இந்தியா

“நிச்சயதார்த்தம் ஏற்பாடு செய்தோம்... இறுதிச்சடங்கு செய்யும்படி ஆகிவிட்டது”: ஒடிசாவில் கொல்லப்பட்ட தமிழர்!

பணி நேரம் குறித்த வாக்குவாதம் முற்றி தமிழக பொறியாளரை ஒப்பந்த ஊழியர் ஒருவர் அடித்துக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“நிச்சயதார்த்தம் ஏற்பாடு செய்தோம்... இறுதிச்சடங்கு செய்யும்படி ஆகிவிட்டது”: ஒடிசாவில் கொல்லப்பட்ட தமிழர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மதுரையைச் சேர்ந்த பொறியாளர் கணேஷ் குமார், இவர் தற்போது ஒடிசா மாநிலத்தில் மத்திய அரசின் கீழ் இயங்கும் இரும்பு உற்பத்தி ஆலையின் உதவிப் பொறியாளராக உள்ளார். இந்நிலையில் வழக்கம்போல பணியில் இருந்த கணேஷ் ஒப்பந்தப் பணியாளர்களுக்கு பணி நேரத்தை ஒதுக்கியுள்ளார். அப்போது அனில் லோகர் என்ற ஒப்பந்த ஊழியர் ஒருவர், பணி நேரத்தில் உடன்பாடு இல்லை என வேறு நேரம் ஒதுக்கும்படி கணேஷ் குமாரிடம் வற்புறுத்தியுள்ளார்.

ஒரு நபருக்கு மாற்றினால் எல்லோருக்கும் மாற்றவேண்டும் பிறகு பார்த்துக்கொள்ளலாம் தற்போது உள்ள நேரப்படி பணிக்குச் செல்லுங்கள் என்று கணேஷ் கூறியுள்ளார். ஆனால் அதற்கு உடன்படாத அனில் லோகர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றி அருகில் இருந்த இரும்புக் கம்பியைக் கொண்டு கணேஷ்குமாரை கொடூரமாகத் தாக்கியுள்ளார் அனில் லோகர். தடுக்க முயன்ற சக ஊழியர்களையும் அனில் லோகர் தாக்க முயற்சித்ததாகக் கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் பலத்த காயம் அடைந்த கணேஷ் குமார் நிலைகுலைந்து மயங்கி கீழே விழுந்தார். உடனே ரத்தவெள்ளத்தில் இருந்த கணேஷ் குமாரை சக ஊழியர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் முன்பே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

கணேஷ் குமார்
கணேஷ் குமார்

இதுதொடர்பாக போலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார், கணேஷ் குடும்பத்திற்கு இதுகுறித்து தெரிவித்து உடலைப் பெற்றுக்கொள்ள ஒடிசா வரவழைத்துள்ளனர். கணேஷின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரது சடலத்தை சொந்த ஊர் கொண்டு வருவதற்காக ஒடிசா விரைந்துள்ளனர். போலிஸாரும் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய அனில் லோகரை கைது செய்தனர்.

இதுகுறித்து கணேஷ்குமாரின் தந்தை குமார் பேசுகையில், “நான் ஓட்டுனராக வேலை பார்த்துதான் என் மகனைப் படிக்க வைத்தேன். மகனின் படிப்பிற்காக கல்விக்கடன் வாங்கி பொறியியல் படிக்க வைத்தோம். இப்போதுதான் முடித்துவிட்டு ரூர்கேலா இரும்பு தொழிற்சாலையில் பணியில் இணைந்தார்.

அவருக்கு அடுத்த மாதம் நிச்சயதார்த்தம் செய்வதற்கு ஏற்பாடு செய்துவந்தோம். ஆனால் இறுதிச் சடங்கு செய்யும்படி ஆகிவிட்டது” என வேதனையுடன் தெரிவித்தார். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories