தேர்தல் 2024

பாஜக வேட்பாளரிடமிருந்து 4 கோடி பறிமுதல் செய்தும் ED,IT அமைதியாக இருப்பது ஏன்? - செல்வப்பெருந்தகை கேள்வி !

பாஜக வேட்பாளரிடமிருந்து 4 கோடி பறிமுதல் செய்தும் ED,IT அமைதியாக இருப்பது ஏன்? - செல்வப்பெருந்தகை கேள்வி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சென்னை இராயப்பேட்டையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மாநில தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் அக்கட்சி தேர்தல் அறிக்கையின் தமிழ் மொழிபெயர்ப்பை மாநில தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "1952-ல் இருந்து காங்கிரஸ் சொன்னதையும் செய்தார்கள். சொல்லாததையும் மக்களுக்கு ஏற்ப சட்டங்களை கொடையாக இயற்றினார்கள். அப்படி பாஜகவால், மோடியால் ஏதாவது சொல்ல முடியுமா? கொடுத்த வாக்குறுதிகளை ஒன்றை கூட நிறைவேற்ற முடியவில்லை.

இதுதான் எங்கள் குற்றம் சாட்டு. எங்களோடு வாதத்திற்கு வாருங்கள் என்று நாங்கள் சவால் விட்டு சொல்கிறோம். மோடியும், அண்ணாமலையும் வாயை திறக்க மறுக்கிறார்கள். இரண்டு தினங்களுக்கு முன்பு நான்கு கோடி ரூபாய் பணம் எடுத்திருக்கிறார்கள். இதுவே எதிர்க்கட்சிகள், மாநில கட்சி வேட்பாளர்களிடமிருந்து பணம் எடுத்திருந்தால் சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை வரிந்து கட்டிக் கொண்டு வந்திருப்பார்கள்.

மோடியும், நிர்மலா சீதாராமனும் மௌனமாக இருப்பதற்கு என்ன காரணம்? பழிவாங்கும் நடவடிக்கைகள் வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. பாஜகவை சேர்ந்த நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தற்போது போட்டியிடக் கூடிய வேட்பாளர்கள் என்றால் வழக்கே எதுவும் கிடையாது. இதுதான் பாசிச ஆட்சிக்கு மிகப்பெரிய முன்னுதாரணம். பணம் பறிக்கப்பட்டு மூன்று நாட்களாகிறது ஏன் அமைதியாக இருக்கிறார்கள்? இது தான் பாஜக மாடல் ஆட்சி. வெகு விரைவில் மக்கள் விடை கொடுக்கப் போகிறார்கள்.

பாஜக வேட்பாளரிடமிருந்து 4 கோடி பறிமுதல் செய்தும் ED,IT அமைதியாக இருப்பது ஏன்? - செல்வப்பெருந்தகை கேள்வி !

பாஜக முன்னாள் பிரதமரான வாஜ்பாய் சோனியா காந்தியை துர்கா பாய் என கையெடுத்து கும்பிட்டார். அவர்களின் வழிவந்த மோடி ஏன் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை சொல்கிறார். ஒரு நிதி நிறுவனம் ஏறக்குறைய 500 கோடி ரூபாய்க்கு நிதி மோசடி செய்துள்ளது. இதில் மோசடி செய்தவர்களை காவல்துறை ஏன் விசாரிக்கவில்லை? அமலாக்கத்துறை ஏன் விசாரிக்கவில்லை.அவர் பாஜக வேட்பாளராக களத்தில் இருக்கிறார். ஏன் இதைப் பற்றி விசாரிக்கவில்லை. பங்குதாரர்கள், டெபாசிட் செய்தவர்கள் எல்லாம் நடுங்கி போய் இருக்கிறார்கள். அதுகுறித்து காங்கிரஸ் சட்டத்துறை புகாராக அளித்துள்ளது.ஆயுஷ்மான், சுங்கச்சாவடி, நெடுஞ்சாலை ஊழல் என பல்வேறு ஊழல்கள் கூறப்பட்டுள்ளது.

காங்கிரஸ் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என கூறவும், ஊழல் குறித்து பேசவும் மோடிக்கு என்ன தகுதி இருக்கிறது? உண்மையே பேசத் தெரியாதவர்கள். காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்றுவேன் என ராகுல்காந்தி கூறியிருக்கிறார்கள். திமுக தலைமையிலான மாநில அரசு ஓஎம்ஆரில் உள்ள ஒரு சங்கசாவடியை அகற்றி இருக்கிறது. பாஜகவுடைய வேட்பாளர்கள், அக்கட்சியை சார்ந்தவர்கள் என்றால் வழக்கே கிடையாது. வாஷிங் மெஷினில் போட்டு கிளீன் ஆகிவிட்டு வந்து விடுவார்கள். கங்கையில் குளித்து புனிதமாக்கி விடுவார்கள்.

வேறு யாராவது சுயேட்சையோ, அவர்களுக்கு எதிரான மாநில கட்சியை சார்ந்தவர்கள் என்றால் அவர்களுக்கு எதிராக வழக்கு போட்டு இருப்பார்கள். இதுதான் மோடி மாடல் ரோலிங்.அண்ணாமலையை நோட்டாவுக்கு கீழே அனுப்புவதற்கு தான் தமிழ்நாட்டில் பெரிய மாற்றம் இருக்கிறது, பெரிய எழுச்சி இருக்கிறது. நோட்டாவுக்கு மேலே வர அவர் முயற்சி எடுக்கட்டும்.பாஜகவிற்கும் ,காங்கிரஸ்க்கும் லாஜிக்கல் வேறுபாடுகள் ஏராளமானவை. சம உரிமை, சமத்துவத்தை நேசிக்காத கட்சி தான் பாஜக. அதனுடைய குருநாதர்கள் ஆர்எஸ்எஸ் தலைவர்.மக்களுக்கான இயக்கம், மக்களுக்கான கட்சி பாஜக என கூற முடியாது. பாஜக பிரித்தாலும் கொள்கை உடையது. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே அதிபர் என்பது தான் பாஜக கொள்கை.

இந்தியா கூட்டணி கட்சியில் உள்ள வேட்பாளர்களிடம் பணமே இல்லை. டீ வாங்கி கொடுக்கக்கூட காசு இல்லை. காங்கிரஸ் வேட்பாளர்கள், இந்தியா கூட்டணியில் உள்ள திமுக, கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். அவர்களிடம் நான்கு கோடி எடுத்து உள்ளார்களா?நான்கு கோடி எடுத்தவர்களிடம் தான் பணம் உள்ளது. டீ கூட கிடையாது, தண்ணீர் குடித்து விட்டு தான் வேலை செய்கிறோம்", என்றார்.

banner

Related Stories

Related Stories