திமுக அரசு

“தேர்தல் காலங்களில் மொழிப்பற்று வேசம் போடும் பா.ஜ.க”: பிரதமர் மோடியின் திடீர் தமிழ் பாசம் உண்மையானதுதானா?

பண்பாட்டு வழியில் உள்நுழைவதற்காகவும், குறுகிய அரசியல் லாபத்துக்காகவுமே பா.ஜ.க. தனது தமிழ்ப்பற்றைக் காட்டுகிறது.

“தேர்தல் காலங்களில் மொழிப்பற்று வேசம் போடும் பா.ஜ.க”: பிரதமர் மோடியின் திடீர் தமிழ் பாசம் உண்மையானதுதானா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இன்றைக்கு நிகழ்ச்சியில் என்ன பேச வேண்டும் என்பதை விட, திருக்குறள், புறநானூறில் இருந்து மேற்கோள்காட்ட ஒரு சில பாடல் வரிகளையாவது கண்டுபிடிக்க வேண்டுமே...’’ என்பதுதான் தேசிய அளவில் பிரபலமாக இருக்கும் பெரும்பாலான பா.ஜ.க ‘இந்தி தலைவர்களின்’ பிரதான தேடலாக உள்ளது. மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், அமித்ஷா தொடங்கி, பிரதமர் வரை இதில் அடக்கம். அதுவும் பிரதமர் நரேந்திர மோடியின் தமிழ் பாசம் பற்றி சொல்லவே தேவையில்லை. வெளிநாட்டில் பேசினாலும், தமிழகத்தில் பேசினாலும் திருக்குறள் அல்லது ஏதாவது ஒரு பழந்தமிழ் இலக்கியத்தில் இருந்து பாடல் வரிகளை எடுத்து மேற்கோள் காட்டாமல் விடுவதே இல்லை. அதிலும் குறிப்பாக திருக்குறள் மீது தனி பித்தே தெரிகிறது. செல்லும் இடங்களில் எல்லாம் திருக்குறளின் மகத்துவத்தை பறைசாற்றுகிறார்.

எல்லையில் சீனாவின் அத்துமீறலை தொடர்ந்து லடாக் சென்று ராணுவ வீரர்கள் மத்தியில் மோடி உரையாற்றும்போதும் திருக்குறளை மேற்கோள் காட்டத் தவறவில்லை. ‘மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் என நான்கே ஏமம் படைக்கு’ - என்ற குறளை குறிப்பிட்டார். வீரம், மானம், நன்னடத்தை, நம்பகத்தன்மை எனும் நான்கும் படைக்கு காவல் அரண்கள் என்பது இதன் பொருள். தாய்லாந்து சென்றபோது, ‘தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு, வேளாண்மை செய்தற் பொருட்டு’ எனும் குறளை விளக்கி அரங்கை அதிரவைத்தார்.

சுதந்திர தின விழா மேடையில், ‘நீரின்றி அமையாது உலகு’ என்ற வள்ளுவரின் வரிகளை கூறினார். கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் மட்டுமல்லாது, வழக்கமான வானொலி உரை ‘மான் கி பாத்’ நிகழ்ச்சியிலும் குறளை குறிப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். திருவள்ளுவர் மட்டுமல்ல மகாகவி சுப்பிரமணிய பாரதியார், கணியன் பூங்குன்றனார், அவ்வையின் ஆத்திசூடி என தமிழ் மாணாக்கனை விட ஒரு படி மேலே போய் பல புலவர்களை குறித்து பேசி அசர வைக்கிறார்.

‘சுப்பிரமணிய பாரதி - கவிஞர், எழுத்தாளர், சமூக சீர்திருத்தவாதி, பத்திரிகை ஆசிரியர், சுதந்திர போராட்ட வீரர் என பன்முகத்தன்மை கொண்டவராக இருந்தார். வாரணாசியுடன் நெருங்கிய தொடர்புகொண்டவர். நான் அந்த தொகுதியின் பிரதிநிதியாக இருக்கிறேன். பயம் என்றால் பாரதிக்கு என்னவென்று தெரியாது. அச்சமில்லை, அச்சமில்லை.. அச்சமென்பதில்லையே..’ என பாடினார்’’ என பாரதி குறித்து மோடி வியந்து பேசியிருக்கிறார். ஐ.நா.சபையில் உரையாற்றியபோது, கணியன் பூங்குன்றனார் எழுதிய, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற வரிகளை மேற்கோள் காட்டினார்.

“தேர்தல் காலங்களில் மொழிப்பற்று வேசம் போடும் பா.ஜ.க”: பிரதமர் மோடியின் திடீர் தமிழ் பாசம் உண்மையானதுதானா?

