உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்பி.வேலுமணியின் தொகுதியான தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட குனியமுத்தூர் பகுதி காந்திநகரில், தங்கராஜ் என்பவரது மளிகை கடையில் வேலுமணியின் ஆட்களான அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் வழங்க கோடி கணக்கில் பதுக்கி வைத்துள்ளனர்.
ஒரு வாக்காளர்களுக்கு 2500 ரூபாய் வழங்க திட்டமிட்டதாக கூறப்படுகின்றது. இந்நிலையில், ஒரு சில அதிமுகவினர் வாக்காளர்களுக்கு தலா ஆயிரம் வழங்கியுள்ளனர். இதனால், அதிமுகவினர் இரு பிரிவுகளாக பிரிந்து, கை கலப்பாக மாறி, அடிதடியில் இறங்கினர். இதையறிந்த, குனியமுத்தூர் பகுதி கழக பொறுப்பாளர் லோகு உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் அங்கு கூடினர்.
அதிமுகவினர் பணம் பதுக்கி வைக்கப்பட்டது, தொடர்பாக பறக்கும் படைக்கு திமுகவினர் தகவல் அளித்தனர். இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு 4 வாகனங்களில் வந்த பறக்கும் படையினர் , உள்ளே சென்று விசாரணை நடத்தி பணத்தை கைப்பற்றியதாக கூறப்படுகின்றது. பணங்களை கைப்பற்றிய பறக்கும் படையினர் தேர்தல் அலுவலகமான ஆர்ஓ அலுவலகத்திற்கு செல்லாமல், வேலுமணி வீட்டின் அருகே உள்ள குனியமுத்தூர் காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால், பணம் விநியோகத்திலும், அடிதடியிலும் ஈடுபட்ட அதிமுகவினரை அழைத்து செல்லவில்லை.
அதிமுகவினர் பணம் பதுக்கி வைக்கப்பட்டது தொடர்பாக திமுகவினருக்கு தெரியவரவே, எவ்வளவு பணம் பிடிபட்டது என விசாரிக்க திமுக வழக்கறிஞரும், திமுக முதன்மை முகவருமான மயில்வாகனம் மற்றும் வழக்கறிஞர் சுரேஷ் ஆகியோர் குனியமுத்தூர் காவல்நிலையம் சென்றனர்.
அங்கு தான் திமுக வழக்கறிஞர் என கூறியும் மயில்வாகனனை, ஒருமையில் திட்டிய காவல்துறை ஆய்வாளர் பெரியார் தரக்குறைவாக நடந்துகொண்டுள்ளார். காவல்துறை ஆய்வாளரின் இந்த அநாகரீக செயலை தலைமை தேர்தல் அதிகாரியிடம், திமுக வழக்கறிஞர் மயில்வாகனம் புகார் அளித்தார். இதையடுத்து, நள்ளிரவில், குனியமுத்தூர் காவல்நிலையத்திற்கு காவல்துறை ஆணையாளர் டேவிட்சன் ஆசீர்வாதம் அங்கு வந்து விசாரணை நடத்தினார். மேலும் கோடி கணக்கில் பணம் பறிமுதல் செய்ததாக கூறப்பட்ட நிலையில் 13 ஆயிரம் மட்டுமே பறிமுதல் செய்ததாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், காவல்நிலையத்தில் விசாரணை நடத்திய காவல்துறை ஆணையாளர், காவல்துறை ஆய்வாளர் மீது புகார் கொடுங்கள் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து திமுக வழக்கறிஞர் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து, திமுக. வழக்கறிஞர் மயில்வாகனம் பேட்டியின்போது கூறுகையில்;-
தொண்டாமுத்தூர் தொகுதி, குனியமுத்தூர் அருகே, காந்திநகர் பகுதியில் அதிமுக சார்பில் பணம் விநியோகம் செய்வதாகவும், 4 பறக்கும் படையினர் உள்ளே சென்று, அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை தேர்தல் நடத்தும் அலுவலகத்திற்கு கொண்டு செல்லாமல், வேலுமணி வீட்டின் அருகே உள்ள குனியமுத்தூர் காவல்நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இதையறிந்த தான், காவல்நிலையம் சென்று, தன்னை திமுக முதன்மை முகவர் என அறிமுகம் செய்துகொண்டதாகவும், ஆனால், அங்கிருந்த ஆய்வாளர் பெரியார் காவல்நிலையத்தில் இருந்து வெளியே போடா என்றும், ராஸ்கல் என்றும் கூறி தாக்க முற்பட்டதாகவும், அங்கிருந்த துணை ராணுவ படையினர் தடுத்தனர். இல்லையேல், தன்னை தாக்கியிருப்பார்.
இந்த காவல் ஆய்வாளர் தொடர்பாக , தேர்தல் பார்வையாளர்களிடம் புகார் அளித்துள்ளேன் என்றவர், இந்த தொகுதியில் தேர்தல் எவ்வளவு மோசமாக நடைபெறுகின்றது என்பதற்கு இதுவே சாட்சி. இந்த தொண்டாமுத்தூரில் தேர்தல் நியாயமாக நடைபெறாது எனவே, இந்த தொகுதியில் மட்டும் உடனடியாக தேர்தலை நிறுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என கூறினார்.
அதிமுகவினரின் பணம் பதுக்கல் மற்றும் மோதல், இதை கண்டுகொள்ளாத அதிகாரிகள், கேட்க சென்ற திமுக வழக்கறிஞரை தரக்குறைவாக பேசியது, என இப்பகுதியில் நள்ளிரவு முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.