திமுக அரசு

“மழை கொட்டினாலும் இனி பாதிப்பே ஏற்படாமல் தடுப்போம்”: ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

‘கடந்த முறை ஏற்பட்ட பாதிப்புகளை அடுத்த முறை நடக்காமல் தமிழ்நாடு தடுத்து விட்டது என்ற பெயரை நாம் எடுக்க வேண்டும்’ என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“மழை கொட்டினாலும் இனி பாதிப்பே ஏற்படாமல் தடுப்போம்”: ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

‘கடந்த முறை ஏற்பட்ட பாதிப்புகளை அடுத்த முறை நடக்காமல் தமிழ்நாடு தடுத்து விட்டது என்ற பெயரை நாம் எடுக்க வேண்டும்’ என சென்னைப் பெருநகர வெள்ளப் பெருக்கைத் தணித்தல் மற்றும் நிர்வகித்தல் குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை, தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையில், சென்னைப் பெருநகர வெள்ளப் பெருக்கைத் தணித்தல் மற்றும் நிர்வகித்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சென்னைப் பெருநகர வெள்ளப் பெருக்கைத் தணித்தல் மற்றும் நிர்வகித்தல் தொடர்பான ஆலோசனைக் குழுவின் தலைவர் முனைவர் வெ.திருப்புகழ், இ.ஆ.ப., (ஓய்வு) அவர்கள், வெள்ள நீர் தேங்குவதற்கான காரணங்களை விளக்கப் படங்களுடன் எடுத்துரைத்து, அதனைத் தடுப்பதற்கு என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்பதை தங்களது குழுவின் ஆலோசனைகளாகத் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை வருமாறு:

“மழை பெய்யாதா? மழை பெய்யாதா? என்று ஏங்கி இருந்த காலம் போய் - மழை நிற்காதா? மழை நிற்காதா? என்று பதறக்கூடிய காலத்தைத்தான் கடந்த இரண்டு மாத காலமாக நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அக்டோபரில் தொடங்கி, நவம்பர் முழுக்க மழை பெய்து, - நல்லவேளை - டிசம்பர் மாதம் மழைக்கு விடுமுறை விடப்பட்டிருப்பதாகத்தான் நான் கருதிக் கொண்டிருக்கிறேன்.

கடந்த இரண்டு நாட்களாகத்தான் நாம் வெயிலைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அந்தளவுக்கு தொடர்ந்து மழை பெய்யக்கூடிய மாநிலமாக தமிழ்நாடு மாறியிருக்கிறது. 'மாமழை போற்றுதும் - மாமழை போற்றுதும்' என்று ஒரு பக்கம் போற்றினாலும், அது இன்னொரு பக்கம் ஏற்படுத்திய பாதிப்புகள் என்பதுதான் அதிகமாக இருக்கிறது. இயற்கையின் இந்தக் கொடையை நாம் தடுக்க முடியாது. ஆனால், இயற்கையின் கொடையை எதிர்கொள்ளும் திறன் படைத்தவர்களாக நாம் மாற வேண்டும். கடந்த மாதம் முழுக்கப் பெய்த மழை என்பது நமக்குக் கொடுத்துள்ள எச்சரிக்கை என்பதுதான் இது.

நாம் ஆட்சிக்கு வந்தபோது கொரோனா தொற்று மிரட்டிக் கொண்டு இருந்தது. அதனைக் கொஞ்சம் அடக்கி, கட்டுப்படுத்தியிருக்கிறோம். இப்போது ஒமைக்ரான் என்ற தொற்று மிரட்டத் தொடங்கி இருக்கிறது. இதற்கு மத்தியில் மழை, வெள்ளம். அதிலும் அதிகப்படியான மழை பெய்திருக்கிறது, வெள்ளமும் ஏற்பட்டிருக்கிறது. இப்படி தொடர்ச்சியாக பேரிடர்கள் வந்தாலும் - அவை அனைத்தையும் வெல்லக்கூடிய, திறம்படைத்ததாக, தமிழ்நாட்டின் அரசு நிர்வாகம் இருக்கிறது என்பதைத்தான் பெருமையுடன் இந்தக் கூட்டத்தில் சொல்ல விரும்புகிறேன்.

அமைச்சர்கள் முதல் அனைத்துத் துறைச் செயலாளர்கள், அரசு அலுவலர்கள் – ஏன், தலைமைச் செயலாளர் முதல் அனைத்து அலுவலர்கள் வரைக்கும், முன்களப் பணியாளர்கள் அனைவரும் களத்தில் நின்ற காரணத்தால்தான் வரலாறு காணாத மழை பெய்தாலும் பாதிப்பு என்பது மிகமிகக் குறைவாக ஏற்பட்டிருக்கிறது. முன்பு ஏற்பட்ட இறப்பு, பாதிப்புகளோடு ஒப்பிடும்போது இப்போதைய பாதிப்பு என்பது மிகமிகக் குறைவுதான்.

நான் உழைத்தேன்- காலை, மாலை என்று இரவு பகல் பாராமல், மழையில் நனைந்தபடியே நடந்து மக்களைச் சந்தித்தேன் என்று ஊடகங்கள் இன்றைக்கு நம்மைப் பாராட்டிக் கொண்டிருக்கிறது. பொது மக்களும் பாராட்டுகிறார்கள். இந்தப் பாராட்டுகள் எல்லாம், தனிப்பட்ட என்னைப் பாராட்டுவதாக நினைக்கவில்லை. தமிழ்நாடு அரசே மழையில் நனைந்து மக்களைக் காப்பாற்றியிருக்கிறது என்ற அடிப்படையில்தான் நான் இந்தப் பாராட்டுகளைப் பார்க்கிறேன். முன்களப் பணியாளர்களோடு நானும் ஒரு பணியாளராகவே களத்தில் நிற்கிறேன்; நிற்பேன் என்ற உறுதியை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

“மழை கொட்டினாலும் இனி பாதிப்பே ஏற்படாமல் தடுப்போம்”: ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

இதுபோன்ற பேரிடர்கள் ஏற்படும்போது, மனித உயிரிழப்புகள், பொதுச் சொத்துக்கள் மற்றும் உட்கட்டமைப்புகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை வெகுவாகக் குறைத்து, தமிழ்நாட்டை அனைத்து வகையான பேரிடர்களிலிருந்து திறம்பட எதிர்கொள்ள முடியும். அதற்கான திட்டமிடல்களைத் தொடங்குவதற்கான முதல் கூட்டம்தான் இது.

பேரிடர் தடுப்புப் பணிகள் என்பது, பேரிடர் காலங்களில் மக்களைக் காப்பது மட்டுமல்ல, அத்தகைய பேரிடர் ஏற்படாத சூழலை உருவாக்கிடுவதுதான் மிகமிக முக்கியமானது. இந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு சென்னை பெருநகரத்தை வெள்ள நீர் சூழாமல் தவிர்க்கவும், தடுக்கவும் பெருநகர வெள்ள நீர் மேலாண்மைக் குழு அமைக்கப்படும் என்று சட்டப் பேரவையில் ஏற்கெனவே அறிவித்திருக்கிறோம். அறிவித்த உடனேயே அதற்கான பணிகளையும் தொடங்கினோம்.

நீர்வழித் தடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதிலும் - பேரிடர் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளை கவனத்துடன் கண்காணிக்கவும் - பாதிப்புகளைக் குறைப்பதற்கும்- முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை, முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும் என்பதில் அரசு கவனம் செலுத்தியது.

வடகிழக்குப் பருவமழை துவக்கத்திற்கு முன்னதாகவே,
11-9-2021 அன்று தலைமைச் செயலாளர் தலைமையிலும்,
24-09-2021 அன்று என்னுடைய தலைமையிலும், 26-10-2021 அன்று எனது தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் காணொலிக் காட்சி வாயிலாக நடத்தி, எப்படியெல்லாம் திட்டமிட வேண்டும் என்பதை அப்போதே தொடங்கிவிட்டோம். அக்டோபர் மாதத் துவக்கத்திலேயே மழை பெய்யத் தொடங்கியது. அதன்பிறகு அக்டோபர் 25 முதல் வடகிழக்குப் பருவமழை தொடங்கி விட்டது. அதிலேயே தமிழகத்தின் அணைகள், ஏரிகள், குளங்கள் அத்தனையும் நிரம்பத் தொடங்விட்டன.

நவம்பர் 9 முதல் 12 வரை நிலவிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக பெய்த மழை, கொட்டோ கொட்டென்று கொட்டித் தீர்த்துவிட்டது. நவம்பர் 17 முதல் 19 வரை நிலவிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாகப் பெய்த மழையும், மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கின்றன. இந்த மழை பெய்யும்போதே அந்தப் பாதிப்புகளைக் குறைக்க அனைத்துப் பணிகளையும் அரசு நிர்வாகம் எடுத்தது என்பதை மக்கள் அனைவரும் அறிவார்கள். அதற்கு அவர்களே நேரடி சாட்சியாகவும் இருக்கிறார்கள்.

மழை பெய்யும்போதே, தேங்காமல் இருப்பதற்கான நடவடிக்கையையும் நாம் எடுத்தோம். எல்லா நாளும் நான் இந்தப் பணிகளிலே ஈடுபட்டது உங்களுக்குத் தெரியும். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு பகுதியில் முதலில் ஆய்வு நடத்திய நான், அதற்குப் பிறகு நவம்பர் 13 கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கும் நேரடியாகச் சென்று நானே பார்வையிட்டேன். நவம்பர் 14 - அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினேன். நவம்பர் 15 கன்னியாகுமரி மாவட்டத்துக்குச் சென்றேன்.

நேற்றையதினம் தூத்துக்குடி மாவட்டத்துக்கு சென்று ஆய்வு நடத்தினேன். ஒவ்வொரு பகுதிக்கும் நானே நேரடியாகச் சென்றேன். அனைத்து மாவட்டங்களுக்கும், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் பொறுப்பேற்றுக் கொண்டு, அவர்களுக்கும் அதேபோன்று ஆய்வுக்குச் சென்று, அந்தப் பணிகளைச் செய்தார்கள். அதேபோல, மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், மாவட்ட நிருவாகத்திற்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறார்கள். பல்வேறு துறைகளைச் சார்ந்த துறைத் தலைவர்கள், அலுவலர்கள், களப்பணியாளர்கள், வருவாய்த் துறை அலுவலர்கள் காவல் துறையின் அனைத்து அலுவலர்கள், தேசிய பேரிடர் மீட்புப் படை தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைப் பணியாளர்கள், மாநிலப் பேரிடர் மீட்புப் படை இதைப்போன்று எண்ணற்ற அலுவலர்கள், தன்னார்வலர்கள் அரசு சாரா இயக்கங்கள், கண்ணுறக்கம் இன்றி இடைவிடாது அந்தப் பணியிலே ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த அர்ப்பணிப்புகளுக்கு இடையில் நாம் அடுத்து செய்ய வேண்டிய ஆக்கபூர்வமான பணி ஒன்று காத்திருக்கிறது. இந்த மழைக்கால, அதிக வெள்ளக் காலப் பேரிடர்கள் நம் கண் முன்னே ஏற்படுத்தி உள்ள பாதிப்புகள் இன்னொரு முறை நடக்காமல் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும். இன்னொரு முறை இத்தகைய பாதிப்புகள் வராமல் தடுத்தாக வேண்டும். அதற்கு நிரந்தரமான தீர்வுகாண வேண்டும். அதற்காகத்தான் நம்முடைய மரியாதைக்குரிய திருப்புகழ் அவர்கள் தலைமையில் இந்தக் குழுவை அமைத்திருக்கிறோம்.

சென்னை பெருநகர வெள்ள நீர் மேலாண்மைக் குழுவில் இருக்கக்கூடிய நீங்கள் அனைவரும் உங்களது துறையில் நிபுணத்துவம் பெற்றவர்கள். சென்னை பெருநகர் மற்றும் புறநகர் எத்தகைய பெருமழையையும் சீரிய வகையில் எதிர்கொள்ளும் வகையில் உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டிய விரிவான திட்டங்களை நீங்கள் உடனடியாக அரசுக்கு வழங்கிட வேண்டும்.

சென்னை மட்டுமின்றி திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை உள்பட சென்னை வடிநிலப் பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய நீண்ட காலத் திட்டங்கள் குறித்தும் ஆலோசனைகளை வழங்க வேண்டும். வெள்ளத் தடுப்பு மட்டுமல்லாமல், நீர் மேலாண்மைக்கான சிறந்த செயல் திட்டம் குறித்தும் நீங்கள் திட்டம் தீட்டி வழங்க வேண்டும். பகுதி வாரியாகவும் தர வேண்டும். துறை வாரியாகவும் வழங்க வேண்டும்.

நேற்றையதினம் நான் தூத்துக்குடிக்குச் சென்றிருந்தபோது, நான் நேரடியாகப் பார்த்த அனுபவத்தைச் சொல்லியாக வேண்டும். அதிகாரிகளுக்குத் தெரிந்திருப்பதைவிட, அந்தப் பகுதியிலே இருக்கக்கூடிய பொது மக்களுக்கு அதிகம் தெரிந்திருக்கிறது. நேற்றையதினம் சுமார் 65 வயதுடைய தாய்மார் ஒருவர் என்னைப் பார்த்து, எங்கிருந்து வெள்ள நீர் வருகிறது, எப்படி வருகிறது – எங்கு அடைப்பு ஏற்பட்டுள்ளது என்பதைத் தெளிவாகச் சொன்னார்கள். எப்படி தென் சென்னை பகுதியில் ஸ்மார்ட் சிட்டி என்று ஒரு திட்டத்தை உருவாக்கி, அதன்மூலமாக ஏற்பட்ட விளைவின் காரணமாகத்தான் தி.நகர் பகுதியில் தண்ணீர் 5, 6 நாட்கள் தொடர்ந்து தேங்கியிருக்கக்கூடிய நிலைமை ஏற்பட்டது. அதேபோல்தான் தூத்துக்குடியிலும் ஏற்பட்டிருக்கிறது. அங்கேயும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தைச் செயல்படுத்துகிறோம் என்று சொல்லி, கால்வாய்களை அடைத்துவிட்டார்கள். அதனால்தான் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இது எங்கிருந்து வருகிறது – எந்தெந்த கால்வாயிலிருந்து தண்ணீர் வருகிறது – என்று அங்குள்ள தாய்மார்கள் தெளிவாகச் சொல்கிறார்கள். எனவே, நம்முடைய அதிகாரிகளும் அதைப் புரிந்து கொண்டு, அதற்கேற்ற வகையில் தங்களுடைய கருத்துக்களை, உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய வகையில் இருக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

சென்னையில் அதிக மழை பெய்தால் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் தேங்குகிறது என்றால் - அனைத்துப் பகுதியிலும் ஒரே மாதிரியான மழை நீர் வடிகால் அமைப்பு முறை இல்லை. ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு மாதிரியான திட்டமிடுதல்கள் தேவைப்படுகிறது. எனவே பகுதி வாரியாக - குறிப்பான ஆலோசனைகள் தேவை. திட்டமிடுதல்கள் தேவை. இவை அனைத்தையும் உடனடியாகவும் செய்தாக வேண்டும். எனவே திட்டங்கள் தீட்டுவதற்கே பல மாதங்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று அன்புடன் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் அறிக்கையை நீங்கள் கொடுத்தாக வேண்டும். எவ்வளவு விரைவாக முடிக்க முடியுமோ, அவ்வளவு விரைவாக திட்டங்களை நடைமுறைப்படுத்திக் காட்டுவோம் என்று உங்களையெல்லாம் நம்பி, உங்களுடைய ஒத்துழைப்போடு நிச்சயமாக அதை நிறைவேற்றுவோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

கடந்த காலங்களில் மழை நீர் அதிகம் தேங்கி மக்கள் பாதிக்கப்பட்ட இடங்களை கண்டு ஆராய்ந்து, அவ்விடங்களில் மீண்டும் பாதிப்புக்கள் ஏற்படாமல் இருக்க கூடுதல் கவனம் செலுத்தி மக்கள் பாதிக்கப்படுவதை தடுப்பதற்கான உரிய வழி முறைகளைக் கையாள வேண்டும். தொடர்புடைய அனைத்துத் துறைகளும் இக்குழுவிற்குத் தேவையான அடிப்படை விவரங்கள் வழங்கி, முழு ஒத்துழைப்பினை வழங்க வேண்டும். வரும் காலங்களில் சென்னை மட்டுமின்றி - தமிழகம் நீர் மேலாண்மையில் சிறந்த மாநிலமாக விளங்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும்.

ஆட்சிக்கு வந்து ஐந்து மாதங்கள் ஆகிவிட்டது. எனவே, மக்கள் தங்களுக்குள் ஓரளவு சமாதனம் செய்து கொண்டிருக்கிறார்கள். அடுத்து வரும் காலங்களில் நம்மிடம் அதிகமாக எதிர்பார்ப்பார்கள். நாம் போகும் இடங்களில் அவர்கள் சொல்கிறார்கள். நீங்கள் வந்து ஐந்து, ஆறு மாதங்கள்தான் ஆகியிருக்கிறது. நிச்சயமாக அடுத்த வருடம் இதுபோன்று மழை வருவதற்கு முன்னதாக, இதையெல்லாம் செய்து முடிப்பீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது என்று பொது மக்கள் இன்றைக்குப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்த முறை ஏற்பட்ட பாதிப்புகளை, அடுத்த முறை நடக்காமல்தமிழ்நாடு தடுத்து விட்டது என்ற பெயரை நாம்எடுத்தாக வேண்டும். எனவே, திட்ட அறிக்கையைத் தாருங்கள் - அதை விரைவாகத்தாருங்கள் - துல்லியமாகத் தாருங்கள் - நடைமுறைச் சாத்தியம் உள்ள திட்டங்களாகத்தாருங்கள். திருப்புகழ் உள்பட அனைவரின் திறமை மீதும் தமிழக அரசுக்கும், ஏன், எனக்கும் மிகுந்த மரியாதை இருக்கிறது. உங்களுக்குள் இருக்கும் அனைத்துத் திறமைகளையும் தமிழகத்தின் மக்களைக் காக்கும் திட்டத்தை தீட்டுவதற்கு பயன்படுத்துங்கள் என்று நான் உங்களையெல்லாம் கேட்டு, என்னுடைய உரையை நிறைவு செய்து கொள்கிறேன்.”

இவ்வாறு தனது உரையில் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories