இந்தியா

“நான் அப்படிச் சொல்லல” : பா.ஜ.க மிரட்டலால் பின்வாங்குகிறாரா நிதி ஆயோக் துணைத் தலைவர்?

ராஜிவ் குமாரின் பேச்சு நாடு முழுவதும் பரபரப்பைக் கிளப்பியிருக்கும் நிலையில், தனது பேச்சு தவறாகப் புரிந்துகொள்ளப் பட்டுள்ளதாக பின்வாங்கியுள்ளார் ராஜிவ் குமார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

நாட்டின் பொருளாதாரம் கடும் தேக்க நிலையைச் சந்தித்து வருகிறது. ஆட்டொமொபைல் நிறுவனங்களின் வீழ்ச்சி, பல்வேறு தொழில்களின் நசிவு, உற்பத்தி நிறுத்தம், தொழிலாளர் வேலையிழப்பு ஆகியவை பொருளாதார வீழ்ச்சியை வெட்டவெளிச்சமாக்கியுள்ளன.

முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன், தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன், முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன், முன்னாள் பிரதமரும், பொருளாதார அறிஞருமான மன்மோகன் சிங் உள்ளிட்ட பல்வேறு பொருளாதார அறிஞர்களின் கருத்துகளும் இந்தியாவில் அதிபயங்கரமான பொருளாதாரச் சீர்கேடு ஏற்பட்டிருப்பதை உணர்த்துகிறது.

ஆனாலும், பா.ஜ.க தலைவர்களும், அமைச்சர்களும் பொருளாதார தேக்க நிலை ஏற்பட்டுள்ளதை ஒப்புக்கொள்ளாமல் முட்டுக்கொடுத்து வந்தனர். ஆனால், இன்று நிதி ஆயோக் தலைவர் ராஜிவ் குமார், பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக்குழு உறுப்பினர் ஷமிகா உள்ளிட்டோரும் பொருளாதார வீழ்ச்சி குறித்து எச்சரித்தனர்.

நிதி ஆயோக் தலைவர் ராஜிவ் குமார் ஏ.என்.ஐ நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “கடந்த 70 ஆண்டுகளில் நிதித்துறை இதுபோன்ற சறுக்கலைக் கண்டதில்லை. ஒட்டுமொத்த நிதித்துறையும் நெருக்கடியில் உள்ளது. பொருளாதார நிலை இன்னும் மோசமடைய வாய்ப்புள்ளது. அரசு உடனடியாக ஏதாவது செய்தாக வேண்டும்.

கடந்த 5 ஆண்டுகளாக பொருளாதார வளர்ச்சியில் நாடு எதிர்கொண்டிருக்கும் மோசமான நிலையைத் தடுத்து நிறுத்த வேண்டும். அரசுத் துறைகள் மட்டுமல்லாமல், தனியார் துறைகளும் கடுமையான நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றன. தனியார் துறையின் அச்சத்தை அகற்ற மத்திய அரசு தன்னால் முடிந்ததைச் செய்யவேண்டும்.” எனத் தெரிவித்தார்.

ராஜிவ் குமாரின் பேச்சு நாடு முழுவதும் பரபரப்பைக் கிளப்பியிருக்கும் நிலையில், தனது பேச்சு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாக பின்வாங்கியுள்ளார் ராஜிவ் குமார். பா.ஜ.க அரசு பொருளாதார நெருக்கடி நிலையை வெவ்வேறு பிரச்னைகளைப் பயன்படுத்தி திசைதிருப்பி வந்த நிலையில், ராஜிவ் குமார் பொருளாதார தேக்க நிலையை வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

அதனால், அவரை பா.ஜ.க அரசு பின்வாங்கச் செய்திருக்கலாம் என சமூக வலைதளங்களில் பலரும் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். பொருளாதார தேக்க நிலையைப் போக்க நடவடிக்கை எடுக்காமல், தங்கள் ஆட்சியின் குறைபாடுகளை மறைக்கவே பா.ஜ.க அரசு முயல்வதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories