திமுக அரசு

“பெண்களின் முன்னேற்றத்திற்கு தி.மு.க அரசு செய்தது என்ன?” : பட்டியலிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

"திராவிட முன்னேற்றக் கழகம் மகளிருக்கான ஏராளமான திட்டங்களைத் தீட்டி உள்ளது." எனக் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மகளிர் முன்னேற்றத்திற்கான திட்டங்களைப் பட்டியலிட்டார்.

“பெண்களின் முன்னேற்றத்திற்கு தி.மு.க அரசு செய்தது என்ன?” : பட்டியலிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடனுதவிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

இவ்விழாவில் மாநிலம் முழுவதும் 58 ஆயிரத்து 463 மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 7 லட்சத்து 56 ஆயிரத்து 142 பயனாளிகளுக்கு 2 ஆயிரத்து 750 கோடி ரூபாய் கடனுதவி வழங்கிமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை வருமாறு:

அரசு நலத்திட்டங்கள் வழங்கக்கூடிய இந்த சிறப்பான நிகழ்ச்சிக்கு, மன்னிக்கவும், சிறப்பான நிகழ்ச்சி மட்டுமல்ல, சிறப்பான ஒரு மாநாட்டிற்கு வருகை தந்து முன்னிலை உரை ஆற்றியிருக்கக்கூடிய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அவர்களே!

விழாவின் தொடக்கத்தில் வரவேற்புரை ஆற்றியிருக்கக்கூடிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் அரசு முதன்மைச் செயலாளர் அமுதா, ஐ.ஏ.எஸ்., அவர்களே!

முதன்மைச் செயலாளர் அமுதா அவர்களைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்று சொன்னால், ஊரக வளர்ச்சித் துறையின் செயலாளராக பொறுப்பேற்றிருக்கக்கூடிய அமுதா, ஐ.ஏ.எஸ்., நான் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தபோது, அவர் டில்லியில் ஒரு அதிகாரியாக பணியாற்றிக் கொண்டிருந்தார், அதுவும் பிரதமருடைய அலுவலகத்தில் அவர் பணிபுரிந்துகொண்டிருந்தார். ஊரக உள்ளாட்சி, அதிலும் குறிப்பாக, மகளிர் சுய உதவிக்குழுக்களை மேம்படுத்த வேண்டும் என்று நான் தொடர்ந்து சிந்தித்தேன்.

அதிலும் குறிப்பாக, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய வகையில், அவர்கள் வளர்ச்சி பெறக்கூடிய நிலையில், மகளிர் சுய உதவிக் குழு பணியாற்றிட வேண்டும் என்று நான் கருதினேன். அப்படி கருதிய நேரத்தில், அதற்கு யாரை செயலாளராக, யாரிடத்தில் இந்தப் பொறுப்பை ஒப்படைக்க வேண்டுமென்று நாங்கள் ஆலோசனை நடத்தியபோது, என்னுடைய நினைவிற்கு வந்தது நம்முடைய ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருக்கக்கூடிய திருமதி அமுதா அவர்களுடைய நினைவுதான் எனக்கு நினைவிற்கு வந்தது.

டில்லியில், அதுவும் பிரதமர் அலுவலத்தில் பணிபுரிந்துகொண்டிருக்கக்கூடிய அந்த அதிகாரியை நாம் அழைத்தால் வருவாரா என்று நான் யோசித்தது உண்டு. அதற்குப் பிறகு இந்தத் தகவல் அவருக்குத் தெரிந்தவுடன், நிச்சயமாக நான் வருகிறேன், உறுதியாக நான் வருகிறேன், அதற்குரிய சம்மதத்தை ஒன்றிய அரசிடம், குறிப்பாக பிரதமரிடத்திலும் நான் அனுமதி பெற்றுவிட்டேன், வருகிறேன் என்று சொல்லி, அதற்குப்பிறகு, அவர் அங்கிருந்து மாற்றல் ஆகி நம்முடைய மகளிர் சுய உதவிக் குழுவைக் கட்டிக் காக்கக்கூடிய ஊரக வளர்ச்சித் துறையின் செயலாளராக இன்றைக்கு அவர் பொறுப்பு ஏற்றுக்கொண்டிருக்கிறார் என்று சொன்னால், உள்ளபடியே நமக்கெல்லாம் மிக மகிழ்ச்சியாக அமைந்திருக்கிறது.

