரேலியா, சீனா, நியூசிலாந்து, தென் கொரியா, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், மியான்மர், கம்போடியா, புரூனே, வியட்நாம், லாவோஸ், மற்றும் தாய்லாந்து ஆகிய 16 நாடுகளுக்கு இடையேயான தடையில்லா வணிகம் நடைபெற வாய்ப்பு ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டது.

டிசம்பர் 19, 2015 இல் கென்யத் தலைநகர் நைரோபியில் நடைபெற்ற உலக வர்த்தக அமைப்பு அமைச்சர்களின் 10 ஆவது மாநாட்டில் இது தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால் அந்தத் தீர்மானங்களில் இடம் பெற்றிருந்த அம்சங்கள் இந்தியாவின் வேளாண்மைத் தொழிலையும், உணவுப் பாதுகாப்பையும் அடியோடு அழிப்பதற்கு அடித்தளம் அமைப்பதாக இருந்தன.

 “விவசாயத்தை ஒழித்துக்கட்டும் உலக வர்த்தக ஒப்பந்தத்தை அப்படியே ஏற்கக்கூடாது” - வைகோ எச்சரிக்கை!

இந்தியாவில் அனைத்து வேளாண் விளைப்பொருட்களுக்கும் வழங்கப்படும் கொள்முதல் விலைக்கு உச்சவரம்பு நிர்ணயிக்க வேண்டும். அதுமட்டுமின்றி விதைகள், மின்சாரம், உரம், பூச்சிமருந்து ஆகியவற்றுக்கு அளிக்கப்படும் மானியத்தை இப்போது உள்ள அளவில் நிறுத்திக் கொள்ள வேண்டும்; அதிகரிக்கக் கூடாது என்று நைரோபி தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது. மேலும் இந்தியா உணவு தானியங்களை எதிர்காலத் தேவைக்காக சேமித்து வைக்கவும் கூடாது என்றும் கூறப்பட்டது.

இந்தியாவின் சார்பில் இதனை நடைமுறைப்படுத்த நான்கு ஆண்டுகள் கால அவகாசம் பெறப்பட்டது. ஒருபுறம் வேளாண் இடுபொருள்களுக்கு, தற்போது வழங்கப்படும் மானியங்கள் தொடரலாம் என்று கூறிய உலக வர்த்தக அமைப்பு, 2018 ஆம் ஆண்டுக்கு பிறகு விவசாய விளைப்பொருள்களை இந்தியா ஏற்றுமதி செய்ய வேண்டுமானால், விவசாய மானியங்களை முற்றிலுமாக இரத்து செய்ய வேண்டும். மானிய உதவியுடன் உற்பத்தி செய்யப்படும் விளைப்பொருட்களின் ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்படும் என்று உலக வர்த்தக அமைப்பு கூறியது.

இந்த நிபந்தனை இந்திய வேளாண்மைத் தொழிலையே நசுக்கிவிடும். மேற்கண்ட ‘ஆர்செப்’ ஒப்பந்தம் வரும் நவம்பரில் இறுதி செய்யப்பட இருக்கின்றன. ஆனால் இதுவரையில் ஒப்பந்த அம்சங்கள் பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை. ஆனால் இதுபற்றிய விவரங்கள் சிலரால் கசியவிடப்பட்டு இருக்கின்றன.

இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு இந்தியா கையெழுத்திட்டால், பெரும் பாதிப்புகள் நேரும். இறக்குமதி வரியின்றி பெருமளவில் விவசாயப் பொருட்கள் இறக்குமதியாகும். இதில் கையெழுத்துப் போடும் நாடுகளிலிருந்து உபரியாக உள்ள விவசாய விளைப்பொருட்கள் இந்திய சந்தைகளில் மலிவு விலையில் வந்து குவிக்கப்படும்.

 “விவசாயத்தை ஒழித்துக்கட்டும் உலக வர்த்தக ஒப்பந்தத்தை அப்படியே ஏற்கக்கூடாது” - வைகோ எச்சரிக்கை!

இறக்குமதி செய்யப்படும் பால் மற்றும் பால் பொருட்களும் மலிவான விலைக்கு இங்கு தடையின்றி கிடைக்கும். இனி இந்திய விவசாயிகள் விதைகளை சேமிப்பதோ, பரிமாற்றம் செய்வதோ குற்றமாக்கப்படும்.

இந்திய விவசாயத்தையும், கிராமப்புற பொருளாதாரத்தையும் அடியோடு ஒழித்துக்கட்டும் உலக வர்த்தக ஒப்பந்தத்தை இந்திய அரசு அப்படியே ஏற்க கூடாது. ஆர்செப் ஒப்பந்தத்திலிருந்து விவசாயம், பால், பால் பொருட்கள் மற்றும் கடல்சார் உணவு வகைகள் உள்ளிட்டவற்றிற்கு விலக்கு அளிக்க இந்திய அரசு வலியுறுத்த வேண்டும்.

உலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்தம் பற்றிய அனைத்து ஆவணங்களையும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் முன்வைத்து விவாதித்து முடிவு மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories