
கேரள மாநிலத்தைச் சேர்ந்த பாரத் தர்ம ஜனசேனா கட்சியின் தலைவர் துஷார் வெள்ளப்பள்ளி. இவர் 10 வருடத்திற்கு முன்பு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அஜ்மான் பகுதியில் கட்டுமானத் தொழில் செய்து வந்தார்.
முன்னதாக துஷார் வெள்ளப்பள்ளிக்கு தொழிலில் உதவுவதற்கு நஸில் அப்துல்லா என்பவர் கோடிக் கணக்கில் பணம் கொடுத்து உதவியுள்ளார். பின்னர் இந்தியா வந்தபிறகு அந்தப் பணத்தை ஒப்படைக்கும்படி அப்துல்லா கூறியுள்ளார். இதனையடுத்து அவருக்குக் கொடுக்க வேண்டிய 19 கோடி ரூபாய்க்கு செக் கொடுத்துள்ளார். ஆனால் வங்கிக் கணக்கில் பணம் இல்லாததால் செக் திரும்பி வந்துள்ளது.
இதனையடுத்து இதுகுறித்துப் பேசுவதற்காக துஷாரை நஸில் அழைத்துள்ளார். இதனையடுத்து துஷார் வெள்ளப்பள்ளி அஜ்மானுக்கு புறப்பட்டுச் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இந்தப் பேச்சு வார்த்தை தகராறாக மாறிய நிலையில், அங்குள்ள காவல் நிலையத்தில் நஸில் புகார் கொடுத்துள்ளார். அவர் புகாரின் அடிப்படையில் துஷார் வெள்ளப்பள்ளியை போலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் மாற்றுக்கட்சி தலைவர் என்றாலும் அவருக்கு உதவ கேரள முதல்வர் பினராயி விஜயன் முன்வந்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் ஒன்றை எழுதி அவரை மீட்க அனைத்து வகையான நடவடிக்கையும் எடுத்து வந்தார்.
இந்நிலையில், துஷாருக்கு அஜ்மான் நீதிமன்றம் அந்த வழக்கில் ஜாமின் வழங்கியுள்ளது. ஜாமினுக்கான ரூ.1 கோடியை அங்குள்ள தொழிலதிபர் யூசுப் அலி என்பவர் செலுத்தியுள்ளார். அதன்பின் துஷார் வெள்ளப்பள்ளி விடுவிக்கப்பட்டார்.
பின்னர் இந்த வழக்கில் நஸில் அப்துல்லா துஷார் வெள்ளப்பள்ளிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் நம்பகத்தைமையுடன் இல்லை என்று நீதிமன்றம் தெரிவித்து அந்த வழக்கை ரத்து செய்ததது. இதனையடுத்து துஷார் இன்று காலை கேரளா திரும்பினார். அவரை கொச்சி விமான நிலையத்தில் துஷாரை அவரது கட்சியினர் வரவேற்றனர்.
இதுதொடர்பாக அவர் தந்தை நடேசன் கூறுகையில், “பா.ஜ.க-வின் வேட்பாளராக ராகுல் காந்தியை எதிர்த்து நின்று போட்டிபோட்டவர் என் மகன். அவர் இவ்வளவு பெரிய பிரச்சனையில் மாட்டிக்கொண்டப் போது அவர் மீட்க பா.ஜ.க எந்தவித உதவியையும் செய்யவில்லை” என்று மறைமுகமாக குற்றம் சாட்டினர்.ெ
தேர்தலுக்குப் பிறகு பா.ஜ.க, துஷார் அமைப்பினைக் கண்டுக்கவில்லை எனவும் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் விடுதலையானதையொட்டி கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து நன்றி கூற இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கேரள முதல்வர் பினராயி விஜயனின் இந்த நடவடிக்கை பாரத் தர்ம ஜனசேனா கட்சியினர் நன்றி கூறி வருவது கேரளாவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.