காரணம், அவர் தர்மபுரி மாவட்டத்தில் ஆட்சித்தலைவராக இருந்தபோதுதான், நான் அன்றைக்கு உள்ளாட்சித் துறை அமைச்சராக, துணை முதலமைச்சர் என்ற அந்தப் பொறுப்பை ஏற்றிருந்தபோது அந்த மாவட்டத்தில் பல்வேறு பணிகளை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்கு திருமதி அமுதா, ஐ.ஏ.எஸ் அவர்கள் துணை நின்றார்கள், அன்றைக்கு அங்கு ஆட்சித்தலைவராக அந்தப் பணிகளையெல்லாம் சிறப்பாகச் செய்து கொடுத்திருக்கிறார்கள். இப்போது மகளிர் சுய உதவிக் குழுவைப் பற்றி நான் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை. திருமதி அமுதா அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கக்கூடிய காரணத்தால், அது தானாக வளரும், தானாக சிறப்பு பெறும் என்ற நம்பிக்கை எனக்கு வந்திருக்கிறது.

“பெண்களின் முன்னேற்றத்திற்கு தி.மு.க அரசு செய்தது என்ன?” : பட்டியலிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

அதேபோல், அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் நடுவன் அரசினுடைய துணை அமைச்சராக இருந்த டாக்டர் ஜெகத்ரட்சகன் அவர்களே!
சட்டமன்ற உறுப்பினர்களே..! பல்வேறு துறைகளை சார்ந்திருக்கக்க கூடிய உயர் அதிகாரிகளே!

அரசு அதிகாரிகளே! அரசு அலுவலர்களே! உள்ளாட்சிப் பிரதிநிதிகளே! தொலைக்காட்சி, பத்திரிகை, ஊடக நண்பர்களே!காவல் துறையைச் சார்ந்திருக்கக்கூடிய நண்பர்களே!

இங்கே எழுச்சியோடு திரண்டிருக்கக்கூடிய பெரியோர்களே ! தாய்மார்களே ! சகோதரிகளே! குறிப்பாக என் பாசத்திற்கும் பேரன்பிற்கும் உரிய மகளிர் சுய உதவிக் குழுவைச் சார்ந்திருக்கும் சகோதரிகளே ! தாய்மார்களே ! உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம்.

இந்த நிகழ்ச்சியின் துவக்கத்தில் வரவேற்புரை நல்கியிருக்கக்கூடிய இந்தத் துறையின் செயலாளர் திருமதி அமுதா, ஐ.ஏ.எஸ் அவர்கள், இந்த சுய உதவிக் குழு எப்போது தொடங்கப்பட்டது? யாரால் தொடங்கி வைக்கப்பட்டது? திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி பொறுப்பேற்றவுடன், தலைவர் கலைஞர் அவர்கள் தர்மபுரி மாவட்டத்தில்தான் இதை முதன்முதலாக தொடங்கி வைத்தார். எந்த நோக்கத்தோடு, எந்த அடிப்படையில் இது தொடங்கி வைக்கப்பட்டது என்றால், அதற்கும் அவரே விளக்கம் சொன்னார். பெண்கள், மகளிர், சகோதரிகள் யாருடைய தயவையும் எதிர்பார்க்காமல் அவரவர்கள் சொந்தக் காலிலே நிற்கவேண்டும். அவர்களுக்கு ஒரு தன்னம்பிக்கையை, தன்மானத்தோடு வாழக்கூடிய அளவிற்கு தன்னம்பிக்கையை தந்தாக வேண்டும். அந்த அடிப்படையில்தான் தலைவர் கலைஞர் அவர்கள் இந்த சுய உதவிக் குழுவைத் தொடங்கி வைத்தார்கள்.

அதற்குப் பிறகு நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக, துணை முதலமைச்சராக பொறுப்பில் இருந்த நேரத்தில் எந்த அளவிற்கு கவனம் செலுத்தப்பட்டது, எந்த அளவிற்கு இது ஊக்குவிக்கப்பட்டது என்பதைப் பற்றியெல்லாம் எல்லோரும் பேசியிருக்கிறார்கள். எனவே, அதைப்பற்றி நான் அதிகம் பேசவேண்டிய அவசியமில்லை.

இன்றைக்கு மட்டும் தமிழ்நாடு முழுவதும் கணக்கெடுத்துப் பார்த்தால், மகளிர் சுய உதவிக் குழுக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்தத் திட்டம் புதிதாக புதுப்பித்து, வங்கிகள் மூலமாக பெற்றிருக்கும் கடனை, அதாவது மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 3 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கடனுதவி வழங்குகிற விழா இந்த விழா.

திருத்தணியில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் உள்ள எல்லா மாவட்டத்திலும் இந்த நிகழ்ச்சி இன்று நடந்துகொண்டிருக்கிறது. அந்த வகையில், இன்று திருத்தணியில் நடைபெறுவதற்கான ஒரு சூழ்நிலையை உருவாக்கி அதில் நானும் கலந்துகொண்டு உங்கள் அனைவரையும் சந்திக்கக்கூடிய வாய்ப்பைப் பெற்றமைக்கு முதலில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் அவர்களுக்கு நான் என்னுடைய இதயபூர்வமான நன்றியை, வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

எப்போதும் அமைச்சர்களை பொறுத்தவரை, என்னதான் தமிழ்நாட்டின் அமைச்சராக இருந்தாலும், அவர்கள் மாவட்டத்தை ஒரு முக்கியத்துவம் கொடுத்து அதைக் கவனிப்பதுண்டு. அது அனைவருக்கும் இருக்கக்கூடிய இயல்பு. நானே கூட, முதலமைச்சராக இருந்தாலும், கொளத்தூருக்குச் சென்றுவிட்டால் எனக்கு ஒரு வேகம் வந்துவிடும். அதுபோல, அமைச்சர்களுக்கு அந்த எண்ணம்தான் வரும், அது தவறு என்று சொல்லமாட்டேன். மக்கள் பணி, மக்களுக்காக ஆற்றக்கூடிய கடமை. அதனால் இந்த நிகழ்ச்சியைக் கூட முதன்முதலில் நடத்தவேண்டும் என்று நான் பெரியகருப்பன் அவர்களை அழைத்துப் பேசியபோது, அவரிடமிருந்து நான் என்ன எதிர்பார்த்தேன் என்றால், எங்கள் மாவட்டம் சிவகங்கையில் நடத்துகிறோம், அங்கு வாருங்கள் என்றுதான் சொல்லுவார் என்று நினைத்தேன்.

ஆனால், அப்படி சொல்லாமல் உங்களுக்கு எது வசதியோ, நீங்கள் என்ன விரும்புகிறீர்களோ, அந்த அடிப்படையில் நான் நிகழ்ச்சியை நடத்துவேன் என்ற உறுதி தந்து, அந்த வகையில் இன்றைக்கு இந்த நிகழ்ச்சியை திருத்தணியில் நடத்தக்கூடிய ஒரு சூழலை அமைத்துத் தந்ததமைக்காக மீண்டும், மீண்டும் மாண்புமிகு அமைச்சர் பெரியகருப்பன் அவர்களுக்கும், இந்தத் துறையின் செயலாளர் திருமதி அமுதா, ஐ.ஏ.எஸ் அவர்களுக்கும் மற்றும் இந்தத் துறையைச் சார்ந்திருக்கும் அனைத்து அரசு அலுவலர்களுக்கும் நான் இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

“பெண்களின் முன்னேற்றத்திற்கு தி.மு.க அரசு செய்தது என்ன?” : பட்டியலிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

இன்று திருத்தணியில் தொடங்குகிற இந்த நிகழ்ச்சியைப் பொறுத்தவரைக்கும், தமிழ்நாடு முழுவதும் உள்ள 58 ஆயிரத்து, 463 சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 7 லட்சத்து 56 ஆயிரத்து 142 பயனாளிகளுக்கு 2 ஆயிரத்து 750 கோடி ரூபாய் அளவுக்குக் கடனுதவியும். நலத்திட்ட உதவிகளும் கிடைக்க இருக்கிறது. நீங்கள் இதை நல்லவகையில் பயன்படுத்தி சிறப்பு பெறவேண்டும் என்று நான் உங்களை உளமார வாழ்த்துகிறேன்.

நான் நினைத்துப் பார்க்கிறேன். இங்கு ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டிருக்கக்கூடிய வகையில் ஒரு விழா என்பது மட்டுமல்ல, ஒரு மாநாடு போல இது ஏற்பாடு செய்யப்பட்டு இந்த நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதுவும் குறிப்பாக, நான் வந்தவுடனே உங்களுக்கு நடுவில் நடந்துவந்து உங்களை எல்லாம் நான் சந்தித்தேன், நீங்கள் வாழ்த்து சொன்னீர்கள், அதற்கு நன்றி.

அப்போது என்னுடைய மனதில் என்ன நினைத்தேன் என்றால், இதில் ஆண்கள் 25 சதவீதமும், பெண்கள் 75 சதவீதமும் இருக்கிறீர்கள். இதை ஏன் நான் சொல்கிறேனென்றால், அதில் ஒரு விஷயம் இருக்கிறது. இவ்வளவு அமைதியாக ஒரு கட்டுப்பாட்டுடன் நீங்கள் அமர்ந்திருக்கக்கூடிய காட்சியைப் பார்க்கும்போது, இனிமேல் மகளிர்தான் பெண்கள் தான் முடிவு செய்ய முடியும் என்ற நிலை உருவாகிறது. சாதாரணமாக பெண்கள் இவ்வளவு அமைதியாக உட்கார்ந்து எங்கும் நான் பார்த்ததில்லை. இவ்வளவு பெரிய கூட்டத்தில் இவ்வளவு கட்டுப்பாட்டோடு நீங்கள் உட்கார்ந்திருக்கிறீர்கள் என்றால், இதிலேயே நீங்கள், இந்த மகளிர் சுய உதவிக் குழுக்களைப் பொறுத்தவரைக்கும் மிகப் பெரிய வெற்றியை தொடர்ந்து நீங்கள் பெறப்போகிறீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு வந்திருக்கிறது.

உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால், நான்கு பெண்கள் ஒரு இடத்தில் இருந்தால் அந்த இடம் கலகலவென இருக்கும். ஆயிரக்கணக்கில் பெண்கள் உட்கார்ந்திருக்கும்போது, இவ்வளவு அமைதியாக, இவ்வளவு கட்டுப்பாட்டோடு உட்கார்ந்திருக்கக்கூடிய இந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல் இருக்கிறது.

2006-2011 ஆண்டு காலத்தில் நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது பல்லாயிரக்கணக்கான மகளிருக்கு பல மணி நேரம் நின்று கொண்டே கடனுதவியை வழங்கினேன், சுழல் நிதியை வழங்கினேன். அதன் காரணமாக தமிழ்நாட்டைச் சார்ந்திருக்கக்கூடிய மகளிர் சுய உதவிக் குழு உயர்வுக்கு பாடுபட்டோம். சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தேர்தல் பிரச்சாரத்துக்கு நான் எந்த ஊருக்குப் போனாலும், அதிலும் குறிப்பாக கிராமப் புறங்களில் பிரச்சாரம் செய்தால்- நான் மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்தவள் என்றும், நீங்கள் செய்த உதவியால் தான் என் குடும்பம் நல்ல நிலைமைக்கு வந்திருக்கிறது என்று நிறைய பெண்கள் இப்போதும் என்னிடத்தில் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

அந்த அடிப்படையில் புதிய ஆட்சி அமைந்ததவுடன் - மகளிர் சுய உதவிக் குழுவை மறுபடியும் புதுப்பொலிவோடு புதுப்பிக்க வேண்டும் என்று நான் உத்தரவிட்டேன். அதை இன்றைக்கு சிறப்பாக நிறைவேற்றித் தருவதற்கு நம்முடைய அமைச்சர் அவர்களும், செயலாளர் பொறுப்பேற்றிருக்கக்கூடிய
திருமதி அமுதா, ஐ.ஏ.எஸ் அவர்களும் மற்றும் அவருக்குத் துணையாக இருக்கக்கூடிய அனைவரும் இன்றைக்கு அந்த கவனத்தை செலுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவிலேயே முதன்முதலாக பெண்களுடைய பொருளாதார முன்னேற்றத்துக்கு அடித்தளம் அமைத்த ஆட்சிதான் தலைவர் கலைஞர் தலைமையில் இருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி. அந்த ஆட்சியில்தான் இந்தக் குழுக்கள் உருவாக்கப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தில் முதன் முதலில் தொடங்கியிருந்தாலும், அதைத் தொடர்ந்து சேலம், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் அது தொடங்கப்பட்டது. அடுத்து வந்த ஆட்சி அந்தத் திட்டத்தை முறையாக செயல்படுத்தவில்லை. நான் அரசியலாக்க விரும்பவில்லை. இந்த சுய உதவிக் குழுவின் வரலாறை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் கூறுகிறேன்.

1996 ஆம் ஆண்டு மீண்டும் கலைஞர் முதலமைச்சராக பொறுப்பேற்றதற்குப் பிறகுதான் தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டன. முதலில் 5177 சுய உதவிக் குழுக்களும், அதற்கு அடுத்த ஆண்டில் 7 மாவட்டங்களில் 6014 மகளிர் சுய உதவிக் குழுக்களும் - அதற்கு அடுத்த ஆண்டில் 8 மாவட்டங்களில் 15,029 சுய உதவிக் குழுக்களும் உருவாக்கப்பட்டது. இப்படியே அது வளர்ந்தது.

2006 ஆம் ஆண்டு நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த போது ஆயிரக்கணக்கு என்பது லட்சக்கணக்கு ஆனது.

இன்று தமிழ்நாடு முழுவதும் 7.22 லட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதை பெருமையோடு நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். இதில் ஒரு கோடியே 6 லட்சத்து 68 ஆயிரம் மகளிர் உறுப்பினராக இடம்பெற்றிருக்கிறார்கள்.

“பெண்களின் முன்னேற்றத்திற்கு தி.மு.க அரசு செய்தது என்ன?” : பட்டியலிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

இத்தனை லட்சம் குழுக்கள் செயல்படுகிறது என்றால் - ஒரு கோடிக்கும் அதிகமான மகளிர் இதில் இயங்கி வருகிறார்கள் என்றால் - அதற்கு விதை போட்டவர் தான் நம்முடைய இதயத் தலைவர், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள்தான் என்பதை நான் அழுத்தந்திருத்தமாக மகிழ்ச்சியோடு தெரிவிக்க விரும்புகிறேன். அதனால் தான் மகளிர் நலம் காத்த மாண்பாளர் என்று தலைவர் கலைஞர் அவர்களை இன்றைக்கும் போற்றிக்கொண்டிருக்கிறோம்.

மகளிரை ஒருங்கிணைக்கிறோம் – கடன் கொடுக்கிறோம்- அதை அவர்கள் திருப்பிக் கட்டுகிறார்கள் - இது ஏதோ ஒரு வழக்கமான திட்டம் (ஸ்கீம்) என்று நினைக்கக்கூடாது. எத்தனையோ கடன் கொடுக்கும் திட்டத்தைப் போல இதுவும் ஒரு திட்டம் என்று சொல்ல முடியாது.

ஒரு பெண், யார் தயவையும் எதிர்பார்த்துக் காத்திருக்காமல் அவரவர்கள் சொந்தக் காலில் நிற்பதற்கு, சொந்தக் காலில் நின்று அவர்கள் வாழ்க்கையை நடத்துவதற்கு அடித்தளம் அமைக்கக் கூடிய திட்டம் தான் இந்த மகளிர் சுய உதவிக் குழுத் திட்டம்.

  • சிக்கனத்தை உருவாக்குவது

  • அதன் மூலமாக சேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்துவது

  • குடும்ப எல்லைகளைத் தாண்டி சிந்திக்கும் திறனை உருவாக்குவது

  • தானே சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்குவது

  • அனைவரும் சேர்ந்து கூட்டுறவு மனப்பான்மையுடன் வாழந்திட வேண்டும்,

எத்தனையோ நல்ல குணத்தை இக்குழுக்களில் இணைவதன் மூலமாக ஒரு பெண் பெறுகிறார்.

தனிமனிதர்களாக இல்லாமல் ஒரு குழுவாக வாழும் போது ஒரு பெண் தன்னம்பிக்கை பெறுகிறார். அத்தகைய தன்னம்பிக்கையை இந்தத் திட்டம் உருவாக்குகிறது.

இந்தத் திட்டத்தின் மகுடமாக இருப்பது சுழல் நிதி. இந்த சுழல் நிதி பெண்கள், பொருளாதாரத்தின் தலைநிமிர்ந்து நிற்க தூண்டுதலாகவும் அடிப்படையாகவும் அமைந்துள்ளது.

  • இந்த நிதி ஆண்டில் மட்டும் 17,479 சுய உதவிக் குழுக்களுக்கு
    87.39 கோடி ரூபாய் சமுதாய முதலீட்டு நிதியாக விடுவிக்கப்பட்டுள்ளது.

  • மாற்றுத்திறனாளி, நலிவுற்றோர் கண்டறியப்பட்டு 5838 சங்கங்கள் மூலமாக 14.59 கோடி ரூபாய் இந்த நிதி ஆண்டில் விடுவிக்கப்பட்டுள்ளது.

  • மகளிர் தயாரிக்கும் பொருளுக்கு உரிய விலை கிடைக்கவும், அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களைச் சந்தைப்படுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

  • வட்டார அளவிலான கூட்டமைப்புகளை ஏற்படுத்துவதன் மூலமாக கூட்டுறவு வங்கிக் கடன்களுக்கு ஏற்பாடு செய்து வருகிறோம்.

  • இந்தியாவிலேயே முதன்முதலாக மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்குவதற்கான இலக்கு நிர்ணயம் செய்யும் முறை நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோதுதான் - 2007 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

  • இதுவரை 36 லட்சத்து, 97 ஆயிரத்து 59 குழுக்களுக்கு ஒரு லட்சத்து
    4 ஆயிரத்து 13 கோடி ரூபாய் வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது.

  • இந்த ஆண்டில் 20 ஆயிரம் கோடி ரூபாய் கடன் தர இலக்கு நிர்ணயித்துள்ளோம்.

இதுவரை 6777 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் இந்த தொகை 10 ஆயிரம் கோடி ஆகிவிடும். அடுத்த ஆண்டுக்குள் அடுத்த 10 ஆயிரம் கோடி இலக்கை எட்டிட நான் உத்தரவிட்டுள்ளேன். சிறப்பு முகாம்கள் அமைத்து கடன் வழங்குவதை துரிதப்படுத்தவும் நான் கேட்டுக்கொண்டுள்ளேன்.

  • 10 முதல் 20 லட்சம் ரூபாய் வரை சொத்துப் பிணையம் இல்லாமல் கடன் வழங்க குறுந்தொழில் கடன் உத்தரவாத நிதியும் வழங்கப்பட்டு வருகிறது.

  • ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளை உருவாக்கவும், அக்கூட்டமைப்புகளுக்கு வங்கிகள் மூலம் கடன் வழங்கவும் உத்தரவுகள் போடப்பட்டுள்ளது. இந்த வகையில் 10 இலட்சம் முதல் ஒன்றரைக் கோடி ரூபாய் வரை கடன் பெறலாம்.

  • மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான வாழ்வாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

  • சான்று விதை உற்பத்தி மையம் செயல்படுகிறது.

  • இயற்கை பண்ணையம் என்ற திட்டம் நடைமுறையில் உள்ளது.

  • விவசாயம், கைவினைப் பொருட்கள் செய்தல், உணவு பதப்படுத்தும் தொழில் செய்தல் ஆகியவை ஊக்கப்படுத்தப்படுகிறது.

  • இவை அனைத்துக்கும் மேலாக தேசிய ஊரகப் பொருளாதார புத்தாக்கத்திட்டம் உலக வங்கியின் உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

  • மகளிர் சுய உதவிக்குழுக்களின் அனைத்துப் பொருட்களையும் சந்தைப்படுத்த வழிகாட்டி வருகிறோம்.

  • கழக ஆட்சியில் முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தை மீண்டும் புதுப்பித்து இருக்கிறோம்.

  • தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறோம்.

  • வறுமை ஒழிப்பு என்பதையும் தாண்டி, ஊரகத் தொழில் மேம்பாட்டுத் திட்டமாக இதனை வடிவமைத்துள்ளோம்.

இப்படி ஏராளமான திட்டங்களை நம்முடைய தமிழக அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டங்களை தலைப்புச் செய்திகளாக மட்டுமே சொன்னேன். இவை அனைத்தையும் விரிவாகச் சொன்னால் பல மணி நேரம் ஆகும். ஒட்டுமொத்தமாகச் சொல்ல வேண்டுமானால், மகளிர் அனைவரையும் மேம்படுத்தும் மகத்தான திட்டங்களைத் தான் நாங்கள் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

இந்தத் தேர்தலை சந்திப்பதற்கு முன்பு நான் சொன்ன உறுதிமொழிகளை முழுமையாக நாங்கள் நிறைவேற்றிவிட்டோம் என்று நான் சொல்லவில்லை, படிப்படியாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். ஆனால், நிறைவேற்ற முடியாமல் நாங்கள் விட்டுவிட மாட்டோம். அனைத்தையும் நிச்சயமாக, உறுதியாக நிறைவேற்றியே தீருவோம் என்ற அந்த உறுதியை நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

மகளிர் மேம்பாடு மூலமாக அவர்களது குடும்பமும்-அந்த குடும்பத்தின் மூலமாக சமூகமும் மேம்பாடு அடையும். சமூக மேம்பாட்டில் தான் இந்த மாநிலத்தின் மேம்பாடு அடங்கி இருக்கிறது.

திராவிட இயக்கத்தின் அடிப்படையான கொள்கையில் ஒன்று, பெண்ணுரிமை, மகளிர் மேம்பாடு என்பதாகும். பெண்களுக்கு சொத்துரிமை வேண்டும் என்ற தீர்மானம் 1929 ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் நடத்திய சுயமரியாதை இயக்க மாநாட்டில் அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தகைய தீர்மானத்தைப் போட்டவர் தந்தை பெரியார் அவர்கள். 1989 ஆம் ஆண்டு பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு என்ற சட்டத்தை நிறைவேற்றிக் காட்டியவர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள். அந்த சட்டத்தைக் கொண்டுவந்து சட்டமன்றத்தில் நிறைவேற்றுகிறபோது தலைவர் கலைஞர் சொன்னார், ''பெரியார் அந்த தீர்மானத்தைக் கொண்டு வந்த போது நான் ஐந்து வயது பையன். இன்று அவரது தீர்மானத்தை நான் சட்டமாகக் கொண்டு வரும் போது எனக்கு 65 வயது" என்று குறிப்பிட்டு அந்தச் சட்டத்தை நிறைவேற்றிக் கொடுத்தார். இதனை நான் இங்கே சுட்டிக் காட்டுவதற்குக் காரணம், பெண்களின் உரிமைக்கான இத்தகைய புரட்சிகர சீர்திருத்தத்தை நூற்றாண்டுக்கு முன்பே முழங்கிய இயக்கம் தான் திராவிட இயக்கம் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. அத்தகைய தலைவர் தான் தந்தை பெரியார் அவர்கள். அவர் வழி வந்த திராவிட முன்னேற்றக் கழகம் மகளிருக்கான ஏராளமான திட்டங்களைத் தீட்டி உள்ளது.

  • சொத்தில் பெண்களுக்கு சம உரிமை.

  • பணியிடங்களில் பெண்களுக்கு 30 விழுக்காடு இடஒதுக்கீடு.

  • உள்ளாட்சித் அமைப்புகளில் பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு.

  • கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவித்தொகை.

  • விதவைகளுக்கு மறுவாழ்வுத் திட்டம்.

  • ஆரம்ப பள்ளிக்கூடங்களில் கட்டாயமாக பெண்களைத்தான் ஆசிரியர்களாக நியமிக்கவேண்டும் என்ற சட்டம்.

  • ஏழை, எளிய குடும்பத்தில் பிறந்த பெண்ணுக்கு திருமணம் என்றால், திருமணத்திற்கு உதவி செய்யக்கூடிய திட்டம் இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழ்நாட்டில்தான் தலைவர் கலைஞருடைய ஆட்சிக்காலத்தில்தான் கொண்டுவரப்பட்டது.

  • அனைத்துக்கும் மேலாக பெண்கள் தன்னம்பிக்கையுடன் வாழ்வதற்காக உருவாக்கப்பட்ட திட்டம்தான் மகளிர் சுய உதவிக்குழு திட்டம்.

  • ஏழைப் பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்புடன் கூடிய எரிவாயு அடுப்புகள் வழங்கியது திமுக அரசு.

இப்படி பெண்களின் முன்னேற்றத்திற்காக எத்தனையோ திட்டங்களை நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறோம்.

நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும் - பொறுப்பேற்ற அன்றே மகளிருக்கு கட்டணமில்லாத பேருந்து பயணத்துக்கு உத்தரவிட்ட கைதான் இந்தக் கை.

ஐந்து பவுனுக்கு கீழ் அடமானம் வைக்கப்பட்டு பெற்ற கடனை ரத்து செய்தோம்.

மகளிர் சுய உதவிக்குழுக்கள் வாங்கிய கடன்கள் 2756 கோடி ரூபாய் ரத்து செய்யப்பட்ருக்கிறது.

அந்த வரிசையில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 3,000 கோடி ரூபாய்க்கு இன்று கடன் வழங்ககியிருக்கிறோம். இதன் மூலமாக தொழில் முனைவோர்களாக மட்டுமல்ல-தன்னம்பிக்கை உள்ளவர்களாகவும் அனைத்து மகளிரும் உயர வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருக்கிறோம். அப்படி வாழ்வதற்கான, நீங்கள் உயர்வதற்கான அனைத்து உதவிகளையும் என்னுடைய தலைமையில் இருக்கக்கூடிய, மன்னிக்க வேண்டும், என்னுடைய தலைமையில் என்று சொல்லக்கூடாது, நம்முடைய ஆட்சி இப்போது நடந்துகொண்டிருக்கிறது, நம்முடைய ஆட்சியின் மூலமாக இவைகள் எல்லாம் தொடரும், தொடரும் என்ற உறுதிகூறுகிறேன்."

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

banner

Related Stories

Related Stories