திமுக அரசு

தேர்தல் நேரத்தில் நாடகமாடும் அரசுகள்; கடந்தகால இன்னல்களை மறந்திடக்கூடாது - தினகரன் தலையங்கம் வலியுறுத்தல்

இளைய சமுதாயம் தங்களின் நலன் கருதி ஆட்சி மாற்றத்தை உருவாக்க வேண்டும் என தினகரன் நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது.

தேர்தல் நேரத்தில் நாடகமாடும் அரசுகள்; கடந்தகால இன்னல்களை மறந்திடக்கூடாது - தினகரன் தலையங்கம் வலியுறுத்தல்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

எவ்வித இடையூறும் இல்லாமல் மக்கள் தைரியமுடன் வாக்களிப்பதை உறுதி செய்யவேண்டும். கடந்தாண்டு நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், ஆராய்ச்சிக்காக விண்வெளி சென்றிருந்த விஞ்ஞானிகள் வாக்களிப்பதற்குக் கூட வசதிகள் செய்யப்பட்டிருந்தது.

வாக்குரிமை என்பது மிக முக்கியமானது என்பதை இச்சம்பவம் நமக்கு உணர்த்துகிறது. ஜனநாயகத்தில் ஒரு வாக்கு என்றாலும், மிக முக்கியம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். வாக்குரிமையின் வலிமையை உணர்ந்து கண்டிப்பாக தகுதியுள்ள அனைவரும் வாக்களிக்க வேண்டியது கட்டாயம்.

தமிழகத்தில் பணப்பட்டுவாடா அதிகம் உள்ள தொகுதிகளில் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும். நடுநிலையோடு செயல்பட்டு ஜனநாயகத்தை காக்க வேண்டிய பொறுப்பு அதிகாரிகளுக்கு உள்ளது. கடந்த கால இன்னல்களை மக்கள் மறந்து விடக்கூடாது.

தேர்தல் நேரத்தில் நாடகமாடும் அரசுகள்; கடந்தகால இன்னல்களை மறந்திடக்கூடாது - தினகரன் தலையங்கம் வலியுறுத்தல்

தமிழகம் பல்வேறு துறைகளில் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. பெண்கள் மீதான வன்முறைகள் மற்றும் துப்பாக்கி கலாச்சாரமும் அதிகளவில் தலைதூக்கியுள்ளது. இது நல்லதல்ல. இதை மாற்ற வேண்டியது அவசியம். அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்காமல், வளர்ச்சி என்ற இலக்கை எட்டிவிட முடியாது.

லாபம் தரும் பணிகளில் மட்டுமே ஆளுங்கட்சியினர் கவனம் செலுத்தினர். அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை மக்கள் புரிந்திருக்கிறார்கள். மத்திய, மாநில அரசுகள் தமிழகத்துக்கு அறிவித்துள்ள வளர்ச்சி திட்டங்கள் எல்லாம் அறிவிப்போடு கிடக்கிறது.

சிறந்த உதாரணம் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை. அறிவித்து பல ஆண்டுகளாகியும் பணிகள் தொடங்காதது ஏன்? மக்கள் நலன் சார்ந்த விஷயங்களை புறக்கணித்து விட்டு, தேர்தலை கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் நாடகமாடுவது ஏன்? அதனால்தான் ஆளுங்கட்சி வேட்பாளர்கள் வாக்குகேட்டுச் செல்லும் இடங்களில் எல்லாம் விரட்டி அடிக்கப்படுகிறார்கள்.

வங்கிகளில் வாங்கிய கடன்களை செலுத்த முடியாமல், விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். அப்போது ஆட்சியாளர்கள் என்ன செய்தனர்? வாழ்வாதாரம் இழந்து, உற்பத்தி பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயத்தை விட்டுவிட்டு ஏராளமானோர் மாற்று தொழிலுக்கு சென்றனர்.

விவசாயிகளின் தற்கொலைகளை தடுக்க என்ன நடவடிக்கை அரசு எடுத்தது? தேர்தல் நேரத்தில் மட்டும் ஆட்சியாளர்களுக்கு விவசாயிகள் கண்ணில் தெரிவார்கள். சிறு, குறு விவசாயிகளின் நிலைமை மோசமாக உள்ளது. அவர்களின் வாழ்வாதாரம் உயரவில்லை என்பது வேதனைக்குரியது. விவசாயி என்று சொல்லி அவர்களை ஏமாற்றும் முயற்சி இனி எடுபடாது.

சமூக வலைதளங்களில் ஆளுங்கட்சிக்கு எதிராகவும், ஆட்சியில் மக்கள் அனுபவித்த இன்னல்கள் குறித்தும் கருத்துக்களை பதிவிட்டு வரும் இன்றைய இளைய தலைமுறையினர், வாக்களிப்பது மூலம் மட்டுமே கடந்த கால பிரச்சினைகளுக்கு முடிவு கட்ட முடியும் என்பதை அழுத்தமாக உணர வேண்டும்.

அரசுக்கு எதிராக சமூக வலைதளங்களில் எதிர்ப்பை காட்டிவிட்டால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விடும் என இளைஞர்கள் எண்ணக் கூடாது. இளைய சமுதாயம் தங்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, ஆட்சி மாற்றத்தை உருவாக்க வேண்டும். வாக்கு மூலம் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை உணர்ந்து, ஆட்சியாளர்களுக்கு பாடம் புகட்டவேண்டும்.

banner

Related Stories

Related Stories