இந்தியா

கடும் எதிர்ப்புக்கு  மத்தியில் நிறைவேறியது கருத்துரிமையை நெரிக்கும் ‘ஊபா’ சட்டத்திருத்த மசோதா!

மக்களவையில் இன்று சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத் திருத்த மசோதா (UAPA) எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டது.

கடும் எதிர்ப்புக்கு  மத்தியில் நிறைவேறியது கருத்துரிமையை நெரிக்கும் ‘ஊபா’ சட்டத்திருத்த மசோதா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மக்களவையில் இன்று சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத் திருத்த மசோதா (UAPA) எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டது.

என்.ஐ.ஏ எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பை மேலும் வலுப்படுத்தவும், அதன் அதிகாரத்தை அதிகப்படுத்தவும் வகைசெய்யும் 2 மசோதாக்களை மத்திய அரசு சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இதைத்தொடர்ந்து, சட்ட விரோத செயல்கள் தடுப்புச் சட்ட மசோதா மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.

‘ஊபா’ (UAPA) எனும் இந்தக் கருப்புச் சட்டத்தின் மூலம் ஒருவரைக் கைது செய்து 6 மாதங்களுக்கு விசாரணை அறிக்கையே தாக்கல் செய்யாமல் சிறையில் அடைத்து வைத்திருக்க முடியும். கைது செய்யப்பட்டவருக்கு ஆதரவாக வாதாடும் வழக்கறிஞரையும் ஊபா சட்டத்தின் மூலம் கைது செய்யமுடியும்.

இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடும் அமைப்புகளைத் தடை செய்யவும், சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடுவோரைக் கைது செய்யவும் உருவாக்கப்பட்ட ஊபா சட்டம், கருத்துச் சுதந்திரத்திற்கெதிரான அடக்குமுறைக்காகத்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதை மேலும் வலுப்படுத்தும் வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இன்று மக்களவையில் நடைபெற்ற விவாதத்தில் பேசிய வி.சிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி, “ஊபா ஒரு அரச பயங்கரவாதச் சட்டம். இச்சட்டம் ஊடகவியலாளர்களையும் ஜனநாயகவாதிகளை எழுத்தாளர்களையும் பழிவாங்கப் பயன்படுத்தப்படுகிறது” எனக் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தார்.

அதிகார வர்க்கத்தால் பழிவாங்கும் நோக்கில் பயன்படுத்தப்படும் இந்தச் சட்டத்தால் பத்திரிகையாளர்களும், எழுத்தாளர்களும் குறிவைக்கப்பட்டுள்ளனர் எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே, பத்திரிகையாளர் ஷாஹைனா மற்றும் பல சமூக ஆர்வலர்கள் ‘ஊபா’ சட்டத்தின் மூலம் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தேசப் பாதுகாப்பு எனும் பெயரில் கருத்துதுரிமையையும், போராடிப் பெறும் உரிமையையும் நசுக்கும் இந்தக் கொடிய சட்டத்திற்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சியினரும், சமூக ஆர்வலர்களும் குரல் கொடுத்து வருகிறார்கள். ஆனாலும், எதிர்ப்புகளுக்கு மத்தியில் ‘ஊபா’ சட்டத்திருத்த மசோதா மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories