இந்தியா

பொருளாதார விவகாரத்தில் அரசியல் செய்யாமல் மன்மோகன் சிங் பேச்சை கேளுங்கள்- மோடிக்கு சிவசேனா எச்சரிக்கை! 

நாட்டின் பொருளாதார விவகாரத்தில் அரசியல் செய்யாமல் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேச்சைக் கேளுங்கள் என்று பாஜக கூட்டணி கட்சியான சிவசேனா கட்சி, பிரதமர் மோடியை வலியுறுத்தியுள்ளது.

பொருளாதார விவகாரத்தில் அரசியல் செய்யாமல் மன்மோகன் சிங் பேச்சை கேளுங்கள்- மோடிக்கு சிவசேனா எச்சரிக்கை! 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
பி.என்.எஸ்.பாண்டியன்
Updated on

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தி (GDP) 5 சதவீதமாகச் சரிந்தது. ஆட்டோமொபைல் துறையின் விற்பனை தொடர்ந்து 3-வது மாதச் சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நாட்டின் வளர்ச்சியைத் தீர்மானிக்கும் 8 முக்கியத் துறைகளின் உற்பத்தியும் வெறும் 2.1 சதவீதமாக உள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், பொருளாதார வல்லுநரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் கடந்த வாரம் அறிக்கை வெளியிட்டார். அதில் " நாட்டின் பொருளாதாரம் இன்று ஆழ்ந்த, வேதனையளிக்கும் விதத்தில் இருக்கிறது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 5 சதவீதமாக இருப்பது, வளர்ச்சி குறைந்திருப்பதைக் காட்டுகிறது.

வேகமான பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கு தகுதியானது நமது தேசம். ஆனால் அனைத்து வகையிலும் மோடி அரசின் தவறான, மோசமான நிர்வாகத்தால் இந்தப் பொருளாதார வளர்ச்சிக் குறைவு ஏற்பட்டுள்ளது.

பொருளாதார விவகாரத்தில் அரசியல் செய்யாமல் மன்மோகன் சிங் பேச்சை கேளுங்கள்- மோடிக்கு சிவசேனா எச்சரிக்கை! 

பிரதமர் மோடி அரசின் கொள்கைகளின் விளைவால், வேலைவாய்ப்பு இல்லாத வளர்ச்சிதான் ஏற்பட்டுள்ளது. ஆட்டோமொபைல் துறையில் 3.50 லட்சம் பேருக்கும் அதிகமானோர் வேலையிழந்துள்ளனர்.

பழிவாங்கும் அரசியலைத் தூரவைத்து விட்டு, அனைத்து விவேகமுள்ளவர்களின் ஆலோசனையை ஏற்று, சிந்தித்து, நம்முடைய பொருளாதாரத்தை மனிதத் தவறுகளில் இருந்து மீட்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துகிறேன்" எனத் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னாவில் தலையங்கம் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது:

''பொருளாதார மந்தநிலை காரணமாக, நாட்டில் மிகப்பெரிய பொருளதாரச் சிக்கல் வரப்போகிறது என்று சில ஆண்டுகளுக்கு முன் முன்னாள் பிரதமர் மனமோகன் சிங் எச்சரித்து இருந்தார். மன்மோகன் சிங் நாட்டின் பொருளாதாரத்தையும், பொருளாதார சூழலையும் நன்கு அறிந்து, எந்தவிதமான வெறுப்பு, விருப்பின்றித்தான் பேசுகிறார்.

தேசத்தின் பொருளாதாரம் சரியான பாதையில் செல்லவில்லை, மோசமாக இருக்கிறது என்று கூறும் மன்மோகன் சிங்கின் வார்த்தை மீது நாம் நம்பிக்கை வைக்க வேண்டும். இந்த விஷயத்தில் அரசியல் செய்யாமல் மத்திய அரசு மன்மோகன் சிங் என்ன எச்சரிக்கை விடுக்கிறாரோ, என்ன அறிவுரை கூறுகிறாரோ அதைக் காது கொடுத்து கவனிக்க வேண்டும்.

பொருளாதாரம் உற்சாகம் இழந்து மந்தநிலையில் இருக்கிறது. காஷ்மீர் விவகாரமும், பொருளாதார மந்தநிலையும் வெவ்வேறான விஷயங்கள். ஆளும் அரசுக்கு ஆதரவாக இருப்பவர்கள் கூட பொருளாதார வளர்ச்சிக் குறைவு என்று சொல்பவர்களுக்கு எதிராகப் பேசலாம். ஆனால் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வார்த்தைகள் அனைத்தும் உண்மையைச் சொல்லும் வெடிகுண்டுகள்.

பொருளாதார விவகாரத்தில் அரசியல் செய்யாமல் மன்மோகன் சிங் பேச்சை கேளுங்கள்- மோடிக்கு சிவசேனா எச்சரிக்கை! 

மன்மோகன் சிங் போன்ற தேர்ந்த பொருளாதார வல்லுநர், பொருளாதார மந்தநிலையில் அரசியல் செய்யமாட்டார்கள். பொருளாதாரச் சூழலைச் சரிசெய்வதற்கான ஆலோசனையை வழங்குவார்கள். தேசத்தின் நலன் கருதி மன்மோகன் சிங் கூறும் ஆலோசனைகளை, அறிவுரைகளை மத்திய அரசு கேட்க வேண்டும்.

தேசத்தின் நிதி மற்றும் பொருளாதார விவகாரங்களில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக மன்மோகன் சிங் தொடர்பில் இருந்து வருகிறார். நாட்டின் பொருளாதாரம் குறித்துப் பேசுவதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது.

கடந்த 2017-ம் ஆண்டு மன்மோகன் சிங் குறித்து பிரதமர் மோடி பேசுகையில், ரெயின்கோட் அணிந்துகொண்டு மன்மோகன் சிங் குளிக்கிறார் என்றார். ஆனால், எங்களுக்கு மன்மோகன் சிங் மீது எந்த வருத்தமும் இல்லை. மன்மோகன் சிங் பொருளாதாரத்தை நன்கு அறிந்தவர். நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலையில் இருந்தபோது, அவரின் கடினமான முயற்சியால், மீண்டும் நல்ல நிலைமைக்குக் கொண்டு வந்தவர்.

பண மதிப்பிழப்பும், ஜிஎஸ்டி வரியும் பொருளாதாரச் சரிவுக்கு முக்கியக் காரணம். பண மதிப்பிழப்பு தோல்வி அடைந்துவிட்டது. ஜிஎஸ்டி வரி தொழில்துறையினரையும், வர்த்தகர்களையும் கழுத்தை இறுக்கிப் பிடித்து, தொழில்துறையை அச்சுறுத்தியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக பாஜக தேர்தலில் வெற்றி பெறுவது குறித்தும், குதிரை பேரத்தில் மட்டுமே கவனமாக இருந்ததால், பொருளாதாரம் உற்சாகம் இழந்துவிட்டது. ஆதலால், இந்த விஷயத்தில் அரசியல் செய்யாமல் மன்மோகன் சிங் பேச்சை அரசு கேட்க வேண்டும்''.

இவ்வாறு சாம்னாவில் கூறப்பட்டுள்ளது. பா.ஜ.க-வின் நெருங்கிய கூட்டணி கட்சியான சிவசேனா இவ்வாறு கூறியிருப்பது, நாட்டில் நிலவும் பொருளாதார பாதகநிலை அப்பட்டமாக தெரிகிறது என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

banner

Related Stories

Related Stories