இதோடு மோடியின் தமிழ்ப்பற்று நின்றபாடில்லை. தமிழ் நிலப்பரப்பின் நீலக் குறிஞ்சி மலர் குறித்து பேசியுள்ளார். ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பேசுகையில், ‘உலகின் தொன்மையான மொழியான தமிழை என்னால் கற்க முடியவில்லையே..’ என வருந்தியிருக்கிறார். இவரை பின்பற்றி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூட, ‘பாரத நாட்டின் புராதன மொழியான தமிழில் பேச முடியாததற்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். தமிழ் மொழியைப் படிக்கவும் திருக்குறளை படிக்கவும் ஆர்வமாக உள்ளேன்’ என பேசி ‘மெய்சிலிர்க்க’ வைத்திருக்கிறார்.

பிரதமர் மோடியின் இந்த திடீர் தமிழ் பாசம் உண்மையானதுதானா அல்லது அரசியல் லாபத்துக்கானதா என்ற ஐயம் தொடர்ந்து எழுந்துகொண்டேதான் இருக்கிறது. மேற்கோள்கள் எல்லாம் உள்ளார்ந்தது அல்ல, வெறும் உதட்டு உச்சரிப்பு அளவிலான, ‘லிப் சர்வீஸ்’ மட்டுமே என்கின்றனர் சமூக விமர்சகர்கள். மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சி பொறுப்பேற்ற முதல் ஐந்து ஆண்டுகளில் தமிழின் மேல் தனக்கிருந்த இந்த அபரிமிதமான அன்பை மோடி அவ்வளவாக வெளிக்காட்டியதில்லை. இரண்டாம் வரவுக்குப் பின்தான் செல்லும் திக்கெங்கும் தமிழ்க்கொடியை பறக்க விடுகிறார்.

பா.ஜ.க.வின் மீது தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள வெறுப்பு கொஞ்ச நஞ்சமல்ல. காரணம், மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசின் பல்வேறு திட்டங்கள் தமிழகத்தை அந்த அளவுக்கு பதம்பார்த்திருக்கின்றன. கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக மீத்தேன், 8 வழிச்சாலை என தமிழகத்துக்கு விரோதமான பல திட்டங்களை அரங்கேற்றி கொண்டிருப்பதால் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசின் மேல் தமிழர்கள் கொதிப்புடன் உள்ளனர். அதனால்தான் மோடி தமிழகம் வரும்போதெல்லாம், ‘கோ பேக் மோடி’ என்கிற டிவிட்டர் ஹாஷ்டேக் டிரெண்டாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இது மோடிக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. தனக்கெதிராக தமிழகத்தில் வீசிவரும் வெறுப்பலையை மாற்றும் யுக்தியாகவே ‘தமிழ்ப்பற்றை’ கையில் எடுத்தார். பின்னர் அதையே தமிழகத்தில் பா.ஜ.க. காலூன்றுவதற்கான ஒரு கருவியாக பயன்படுத்த தொடங்கியிருக்கிறார் என்கின்றனர் விமர்சகர்கள். மொழி, அதன் பாரம்பரியம், தொன்மை, கலாச்சாரம் ஆகியவற்றில் உள்ளார்ந்த பற்றுக் கொண்டவர்கள் தமிழர்கள். எனவே அந்த பண்பாட்டு வழியில் உள்நுழைவதற்காகவும், குறுகிய அரசியல் லாபத்துக்காகவுமே பா.ஜ.க. தனது தமிழ்ப்பற்றைக் காட்டுகிறது என்கின்றனர்.

“தேர்தல் காலங்களில் மொழிப்பற்று வேசம் போடும் பா.ஜ.க”: பிரதமர் மோடியின் திடீர் தமிழ் பாசம் உண்மையானதுதானா?

தமிழ் என்று மட்டுமல்ல ஒவ்வொரு மாநில மொழியின் பழமைவாய்ந்த புலவர்கள், கலைஞர்களை குறித்து தேர்தல் காலங்களிலும் வாய்ப்பு கிடைக்கும்போதும் குறிப்பிடுவதை மோடி வழக்கமாக கொண்டிருக்கிறார். தெலுங்கில் குரஜாதா அப்பா ராவ், கன்னடத்தில் பசவண்ணா, மலையாளத்தில் நாராயண குரு, வங்கத்தில் தாகூர் என இந்த பட்டியல் நீளும். உண்மையில் பன்முக கலாச்சாரத்தை பாரதிய ஜனதாவின் சித்தாந்தம் ஏற்பதே இல்லை. பிராந்திய அடையாளங்கள், பெருமைகள் எல்லாம் அவர்களுக்கு எதிரானவை. நாடு முழுவதும் ஒற்றைக் கலாச்சாரத்தை நிலைநிறுத்த வேண்டும் என்பதே அதன் நோக்கம்.

ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி கொள்கையை கொண்டுவருவதே அவர்களின் பிரதான இலக்கு. மொழி என்றால் சமஸ்கிருதம், இந்தி மட்டுமே. அதனால் தமிழ் மொழி குறித்தும் அதன் சாலச்சிறந்த புலவர்கள் குறித்தும் பேசுவதெல்லாம் வெற்று கோஷங்களே. மாறாக, தமிழுக்கு எதிரான காரியங்களையே மத்திய அரசு செய்துகொண்டிருக்கிறது. உதாரணமாக, செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தை மூடுவதுதான் மத்திய பா.ஜ.க அரசின் திட்டமாக இருந்தது. சென்னையில் தனித்து இயங்கி வரும் இந்நிறுவனத்தை மைசூர் பல்கலைக்கழகத்துடன் இணைக்க மத்திய அரசு திட்டமிட்டது. கடும் எதிர்ப்பு வரவே அந்த முடிவை ஒத்திவைத்துள்ளனர்.

கிட்டத்தட்ட இப்போது தமிழாய்வு நிறுவனத்தை செயல்படாத அமைப்பாக மாற்றிவிட்டனர். அதேநேரத்தில் 3 சமஸ்கிருத நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களை மத்திய பல்கலைக்கழகங்களாக மத்திய அரசு தரம் உயர்த்தியது. மேலும் சமஸ்கிருத வளர்ச்சிக்காக கடந்த 3 ஆண்டுகளில் மத்திய அரசு ரூ.643 கோடியை செலவு செய்துள்ளது. இந்த தொகை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒரியா ஆகிய மொழிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகையை விட 29 மடங்கு அதிகம். இதுபோல் மொழிப் பாகுபாடு பல மட்டங்களில் நடந்த வண்ணம் இருக்கிறது. தமிழகத்தில் போட்டியிடும் தனது வேட்பாளர்களின் பெயர்களை கூட இந்தியில்தான் வெளியிட்டதுபா.ஜ.க.

இதுமட்டுமல்ல, கொரோனா பொது முடக்கம் காரணமாக சி.பி.எஸ்.இ மாணவர்களின் பாடச்சுமையை குறைப்பதாக கூறிக்கொண்டு, ‘ஜனநாயகம், பன்முகத்தன்மை, கூட்டாட்சி, குடியுரிமை, மதச்சார்பின்மை ஆகிய பாடப்பிரிவுகள் நீக்கப்பட்டன. தற்போது 9, 10ம் வகுப்பு தமிழ்ப் பாடப் புத்தகத்தில் தந்தை பெரியார் சிந்தனைகள், மா.பொ.சி.யின் எல்லைப் போராட்ட வரலாறு, ராஜராஜசோழனின் மெய்கீர்த்தி, தமிழகப் பெண்களின் சிறப்புகளை விளக்கும் ‘மங்கையராய்ப் பிறப்பதற்கே’ எனும் பாடம், திருக்குறள், சிலப்பதிகாரம் குறித்த பாடங்களும், இந்திய தேசிய ராணுவத்தில் தமிழரின் பங்கு எனும் பாடப் பகுதியும் அடியோடு நீக்கப்பட்டு உள்ளன. இவைதான் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசின் தமிழகப் பற்றின் உண்மை முகம். இதன்மூலம் தமிழ் மற்றும் பிராந்திய மொழிகளின் மேல் பிரதமர் மோடியும் அவரது சகாக்களும் காட்டி வரும் பற்றுதலும் பாசமும் வெறும் வேஷம் என்பது தெளிவாகப் புலனாகிறது.

“தேர்தல் காலங்களில் மொழிப்பற்று வேசம் போடும் பா.ஜ.க”: பிரதமர் மோடியின் திடீர் தமிழ் பாசம் உண்மையானதுதானா?

தெலுங்கில்.... குரஜாதா அப்பா ராவ்

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை பிரதமர் மோடி ஜனவரி 16ம் தேதி தொடங்கி வைத்தார். அப்போது, காணொலி மூலம் உரையாற்றுகையில் பழம்பெரும் தெலுங்கு கவிஞரும் சமூக சீர்திருத்தவாதியுமான குரஜாதா அப்பா ராவின் கவி வரிகளை கூறி, தெலுங்கு மக்களை கவர முயற்சித்தார்.
சொந்த லாபம் கொந்த மனுகோ
பொருகு வாதிகி தோடு படவோய்
தேசமன்டே மட்டி கடோயி தேசமன்டே மனுஷ்யலு... என்கிற குரஜாதா கவிதையின் தொடக்க வரிகளை கூறினார். சிறிதளவு உங்களது சொந்த நலன், லாபங்களை விட்டுக்கொடுத்து அயலாருக்கு உதவி ஆதரவளியுங்கள்.. இந்த நாடு வெறும் மண்ணால் உருவானதல்ல.. மக்களால் ஆனது... என்பது இதன் பொருள்.

இந்திய தயாரிப்பு தடுப்பூசிகளை அயல் நாடுகளின் பயன்பாட்டுக்கும் கொடுத்து உதவுவதை குறிக்க இந்த பழமையான தெலுங்கு கவிதையை மோடி குறிப்பிட்டார். விசாகப்பட்டினத்தில் 1862ல் பிறந்த குரஜாதா அப்பாராவ் பண்பாட்டு, கலாச்சார வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்தவர். பாலின சமத்துவம், சாதிய ஒடுக்குமுறை உள்ளிட்ட சமூக சீர்திருத்தங்களுக்கு குரல் கொடுத்தவர். மத பிளவுகளையும் சாதி பிரச்னைகளையும் குறித்த இவரது முழுமையான கவிதைகளை படித்தால் மோடி உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் திடுக்கிட்டு விடுவார்கள் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

கன்னடத்தில்... பசவண்ணா
கடந்த ஆண்டு டிசம்பர் 10ல் புதிய நாடாளுமன்ற கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி பேசுகையில், 12ம் நூற்றாண்டை சேர்ந்த கன்னட கவிஞர் பசவண்ணாவை பற்றிக் கூறி கன்னட மக்களை உவகை கொள்ள வைத்தார்.
அனுபவ மண்டபம் நாடினா
மத்து ஜனரா அபிவிருத்திகே
பூரகவாகி கேலசா மாடுதத்தே என கன்னடத்தில் முழங்கினார். கவியும் தத்துவவியலாளருமான பசவண்ணா தன் காலத்தில் பீதர் மாவட்டம் பசவகல்யாண் தாலுகாவில் அனுபவ மண்டபம் எனும் தியான மண்டபத்தை உருவாக்கினார். நாட்டு மக்களின் நலன், வளர்ச்சிக்காக இந்த அனுபவ மண்டபம் இயங்கியது. 12ம் நூற்றாண்டிலேயே ஜனநாயக நாடாளுமன்ற தத்துவத்தை நாம் கொண்டிருந்தோம் என பசவண்ணாவை சுட்டிக்காட்டி மோடி புகழ்ந்துரைத்தார்.

வங்கத்தில்.. தாகூர்
பொதுவாக ரவீந்திர நாத் தாகூர், சங் பரிவாரத்துக்கு உவப்பானவர் அல்ல. அவர் இயற்றிய தேசிய கீதத்தின் வரிகளை மாற்ற வேண்டும் என வாதாடியவர்கள். சுதந்திரத்துக்கு பிந்தைய காலகட்டத்தில் தேசிய கீதத்தில் வரும் சிந்து போன்ற வார்த்தைகள் பொருத்தமற்றவை என்பது அவர்களது வாதம். பா.ஜ.க. எம்.பி. சுப்பிரமணிய சாமி இதுகுறித்து பிரதமர் மோடிக்கு கடிதமும் எழுதினார். தாகூரை விட வந்தே மாதரம் எழுதிய பங்கிம் சந்திர சட்டர்ஜி தான் உயர்வானவர், நோபல் விருதுக்கு தகுந்தவர் என்பது இவர்களது வாதம்.

ஆனால் தேர்தல் காலங்களில் இந்த முரண்களை எல்லாம் மாற்றி பிரதமர் மோடியும் மற்ற பா.ஜ.க. தலைவர்களும் ரவீந்திர நாத் தாகூரின் பெருமைகளை கூறியும் மேற்கோள்களை காட்டியும் பேசி வருகின்றனர். பல்கலைக்கழக விழா ஒன்றில் தாகூரின் தேசியம் குறித்து பேசிய மோடி, அவரிடம் இருந்தே தற்சார்பு இந்தியா திட்டம் உருவாக்கினோம் என்று பேசியது சர்ச்சையானது. தாகூரை சரிவர உள்வாங்காமல் பேசிக்கொண்டிருக்கிறார் மோடி என வங்கத்தின் கல்வியாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். தேசியம் என்பது போதை, பிளவுபடுத்துவது என்று குறிப்பிட்டவர் தாகூர். முக்கிய தலைவர்களின் கருத்தை தங்கள் சித்தாந்தங்களுக்கு ஏற்றவாறு மாற்றக்கூடாது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

- நன்றி தினகரன்

banner

Related Stories

Related Stories