இந்தியா

“முதுகில் குத்தாதீர்கள் நெஞ்சில் சுடுங்கள்” - வீட்டுக் காவலில் இருக்கும் ஃபரூக் அப்துல்லா ஆவேசம்!

காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு செய்தது ஜனநாயக விரோத நடவடிக்கை என்று தேசிய மாநாட்டுக்கட்சியின் தலைவரும் எம்.பி.யுமான பரூக் அப்துல்லா தெரிவித்தார்.

“முதுகில் குத்தாதீர்கள் நெஞ்சில் சுடுங்கள்” -  வீட்டுக் காவலில் இருக்கும் ஃபரூக் அப்துல்லா ஆவேசம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

மாநிலங்களவையில் நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா, காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் உருவாக்கப்படுகின்றன. இதில் லடாக் சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக அமையும் என்றும் அறிவித்தார். இந்த மசோதா தக்கல் செய்யப்படுவதற்கு முன்னரே ஜம்மு - காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர்கள் மெஹபூபா முப்தி, ஓமர் அப்துல்லா உள்ளிட்ட பல தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மீதான விவாதம் மக்களவையில் இன்று நடைபெற்றது. அப்போது, காஷ்மீர் எம்.பியான ஃபரூக் அப்துல்லா எங்கே என தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. நாடாளுமன்றத்துக்கு வர முடியாத வகையில் அவரை மத்திய அரசு தடுத்து வருவதாக குற்றம்சாட்டினர். இதற்கு பதிலளித்து, “ பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஃபரூக் அப்துல்லா கைது செய்யப்படவும் இல்லை, வீட்டுக் காவலிலும் வைக்கப்படவில்லை; அவர் தனது வீட்டில் தான் இருக்கிறார்.” எனக் கூறினார்.

இந்நிலையில் தேசிய மாநாட்டுக்கட்சியின் தலைவரும் எம்.பி.யுமான பரூக் அப்துல்லா, தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தான் கைது செய்யப்படவில்லை என்று அமித்ஷா நாடாளுமன்றத்தில் பொய் சொல்வதாக கூறினார். ”என் மாநிலம் எரிந்து கொண்டிருக்கும் போது நான் ஏன் வீட்டில் இருக்க வேண்டும். நான் வீட்டுச்சிறையில் இல்லை என்றால் என்னை ஏன் வெளியில் விட மறுக்கின்றனர்.” என்று, தான் வீட்டுச் சிறையில் இருப்பதை அழுத்தமாக கூறினார்.

மேலும், பேசிய அவர் “எனது மகன் உமர் அப்துல்லா சிறையில் இருக்கிறார். நான் நம்பிக்கை வைத்த இந்தியா இது அல்ல. காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு செய்தது ஜனநாயக விரோத நடவடிக்கை. எங்களின் முதுகில் குத்தாதீர்கள், நெஞ்சில் சுடுங்கள். மத்திய அரசின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாடுவோம். நாங்கள் கல் வீசுபவர்கள் அல்ல; அமைதியான முறையில் தீர்வு காண விரும்புகிறோம்.” என்று தெரிவித்தார்.

ஃபருக் அப்துல்லா ஊடகங்களை சந்திக்கும்போது, அவர் வீட்டின் உள்ளேயும், வீட்டின் வெளியே செய்தியாளர்களும் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், ஃபருக் அப்துல்லாவை மத்திய அரசு, அறிவிக்கப்படாத வீட்டுக் காவலில் வைத்திருப்பது உறுதியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories