திமுக அரசு

மம்தா பானர்ஜி மீது கொலை வெறி தாக்குதல் : என்ன நடந்தது? அதிர்ச்சி தகவல்கள் (video)

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது இந்திய ஜனநாயகத்தின் மீதான வெட்கக்கேடான தாக்குதலாகும் என மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மம்தா பானர்ஜி மீது கொலை வெறி தாக்குதல் : என்ன நடந்தது? அதிர்ச்சி தகவல்கள் (video)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் காலில் காயம் மற்றும் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இது திட்டமிட்ட சதி என்று மம்தா பானர்ஜி கூறினார்.

இதையடுத்து தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல் செய்யுமாறு கோரியுள்ளது. மேற்கு வங்க மாநிலத்திற்கு மார்ச் இறுதியில் சட்டசபைத் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெறுகிறது. நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார்.

கொல்கத்தாவிலிருந்து 130 கிலோமீட்டர் தூரம் உள்ள நந்திகிராமில் வேட்புமனு தாக்கல் செய்தார் மம்தா. அதன் பிறகு மெதினிபுர் மாவட்டத்தின் ரியாபாரா பகுதியில் பரப்புரை மேற்கொள்ள வந்த போது அங்கு காருக்கு வெளியே மம்தா நின்றுக்கொண்டிருந்தார். அப்போது, 4 அல்லது 5 பேர் அவரை கீழே தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது.

இதில் கீழே விழுந்த மம்தாவுக்கு காலில் காயம் ஏற்பட்டது. காலில் வீக்கமும் ஏற்பட்டது. இதையடுத்து அவரை அவரது பாதுகாப்பு அதிகாரிகள் தூக்கி காரின் பின் சீட்டில் உட்காரவைத்தனர்

திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல்!

இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த மம்தா பானர்ஜியிடம் இது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலா என கேட்கப்பட்டது. அதற்கு அவர் ஆமாம். அதில் என்ன சந்தேகம் உங்களுக்கு? இது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல்.

காரின் கதவு அருகே நான் நின்றிருந்த போது 4,5 குண்டர்கள் என்னை கார் கதவு நோக்கி தள்ளிவிட்டனர். கார் கதவில் என் கால் மோதியதால் காயம் ஏற்பட்டுள்ளது. என்னை சுற்றி போலீஸாரே இல்லை. பாருங்கள் கால் எவ்வளவு வீக்கமாக இருக்கிறது என்றார்.

இதையடுத்து கொல்கத்தாவில் அரசு மருத்துவமனையில் மம்தா அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவ பரிசோதனையில் மம்தா பானர்ஜிக்கு இடது கணுக்கால், வலது தோள்பட்டை, கை மற்றும் கழுத்தில் கடுமையான எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தாக்குதல் காரணமாக அவருக்கு மூச்சுத் திணறலும், நெஞ்சுவலியும் ஏற்பட்டுள்ளது என தெரிவித்ததை அடுத்து மம்தா பானர்ஜி 5 மூத்த மருத்துவர்கள் குழுவால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்.

இதனிடையே, மம்தா பானர்ஜி தாக்கப்பட்ட சம்பவம் குறித்து செய்தியறிந்ததும் திரினாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மருத்துவமனை முன்பு திரளாக குவிந்துள்ளனர். மம்தா தாக்கப்பட்டதை கண்டித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இச்சம்பவம் தொடர்பாக மாநில தலைமைச் செயலாளர் அறிக்கை தாக்கல் செய்யும்படி மாநிலத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தகவலறிந்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், “மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மீதான வெட்கக்கேடான தாக்குதல் இந்திய ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகும்.

இத்தகைய குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். இனி இவ்வாறு நிகழாதவாறு தேர்தல் ஆணையமும் காவல்துறையும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மமதா பானர்ஜி அவர்கள் விரைந்து நலம்பெற விழைகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories