இந்தியா

முதல்வர்களைத் ‘தெறிக்கவிடும்’ கர்நாடகா : தொடரும் நிலையற்ற ஆட்சிகளும், தடுமாறும் அரசியல் கட்சிகளும்!

கர்நாடக மாநிலம், இதுவரை 25 முதல்வர்களைக் கண்டபோதிலும், வெறும் மூன்று முதல்வர்கள் மட்டுமே 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சி செய்யப்பட்டுள்ளது.

முதல்வர்களைத் ‘தெறிக்கவிடும்’ கர்நாடகா : தொடரும் நிலையற்ற ஆட்சிகளும், தடுமாறும் அரசியல் கட்சிகளும்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கர்நாடக மாநில மக்கள், எஸ்.நிஜலிங்கப்பா தொடங்கி, குமாரசாமி வரை இதுவரை 25 முதல்வர்களைக் கண்டபோதிலும், வெறும் மூன்று முதல்வர்கள் மட்டுமே 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சி செய்துள்ளனர்.

கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான ம.ஜ.த-காங்கிரஸ் கூட்டணி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததையடுத்து, குமாரசாமி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். குமாரசாமி 14 மாதங்கள் மட்டுமே முதல்வராகப் பதவி வகித்தார். கர்நாடக அரசியல் வரலாற்றில் ஆட்சி கவிழ்க்கப்படுவது இது முதன்முறையல்ல.

மைசூரு மாநிலம் 1956ல் உதயமானது. பின்னர் 1972ல் கர்நாடகா எனப் பெயர் மாற்றம் பெற்றது. இதுவரை 25 முதல்வர்களைக் கண்டுள்ள கர்நாடக மாநிலம், எஸ்.நிஜலிங்கப்பா (1962-68), டி.தேவராஜா (1972-77), சித்தராமையா (2013-18) ஆகிய மூன்று முதல்வர்களை மட்டுமே 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சிபுரிய வைத்துள்ளது. அந்த மூன்று முதல்வர்களுமே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

1999ல் காங்கிரஸ் தலைமையில் அமைந்த அரசில் முதல்வராகப் பதவியேற்ற எஸ்.எம்.கிருஷ்ணா எவ்விதச் சிக்கலுமின்றி ஆட்சி புரிந்தார். கர்நாடகத்தின் சிறந்த முதல்வர்களில் ஒருவராகப் போற்றப்பட்ட எஸ்.எம்.கிருஷ்ணா தனது ஆட்சி முடிவதற்கு 6 மாதங்களுக்கு முன்பே சட்டப்பேரவையைக் கலைத்துவிட்டுத் தேர்தலைச் சந்தித்ததால் முழுமையாக ஆட்சிபுரியும் வாய்ப்பை இழந்தார்.

குமாரசாமி முதன்முறையாக 2006ல் பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்து முதல்வரானார். ஆனால், அந்த ஆட்சி இரண்டு ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. பா.ஜ.க-வுடனான அதிகாரப் பகிர்வில் குமாரசாமி உடன்படாததையடுத்து, பா.ஜ.க தலைமையிலான ஆட்சிக்கு அளித்த ஆதரவை திரும்பப்பெற்றார்.

முதல்வர்களைத் ‘தெறிக்கவிடும்’ கர்நாடகா : தொடரும் நிலையற்ற ஆட்சிகளும், தடுமாறும் அரசியல் கட்சிகளும்!

கட்ந்த 2007ல் பா.ஜ.க-வின் பி.எஸ்.எடியூரப்பா முதல்வரானார். தேவகவுடா மற்றும் குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளம் தனது ஆதரவை திரும்பப் பெற்றதையடுத்து, எடியூரப்பா 7 நாட்கள் மட்டுமே முதல்வராக இருந்தார். அதன்பிறகு, குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது.

2008ல் பா.ஜ.க வெற்றிபெற்று எடியூரப்பா, இரண்டாவது முறையாக முதல்வரானார். ஆனால், ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக 2011ல் அவர் முதல்வர் பதவியில் இருந்து விலகினார். பின்னர் சதானந்த கவுடா முதல்வராகப் பொறுப்பேற்றார்.

2013ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று, சித்தராமையா ஆட்சியமைத்தார். கிட்டத்தட்ட 26 ஆண்டுகளுக்குப் பிறகு சித்தராமையாவின் இந்த ஆட்சி முழுமையாக 5 ஆண்டுகள் நீடித்தது.

2018ல் நடைபெற்ற தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் தொங்கு சட்டப்பேரவை அமைந்தது. எடியூரப்பா மீண்டும் முதல்வரானார். 2018ம் ஆண்டு மே 17ம் தேதி முதல்வராகப் பொறுப்பேற்ற எடியூரப்பா, பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் மே 23-ஆம் தேதி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகு, மீண்டும் காங்கிரஸ் உதவியுடன் முதல்வரானார் குமாரசாமி. இந்த ஆட்சி 14 மாதங்கள் மட்டுமே நீடித்த நிலையில் பல்வேறு அரசியல் குழப்பங்களுடன் நேற்று முடிவுக்கு வந்துள்ளது.

கர்நாடகத்தில் பா.ஜ.க, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் எந்த முதல்வரும் தனது ஆட்சியை முழுமையாகப் பூர்த்தி செய்ததில்லை எனும் நிலை இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

banner

Related Stories

Related Stories