இந்தியா

தமிழகத்தில் அமைந்தது ஒட்டுமொத்த இந்தியாவிலும் நிகழ்ந்திருக்கவேண்டும் : டி.கே.ரங்கராஜன் உரை

தேர்தலில் மிக அதிக பணம் செலவழித்த பா.ஜ.க, பணம் வீணாவதாக “ஒரே நாடு ஒரே தேர்தல்” பற்றிப் பேசுவது வேடிக்கை என மாநிலங்களவையில் டி.கே.ரங்கராஜன் எம்.பி பேசியுள்ளார்.

தமிழகத்தில் அமைந்தது ஒட்டுமொத்த இந்தியாவிலும் நிகழ்ந்திருக்கவேண்டும் : டி.கே.ரங்கராஜன் உரை
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தேர்தலில் மிக அதிக பணம் செலவழித்த பா.ஜ.க, பணம் வீணாவதாக “ஒரே நாடு ஒரே தேர்தல்” பற்றிப் பேசுவது வேடிக்கை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி., டி.கே.ரெங்கராஜன் மாநிலங்களவையில் பேசியுள்ளார்.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் நேற்று (ஜூன் 24) மாலை குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் பங்கேற்று உரையாற்றியபோது டி.கே.ரெங்கராஜன் பேசியதாவது :

தேர்தல் முடிவுகள் யாரும் நம்பமுடியாத அளவிற்கு மிகப்பெரிய பெரும்பான்மையை, பா.ஜ.க-விற்கு அளித்திருக்கிறது. மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக ஒரு வலுவான கூட்டணியை தமிழகத்தில் எங்களால் அமைக்க முடிந்தது. அதன்மூலமாக எங்களால் வாக்காளர்களையும் ஒன்றுபடுத்த முடிந்தது. அதுபோன்று ஒட்டுமொத்த இந்தியாவிலும் நடந்திருக்க வேண்டும்.

2014-ல் பா.ஜ.க அரசு என்ன செய்தது? மோடி அரசாங்கம் என்ன செய்தது? பணமதிப்பிழப்பைக் கொண்டுவந்தது. பின்னர் ஜிஎஸ்டி-யைக் கொண்டு வந்தது. விவசாயிகள் தற்கொலைகள் அதிகரித்திருக்கின்றன. சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்கள் அழிந்துவிட்டன. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்திருக்கின்றன.

தலித்துகளுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்திருக்கின்றன. சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்திருக்கின்றன. இத்தனைக்குப் பிறகும் பா.ஜ.க-வினரால் வெற்றி பெற முடிந்திருக்கிறது. இது எப்படி? ஒரே மந்திரம், புல்வாமா மற்றும் பயங்கரவாதிகள் தாக்குதல். பிரதமர் மோடி பணமதிப்பிழப்பை அறிவித்தபோது அது பயங்கரவாதத்தை ஒழித்திடும் என உறுதியளித்தார். ஆனால் இப்போதும் பயங்கரவாதம் மூர்க்கமாக இருக்கிறது.

தமிழகத்தில் அமைந்தது ஒட்டுமொத்த இந்தியாவிலும் நிகழ்ந்திருக்கவேண்டும் : டி.கே.ரங்கராஜன் உரை

2014 - 2018 காலகட்டத்தில் ஒட்டுமொத்த முதலாளித்துவ வர்க்கமும் ஒன்றிணைந்து ஆட்சியாளர்களுக்கு உதவி இருக்கிறது. அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு 2014-ல் 23 பில்லியன் ரூபாய் அளவிற்கு சொத்து இருந்தது. 2018-ல் அது 55 பில்லியன்களாக உயர்ந்திருக்கிறது. 2014-ல் அதானியின் சொத்து மதிப்பு 2.6 பில்லியன். 2018-ல் அது 11.9 பில்லியன். இதேபோன்றே நம் நாட்டிலுள்ள அனைத்து முதலாளிகளின் சொத்துக்களின் மதிப்பும் உயர்ந்திருப்பதைப் பார்க்கமுடியும்.

இந்த அரசாங்கம், முதலாளிகளுக்கு உதவியது. அதற்குக் கைம்மாறு செய்யும் விதத்தில் அவர்கள் இந்த அரசுக்கு உதவி இருக்கிறார்கள். மிகப்பெரிய அளவிலான கார்ப்பரேட்டுகளின் பணம், கார்ப்பரேட்டுகளின் ஊடகம் என அனைத்தும் இந்த அரசுக்கு ஆதரவாக இருந்திருக்கின்றன.

இந்தத் தேர்தலில் பா.ஜ.க 27 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்குச் செலவு செய்திருப்பதாக ஓர் ஆய்வு மதிப்பிட்டிருக்கிறது. அதாவது மொத்தத் தேர்தல் செலவினத் தொகையில் 45% பா.ஜ.க செலவு செய்திருக்கிறது. இது இப்படி இருக்க, தேர்தலில் பணம் அதிகம் வீணாகிறதென “ஒரே நாடு ஒரே தேர்தல்” என கூவிக்கொண்டிருக்கிறார்கள்.” இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

banner

Related Stories

Related Stories