திமுக அரசு

சுயமரியாதைத் தமிழகம் அமைக்க உறுதியேற்ற மு.க.ஸ்டாலின் முதல்வராய் அதை செயல்படுத்திக் காட்டுவார்: முரசொலி!

வறுமை ஒழிந்த சமத்துவ தமிழகம், சுயமரியாதைத் தமிழகம் அமைக்க தலைவராய் உறுதியேற்ற மு.க.ஸ்டாலின், முதல்வராய் அதை செயல்படுத்திக் காட்டுவார்!

சுயமரியாதைத் தமிழகம் அமைக்க  உறுதியேற்ற மு.க.ஸ்டாலின் முதல்வராய் அதை செயல்படுத்திக் காட்டுவார்: முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கண்ணை மூடிக்கேட்டால் முத்தமிழறிஞர் கலைஞர் முழங்குவது போலவே இருந்தது கொளத்தூரில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் பேச்சு!

தலைவரின் இந்தப் பேச்சு, முதல்வரின் முழக்கமாக மாறப் போகிறது! ஏப்ரல்6 (இன்று) தமிழகத்தில் நடைபெற இருக்கின்ற சட்டமன்றத்தின் 16 ஆவது தேர்தல் முடிவுகள் மே 2 வரப்போகிறது. கொளத்தூர் கூட்டத்தில் ‘தலைவராகப்' பேசிய முழக்கம், ‘முதல்வரின்' முழக்கமாக அன்றைய தினம் மாறிவிடும்!

1949ம் ஆண்டில் கழகம் தொடங்கப்பட்டது. 18 ஆண்டுகள் எதிரணியில் இருந்தோம். 1967 ல் ஆட்சி மாற்றம். முதல் இரண்டு ஆண்டுகள் பேரறிஞர் அண்ணாவின் ஆட்சி. அடுத்து நான்கு முறை முத்தமிழறிஞர் கலைஞரின் ஆட்சி. இந்தக் காலக்கட்டத்தில் தமிழகம் அடைந்த பயன்கள் அனைத்தையும் கண் முன்னால் நிறுத்தினார் தலைவர் மு.க.ஸ்டாலின்!

“இன்றைக்கு நாம் பார்க்கும் நவீன தமிழகத்தை உருவாக்கிய சிற்பி நம்முடைய கலைஞர் அவர்கள். தமிழ்நாட்டின் நகரங்கள் - கிராமங்கள் என எங்கு சென்றாலும் கலைஞர் உருவாக்கிய திட்டங்கள்தான் கண்ணில் படும். கழகம் உருவாக்கிய பள்ளிகள் - கல்லூரிகள் - பல்கலைக்கழகங்கள் - மருத்துவக் கல்லூரிகள் - மருத்துவமனைகள் - நிறுவனங்கள் - தொழிற்சாலைகள் - என பார்க்கும் இடமெல்லாம் இருக்கிறது என்றால் அவை அனைத்தும் நம்மால் தமிழகம் அடைந்த பயன்கள்.

கலைஞரால் படித்தவர்கள் - கலைஞரால் வேலை பெற்றவர்கள் - கலைஞரால் உதவி பெற்றவர்கள் - கலைஞரால் உயர்ந்தவர்கள் - என கணக்கிட்டாலே கோடிக்கணக்கான எண்ணிக்கையைத் தாண்டும். அவர் கோட்டையில் கொடி ஏற்றிய காலம் எல்லாம் தமிழ் கொடி ஏறியது. தமிழன் கொடி ஏறினான். தமிழ்நாடு பட்டொளி வீசிப் பறந்தது.” என்று விவரித்தார் தலைவர். தனது ஆட்சிக் காலமும் இத்தகைய தமிழன் கொடி பறக்கும் காலமாகத்தான் இருக்கும் என்றும் சொன்னார்! “தமிழ்நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் இன்னும் பல ஆண்டுகள் உழைக்கக் காத்திருக்கிறேன். தமிழ்நாட்டு மக்களின் மேன்மைக்காக நல்ல பல திட்டங்களை நான் வைத்துள்ளேன்.

அந்தத் திட்டங்களை நிறைவேற்றித் தருவதற்கு எனக்கு வாய்ப்புத் தாருங்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டாலினின் ஏழு உறுதிமொழிகள் என்ற பத்தாண்டுத் திட்டத்தையும் அறிவித்துள்ளேன். ஒவ்வொரு மாவட்டத்துக்குமான செயல் திட்டங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையையும் நான் வெளியிட்டுள்ளேன். இவற்றை நிறைவேற்றினால் தமிழகம் ஒளிமயமானதாக அமையும். தமிழ் நாட்டின் எதிர்காலம் வண்ணமயமானதாக மாறும்” என்று அளித்த வாக்குறுதி தான் தமிழ் மக்களுக்கு புதிய உற்சாகத்தையும் நம்பிக்கையையும் விதைத்துள்ளது!

“தமிழ் மக்களின்பால் எனக்கு உள்ள உரிமையின் அடிப்படையில் கேட்கிறேன். அவர்களுக்கு ஆற்றிய கடமையின் அடிப்படையில் கேட்கிறேன். அவர்களுக்கு செயல்படுத்திக் கொடுத்த திட்டங்களின் அடிப்படையில் கேட்கிறேன்” என்று கேட்கும் துணிச்சல், தைரியம், உரிமை மு.க.ஸ்டாலின் அவர்களுக்குத்தான் இருக்கிறது. வார்த்தைகளுக்குப் பின்னால் அவரது ஐம்பது ஆண்டு கால அரசியல் இருக்கிறது. தியாகம் இருக்கிறது. நிர்வாகத்திறன் இருக்கிறது. உழைப்பு இருக்கிறது. உண்மை இருக்கிறது. அதனால்தான் அத்தகைய நெஞ்சுரத்துடன் அவர் அப்படிக் கேட்கிறார். எனக்கு பதவி தாருங்கள் என்று அவர் கேட்கவில்லை. இது வரை நான் உங்களுக்கு உழைத்துள்ளேன், அந்த உரிமையுடன் மேலும் உழைக்க உத்தரவு தாருங்கள் என்ற கேள்வி கம்பீரமானது!

‘என்னை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்' என்று 1969 ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர், அன்றைய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எழுதிக்கேட்டாரே, அத்தகைய குரலைத் தான் 2021ஆம் ஆண்டு மு.க.ஸ்டாலின் எதிரொலித்திருக்கிறார். இவை அனைத்திலும் கூடுதல் முக்கியமானது, ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற நிகழ்வின் மூலமாக தமிழகத்தின் அனைத்துத் தொகுதிக்கும் சென்று மக்களை நேரில் சந்தித்து அவர்களது குறைகளைக் கேட்டு அதனை எழுதி வாங்கி வந்திருப்பதுதான். இலட்சக்கணக்கான கோரிக்கைகள் அவரிடம் வந்து சேர்ந்துள்ளது.

“மக்களது கோரிக்கைகளை 100 நாளில் நிறைவேற்றிக் காட்ட என்னால் முடியும் என்று வாக்குறுதி அளித்துள்ளேன். 100 நாளில் நிறைவேற்றித் தருவேன் என்பதற்கான அத்தாட்சி ஆவணத்தை மக்களுக்கு நான் வழங்கியுள்ளேன். இலட்சக்கணக்கான குடும்பங்களின் கோரிக்கைகள், கவலைகள், விண்ணப்பங்கள் 100 நாளில் தீரப்போகிறது. அதனை நீங்கள்பார்க்கத்தான் போகிறீர்கள்! அதாவது 100 நாளில் தீர்க்கப் போகும் பிரச்சினைகள் - ஐந்தாண்டு காலத்தில் உருவாக்கப்படக் கூடிய திட்டங்கள் - பத்தாண்டு காலத்தில் முன்னெடுக்கவேண்டிய பணிகள் - என எனக்கு நானே வரையறைகளை தீட்டி வைத்துக் கொண்டு உங்களிடம் வாக்குக் கேட்கிறேன்” என்பது மிக மிக முக்கியமானது!

“எனது லட்சியம் என்பது, வளமான தமிழகம் - வலிவான தமிழகம் - வறுமை ஒழிந்த சமத்துவ தமிழகம் - சுயமரியாதைத் தமிழகம். அந்த இலட்சியப் பாதையை நோக்கிச் செல்வதற்கு வலுசேர்க்க உங்களுடைய உறுதுணையை என்றும் வேண்டுகிறேன்” என்பதே மிகத் தெளிவான, உறுதியான வாக்குறுதி!

வளமான தமிழகம், வலிவான தமிழகம், வறுமை ஒழிந்த சமத்துவ தமிழகம், சுயமரியாதைத் தமிழகம் அமைக்க தலைவராய் உறுதியேற்ற மு.க.ஸ்டாலின், முதல்வராய் அதை செயல்படுத்திக் காட்டுவார்! தமிழக மக்கள், அவரின் உரிமையை உறுதியாக நிறைவேற்றிக் காட்டக் காத்திருக்கிறார்கள்!

banner

Related Stories

Related Stories