தேர்தல் 2024

”பா.ஜ.க அமைதியாக வெளியேறாது கொடூரமானதாக மாறும்” : எச்சரிக்கும் பரகலா பிரபாகர்!

பா.ஜ.க அமைதியாக வெளியேறாது கொடூரமானதாக மாறும் என்று தி வயர்’ இணையதளத்தில் பரகலா பிரபாகர் எச்சரிக்கை விடத்துள்ளார்.

”பா.ஜ.க அமைதியாக வெளியேறாது கொடூரமானதாக மாறும்” : எச்சரிக்கும் பரகலா பிரபாகர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

‘‘அமைதியாக வெளியேறாது என்றும், நாட்கள் நெருங்க நெருங்க பா.ஜ.க. கொடூரமானதாக மாறும்’’ என்றும், ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனின் கணவரும் பொருளாதார நிபுணருமான பரகலா பிரபாகர் ‘தி வயர்’ இணையதளத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து ‘தி வயர்’ இணைய தளத்தில் வெளிவந்துள்ள செய்தி வருமாறு:–

மோடி ஆட்சியை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒரு பொது மேடையை (இந்தியா கூட்டணி) உருவாக்கி உறுதியான போராட்டத்தை நடத்தி வருகின்றன. மோடி அரசுக்கு இதை எதிர்கொள்வது சவாலான போராட்டமாக இருக்கும் நிலையில் இந்திய குடிமைச் சமூகம் (தொண்டு நிறுவனங்கள், சமூகம் சார்ந்த அமைப்புகள், மதக் குழுக்கள், தொழிலாளர் சங்கங்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கலாம்) அதைவிட ஒரு சவாலாக உருவாகியுள்ளது. இந்தியா முழுவதும் ஏராளமான மக்கள் சமூக அமைப்புகள் ஆட்சி அதிகார ஆசைகள் இன்றி குடியரசின் அடிப்படையான மதிப்புகளை மீட்க, யாரும் கற்பனை செய்ய முடியாத அளவு வைராக்கியத்துடன் வேலை செய்து வருகின்றனர். மோடி ஆட்சியை வீழ்த்த இவர்களது முயற்சி பெரும் பலனை கொடுக்கும். மோடியை வீழ்த்தப் போராடிவரும் எதிர்க்கட்சிகளின் கூட்டணி இந்த குடிமைச் சமூகத்தின் உதவியில் நல்ல பலனை அடைய உள்ளன.

ஆனால் ஒன்று, தற்போது நடந்து வரும் ஆட்சியில் ஒரு பெரிய ஆபத்து உள்ளது. அது என்னவென்றால் இந்த பா.ஜ.க. ஆட்சி தோற்கடிக்கப்படும் போது அமைதியாக ஆட்சியை விட்டு வெளியேற வாய்ப்பில்லை. இப்போதே தனது தோல்வியைத் தடுப்பதற்கான அனைத்தையும் அவர்கள் செய்து வருவதை நாம் பார்க்கிறோம். ஆட்சி பறிபோவதில் அவர்களுக்கு என்ன பயம்? பதவி இல்லை என்றால் தான் என்ன? இவற்றை எல்லாம் யோசிக்கும் முன் தோல்வியை தடுக்க பா.ஜ.க. இதுவரை மேற்கொண்ட சூழ்ச்சிகளை நாம் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்.

தலைமைத் தேர்தல் ஆணையரை தேர்வு செய்யும் குழுவில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியை நீக்கி, இந்திய ஜனநாயகத்தை உறுதி செய்யும் ஒரு முறையில் இருந்து உச்சநீதி மன்றத்தின் பங்கை இல்லாமல் செய்துள்ளது பா.ஜ.க.. ஆளும் கட்சியால் நியமிக்கப்பட்ட தேர்தல் ஆணையர்கள் பா.ஜ.­க.வை தோல்வி அடைய விடுவார்களா என்பதே சந்தேகமாக உள்ளது. ஏனெனில் தேர்தல் ஆணையத்தின் நடுநிலைத் தன்மை கேள்விக்குறியாகி வருகிறது. இது கவலைக்குரிய விஷயமாகும். தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள பகுத்தறிவற்ற, தேவையில்லாத நீண்ட தேர்தல் அட்டவணை கூட ஆளுங்கட்சிக்கு சாதகமாகவும் அதன் விருப்பத்தை நிறைவேற்றுவதாகவும் அமைந்தது.

பிரதமரும் அவரது கட்சித் தலைவர்களும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை வெளிப்படையாகவே மீறும் போது அவர்கள் மீது தேர்தல் ஆணையம் காட்டுகிற கனிவு, தேர்தல் ஆணையத்தின் நடுநிலையை மேலும் சந்தேகத்திற்குரியதாக ஆக்குகிறது.

மேலும், பா.ஜ.க. அரசு தனது முதன்மைப் போட்டியாளராக உள்ள காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளை முடக்கியது. நாட்டின் வரலாற்றிலேயே முதல் முறையாக ஆட்சியில் உள்ள முதல்வர்களை கைது செய்து, தேர்தல் பிரச்சாரத்தில் அவர்கள் ஈடுபடுவதைத் தடுத்து எதிர்க்கட்சிகளை பலவீனமாக்க முயற்சித்தது. தேர்தல் நடைமுறையே கேள்விக்குறியானது. மேலும் தனது வேட்பாளர்களை எந்தப் போட்டியும் இன்றி தேர்வு செய்ய நியாயமற்ற முறையிலும் தன்னுடைய அதிகார வலிமையையும் பயன்படுத்தியது. அதாவது பிரதான எதிர்க்கட்சி வேட்பாளர்களின் வேட்புமனு செல்லாது என அறிவிக்கச் செய்தது. சிறிய மற்றும் சுயேட்சை வேட்பாளர்களை வாபஸ் பெற மிரட்டல்கள் விடப்பட்டன. சில இடங்களில் அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்யக்கூட அனுமதிக்கப்படவில்லை.

பா.ஜகவிற்கு எதிராக வாக்களிப்பார்கள் என்ற நிலையில் பல இடங்களில் மக்கள் வாக்களிக்கவிடாமல் தடுக்கப்பட்டனர் என்ற செய்திகளும் வெளிவந்தன. அமலாக்கத் துறை, அரசின் புலனாய்வு முகமைகள் எதிர்க் கட்சித் தலைவர்களை மிரட்டி பா.ஜ.க.வில் சேர்க்கவே பயன்படுத்தப்பட்டன. தேர்தல் நெருங்கிய போது அரசு மேடைகளிலேயே நான் மீண்டும் ஆட்சிக்கு வருவேன் என அறிவிப்பு செய்ய துவங்கினார் பிரதமர்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது கூட நான் மீண்டும் ஆட்சிக்கு வருவேன் எனவும் தமது கட்சி 400 இடங்களில் வெற்றி பெறும் எனவும் பிரகடனப்படுத்திக் கொண்டிருந்தார். தனது மோசமான ஆட்சி மீதான வெறுப்பில் மக்கள் கோபம் கொண்டிருப்பதையும் தனது தோல்வியையும் மூடி மறைக்க என்ன வெல்லாம் செய்ய முடியுமோ அனைத்தையும் அவர் செய்தார்.

”பா.ஜ.க அமைதியாக வெளியேறாது கொடூரமானதாக மாறும்” : எச்சரிக்கும் பரகலா பிரபாகர்!

பா.ஜ.க. தோல்வியை தழுவினால் என்ன நடக்கும்?

தேர்தல் பத்திர ஊழல், தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜ.க. கார்ப்பரேட் நிறுவனங்களிடம் வாங்கிய பண விவரங்கள் பொதுவெளியில் வரு வதை தடுக்க ஆட்சியாளர்கள், அரசு அதிகாரிகள் எப்படி தீவிர முயற்சி செய்தார்கள் என்பதை நாம் பார்த்தோம். இந்திய தேர்தல் ஆணையத்திற்கும் பாரதஸ்டேட் வங்கிக்கும் உச்ச நீதிமன்றம் அழுத்தம் கொடுத்து தான் தேர்தல் பத்திர விபரங்களே வெளியே வந்துள்ளன. அதன் பிறகுதான் அது சார்ந்த ஊழல் விபரங்கள் விரிவாக வெளிவந்துள்ளன. இத்தகைய சூழலில் பா.ஜ.க. தோற்கும் போது, புதிதாக அமையும் அரசு இந்த ஊழல் குறித்தான விசாரணைகளை தீவிரப்படுத்தும்.

அது மட்டுமா? மோடி அரசால் மறைத்து வைக்கப்பட்டுள்ள பிஎம் கேர்ஸ் நிதி குறித்த விவரங்கள் அனைத்தும் வெளிக் கொண்டு வரப்படும். ரபேல் ஊழல் விவகாரம் விசாரிக்கப்படும். எதிர்க்கட்சியினர் பத்திரிகையாளர்களை வேவு பார்க்க பெகாசஸ் மென் பொருள் பயன்படுத்தியது குறித்தான விசாரணை துவங்கும். தற்போது வரை பெகாசஸ் வழக்கில் பா.ஜ.க. அரசிடம் இருந்து எந்த ஒரு முறையான தகவலையும் நம் உச்ச நீதிமன்றத்தால் பெற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றை எல்லாம் புதிதாக அமையும் அரசு கையிலெடுக்கும் என்ற அச்சம் தற்போதைய ஆளும் பா.ஜ.க.விற்கு உள்ளது. இவை மட்டுமல்ல, புதிய அரசு, பா,ஜ,க,வின் இந்துத்துவா -கார்ப்பரேட் கூட்டாக உள்ள ‘கூட்டுக்களவாணி முதலாளித்துவத்தையும்’ அம்பலப்படுத்த துவங்கலாம்.

புலனாய்வுப் பத்திரிகையாளர்களால் சமீபத்தில் வெளியிடப்பட்ட செய்தி ஒன்று, கடந்த 10 ஆண்டுகளில் பா.ஜ.க. நன்கொடையாக பெற்றதாக கூறும் தொகைக்கும் அவர்கள் செலவு செய்ததற்கும் ரூ.60 ஆயிரம் கோடி இடைவெளி உள்ளது என அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளன. தற்போதைய ஆட்சியில் அரசு முகமைகள் இது குறித்து எந்த விசாரணையும் செய்யவில்லை.

இந்த நிலையில் மாற்றம் நிகழ்ந்தால் பா.ஜகவால் செய்யப்பட்ட அத்தனை ஊழல்களும், மக்களிடமிருந்து அது மூடி மறைத்த அத்தனை விஷயங்களையும் புதிய ஆட்சி விசாரிக்கத் துவங்கும். குறிப்பாக பணமதிப்பு நீக்கம், கார்ப்பரேட்டுகளுடன் நடத்திய ஊழல்கள், வெளிநாட்டு மண்ணில் இந்திய அரசாங்கத்தின் பேரால் நடத்தப்பட்ட கொலைகள் உள்ளிட்ட தவறான செயல்கள் குறித்தும் விசாரணை செய்யப்படும். அப்போது, தனது நிலைஎன்ன ஆகும் என்ற பயம் பா.ஜ.கவிற்கும் அதை வழிநடத்தக்கூடிய ஆர். எஸ். எஸ் அமைப்பிற்கும் உருவாகியுள்ளது. பா.ஜ.க. குறித்து விசாரணை செய்யும் போது வெளிவரக்கூடிய அத்தனை விஷயங்களும் பா.ஜக.வை அம்பலப்படுத்தக்கூடியவையாகவே உள்ளன. இவ்வாறு மக்களிடையே மோசமாக அம்பலப்படும்போது மக்களிடையே மரியாதையை இழந்து வெறுப்பை சம்பாதித்து எதிர் காலத்தில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவதற்கான சமூக சூழல் இல்லாமல் போகலாம்; இதனால் மீண்டும் பல ஆண்டுகளுக்கு பா.ஜ.க. காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகும்.

மோடி மற்றும் அமித்ஷா செய்துள்ள ஜனநாயக விரோத அக்கிரமங்கள் அம்பலப்பட்டு இந்துத்துவா சக்திகளுக்கு சேதம் உருவாகிறது. இதனால் அவர்களுக்கு உருவாகும் பின்னடைவு மகாத்மா காந்தியின் படுகொலைக்குப் பிறகு அவர்கள் சந்தித்த பின்னடைவுக்கு நிகரானதாக மிகப்பெரிய அடியாக இருக்கும். தேர்தல் காலத்திலேயே பா.ஜ.க. பல இடங்களில் அம்பலப்பட்டு வருவதால் பா.ஜ.க.வும் ஆர்எஸ்எஸும் இயல்பாகவே தேர்தலில் பெரிய எதிர்ப்புகளை சந்தித்து வருகின்றன. இது குறித்த கவலை அவர்களுக்கு ஏற்கனவே உருவாகி உள்ளது.

ஆர்எஸ்எஸ்-இன் நூற்றாண்டு நிறைவடைய இன்னும் ஒரு வருடமே உள்ள நிலையில் ஆட்சி மாற்றம் அவர்களது திட்டத்தை சுக்கு நூறாக்கிவிடும். எனவே தங்களுடைய அதிகாரம் பறிபோவதைத் தடுத்து தக்க வைத்துக் கொள்வதற்கு தேவையான அனைத்தையும் அவர்கள் செய்வார்கள்.

எனவே ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போதே, தங்கள் ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காக தேர்தலில் முறைகேடுகளை செய்வதற்கு எல்லா வாய்ப்புகளையும் அவர்கள் பயன்படுத்துவார்கள். இதற்கு முன்பு நடந்த தேர்தல்கள் போல இந்த தேர்தலம் ஜூன் 1 அன்று வாக்குப்பதிவு முடிந்து ஜூன் 4- அன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டு விடும் என நாம் உறுதியாக கூற முடியாது. வாக்கு எண்ணிக்கைக்கான நாள் நெருங்க நெருங்க மிக மோசமான கலவரங்களை எதிர்கொள்ளக்கூடிய நாட்களை இந்தியா சந்திக்க வேண்டி இருக்கும். வாக்குப்பதிவின் போது தங்களுக்கு விருப்பமான கட்சிக்குத் தான் மக்களின் வாக்குகள் போய்ச் சேருகிறதா என்பதை உறுதி செய்திட எதிர்க்கட்சிகள் இன்னும் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டியது மிக மிக அவசியம்.

– என்று ‘தி வயர்’ இணைய இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

Related Stories

Related Stories