இந்தியா

“அன்புள்ள மாலிக், எங்களுக்கு விமானம் தேவைப்படாது. ஆனால்...” : ஜம்மு காஷ்மீர் ஆளுநருக்கு ராகுல் பதில்!

ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக்கின் அழைப்புக்கு பதிலளித்துள்ள ராகுல் காந்தி, காஷ்மீருக்கு வருவதாக ஒப்புக்கொண்டதோடு சிறப்பு விமானம் தேவைப்படாது எனவும் தெரிவித்துள்ளார்.

“அன்புள்ள மாலிக், எங்களுக்கு விமானம் தேவைப்படாது. ஆனால்...” : ஜம்மு காஷ்மீர் ஆளுநருக்கு ராகுல் பதில்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு, காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து உத்தரவிட்டது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இதற்கிடையே, ஆகஸ்ட் 10ம் தேதி காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, “காஷ்மீரில் வன்முறை நடைபெறுவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. அங்கு என்ன நடக்கிறது என பிரதமர் தெளிவுபடுத்த வேண்டும்” என வேண்டுகோள் விடுத்திருந்தார்.

ராகுல் காந்தியின் பேச்சுக்கு நேற்று பதிலளித்த காஷ்மீர் மாநில ஆளுநர் சத்ய பால் மாலிக், “ராகுல் காந்தி காஷ்மீர் வர நான் அழைப்பு விடுக்கிறேன். ராகுல் காந்தி வருவதற்காக ஜம்மு காஷ்மீருக்கு சொந்தமான சிறப்பு விமானத்தை அனுப்புகிறோம்.

காஷ்மீரில் உள்ள மருத்துவமனைகளுக்கு வந்து பாருங்கள். இன்று ஒரு நபர் கூட போலீஸ் தாக்குதலில் காயம் அடைந்ததாக அனுமதிக்கப்படவில்லை. இங்கு நிலைமை சீராகத்தான் உள்ளது. சில வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள் வேண்டுமென்றே தவறான தகவலை பரப்புகின்றன.” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக்கின் அழைப்புக்கு ராகுல் காந்தி இன்று ட்விட்டரில் பதிலளித்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில் ராகுல் கூறியிருப்பதாவது, “அன்புள்ள ஆளுநர் மாலிக், உங்களது அன்பான வரவேற்பை ஏற்று எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் சிலரை அழைத்துக்கொண்டு, நான் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளுக்கு வருவேன்.

எங்களுக்கு எந்தவிதமான விமான சேவையும் தேவைப்படாது. ஆனால், நாங்கள் சுதந்திரமாகப் பயணிக்க, மக்களைச் சந்திக்க, அங்குள்ள அரசியல் கட்சித் தலைவர்களையும், நமது வீரர்களையும் சந்திக்கத் தடையில்லாத சூழலை உறுதிசெய்ய வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories