இந்தியா

ரேபரேலி மக்களுக்கு நன்றி தெரிவித்து சோனியா காந்தி கடிதம்!

மக்களவைத் தேர்தலில் 4வது முறையாக உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதி மக்கள் தன்னை வெற்றியடையச் செய்ததற்கு நன்றி தெரிவித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

ரேபரேலி மக்களுக்கு நன்றி தெரிவித்து சோனியா காந்தி கடிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

17 நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்திருக்கிறது. இதற்கான முடிவுகளில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி இரண்டாவது முறையாக பின்னடைவை சந்தித்துள்ளது.

இந்நிலையில், காங்கிரஸின் பாரம்பரிய தொகுதியான உத்தர பிரதேசத்தின் ரேபரேலியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார் அக்கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி. பாஜக வேட்பாளரை விட ஒரு லட்சத்து 67 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சோனியா காந்தியை ரேபரேலி மக்கள் வெற்றிபெறச் செய்துள்ளனர்.

இதனையடுத்து, தனக்கு வாக்களித்து 4வது முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக அனுப்பிவைத்த ரேபரேலி மக்களுக்கு நன்றி தெரிவித்து கடிதம் வெளியிட்டுள்ளார் சோனியா காந்தி.

அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டதாவது,

“என் மீது நம்பிக்கை வைத்து, ரேபரேலி தொகுதியின் மக்களவை உறுப்பினராக 4வது முறையாக தேர்வு செய்துள்ளீர்கள். அதற்காக உளமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் நான் பெற்ற எதையும் தியாகம் செய்வேன் என்றும், இந்த நிலைப்பாட்டில் இருந்து ஒரு போதும் பின்வாங்க மாட்டேன்” என்று அவர் தொகுதி மக்களுக்கு உறுதியளித்துள்ளார்.

மேலும், என் குடும்பம், சொத்து என அனைத்தும் நீங்கள்தான். எனக்கான சக்தியை உங்களிடம் இருந்தே பெற்று வருகிறேன் என குறிப்பிட்டுள்ளார். நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கமிட்டிக்கு மிகவும் சோதனை காலமாகவே அமைந்துள்ளது. ஆனால், என் மீது நீங்கள் வைத்திருக்கும் தீராத அன்பாலும், நம்பிக்கையாலும் இச்சோதனைகளை வென்றிட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.

இதுமட்டுமில்லாமல் காங்கிரஸின் பாரம்பரிய தொகுதியாக கருதப்படும் ரேபரேலியில் தனக்கு எதிராக எந்த வேட்பாளர்களையும் நியமிக்காத சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளுக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார் சோனியா காந்தி.

banner

Related Stories

Related Stories