தி.மு.க

கலைஞரும் நானும்-3 : “உன‌க்குப் பெண் பார்க்கிறேன் என்றார்..” : கலைஞர் குறித்து நினைவலைகளை பகிர்ந்த திருமா!

கலைஞர் அரங்கத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, எனது திருமணத்தை வலியுறுத்தியதுடன், பெண் பார்த்து, திருமணத்தைத் தலைமை தாங்கி நடத்தத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.

கலைஞரும் நானும்-3 : “உன‌க்குப் பெண் பார்க்கிறேன் என்றார்..” : கலைஞர் குறித்து நினைவலைகளை பகிர்ந்த திருமா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

முதலமைச்சராக 19 ஆண்டுகள், தி.மு.க.வின் தலைவராக 50 ஆண்டுகள், சளைக்காமல் எழுதிய பத்திரிகையாளர், வெற்றிகரமான வசனகர்த்தா என கலைஞரின் பன்முக ஆளுமை எப்போதும் வியப்பளிப்பவை.

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என எத்தனை பரபரப்பில் இருந்தாலும், தனது நெருங்கிய வட்டத்தில் இருந்தவர்களுக்கு அவர் நேரம் ஒதுக்கத் தவறியதே இல்லை. கலைஞரின் கனவை, நினைவை, செயலாற்றலை, சொல்வன்மையை, அவரின் உத்தியை உடனிருந்து அறிந்தவர்கள், அந்த நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும்விதமாக உருப்பெறுகிறது, `கலைஞரும் நானும்' தொடர்.

கலைஞரும் நானும்-3 : “உன‌க்குப் பெண் பார்க்கிறேன் என்றார்..” : கலைஞர் குறித்து நினைவலைகளை பகிர்ந்த திருமா!

`தீவிர கொள்கைக்காரர், தீர்க்கமான அரசியல்வாதி, நேரம் காலம் பார்க்காத கடினஉழைப்பு, சனாதனத்தை எதிர்த்த சமூக நீதி நெருப்பு என கலைஞர் குறித்துத் தனது நினைவுகளைப் பகிர்கிறார் நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவருமான தொல்.திருமாவளவன் அவர்கள்.

 1988-ஆம் ஆண்டு, நான் சட்டக்கல்லூரி மாணவனாக இருந்தபோது முதன்முதலாக கலைஞரைச் சந்தித்தேன். ஈழத் தமிழர் ஆதரவு தொடர்பான பொதுக்கூட்டத்துக்கு வைகோவை அழைப்பதற்காக, மறைந்த பரிதி இளம்வழுதி ஏற்பாட்டின் பேரில், அறிவாலயம் சென்றிருந்தேன். அப்போது அங்கு, ரயில் மறியல் போராட்டம் தொடர்பாக செயல்வீரர்கள் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. எதிர்பாராத வகையில் பார்வையாளராக உட்கார்ந்திருந்த என்னையும், திடீரென பேச அழைத்தனர்.

கலைஞரும் நானும்-3 : “உன‌க்குப் பெண் பார்க்கிறேன் என்றார்..” : கலைஞர் குறித்து நினைவலைகளை பகிர்ந்த திருமா!

நான் பேசுகையில், ஒரு கருத்துக்காகக் கூட்டத்தில் சிறு சலசலப்பு ஏற்பட்டது. உடனே கலைஞர் குறுக்கிட்டு, ``தம்பி திருமாவளவன், ரயில் மறியல் போராட்டம் தொடர்பாக மட்டும் பேசவும்'' எனக் கூட்டத்தைக் கட்டுக்கோப்பாக்கினார். கூட்டம் முடிந்ததும், என்னை அழைத்தவர், அரசியல் இயக்க மேடைகளில், எந்தெந்த வார்த்தைகளைப் பயன்படுத்தக்கூடாது என்றும், இந்த வார்த்தைகளை இப்படிச் சொல்லி இருக்கலாம் என்றும் எடுத்துச் சொன்னார்.

பிறகு, அண்ணன் வைகோ என்னைத் தனியாக அறிமுகம் செய்து வைப்பதற்காக அவரிடம் அழைத்துச் சென்றார். அப்போது எனது கரங்களைப் பிடித்து, `வளர்ந்து வரவேண்டும்' என வாழ்த்தினார்.

வெற்றித் தொகுதி தந்தார்!

அதன்பின்னர், நாங்கள் முதன்முதலில் 2001-ஆம் ஆண்டு தேர்தலில் நிற்கும் போது தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்காக இரண்டாவது தடவையாக கலைஞரைச் சந்தித்தேன். கூட்டணிப் பேச்சு வார்த்தைகளை எல்லாம் தாண்டி, நான் சட்டமன்றத்துக்கு வரவேண்டும் என உளமார‌ நினைத்தார்.

கலைஞரும் நானும்-3 : “உன‌க்குப் பெண் பார்க்கிறேன் என்றார்..” : கலைஞர் குறித்து நினைவலைகளை பகிர்ந்த திருமா!

 அதனால், நான் வலியுறுத்திக் கேட்ட சமயநல்லூர் தொகுதிக்குப் பதிலாக‌, நான் எங்கு நின்றால் எளிதாக வெற்றி பெறலாம் என யோசித்து மங்களூர் தொகுதியில் நிற்கவைத்து வெற்றிபெற வைத்தார். அந்தத் தேர்தலின்போது பிரசார மேடைகளில் எனது உரையைச் சுட்டிக்காட்டி பாராட்டிப் பேசியபோது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

ஈழ ஆதரவை அடைகாத்தவர்!

ராஜீவ்காந்தி படுகொலைக்குப் பின்னர், ஈழத் தமிழர் போராட்ட ஆதரவு நிலையில் பலரும் மெள‌னம் கடைப்பிடித்த நிலையில், ஈழ ஆதரவு நிலையைத் தமிழகத்தில் உயிர்ப்போடு வைத்திருந்தவர் கலைஞர்.

ஈழப்போர் உச்சம் பெற்றிருந்த நேரம், அங்கு, கடைசிக் கட்ட முற்றுகைப் போர் நடக்கிறது. இங்கு தேர்தல் களத்தைச் சந்திக்க வேண்டிய நெருக்கடி. தி.மு.க.வுடனான கூட்டணியில் எங்களுக்கு 2 நாடாளுமன்றத் தொகுதிகளை கலைஞர் ஒதுக்கியிருந்தார். பிரச்சா ரத்துக்குச் செல்லும் மனநிலையில் நான் இல்லை. எனவே, உடனடியாக கலைஞரைச் சந்திக்க நானும், ரவிக்குமாரும் கோபாலபுரம் சென்றோம். தலைவர் அறையிலிருந்தார். தளபதி அழைத்துக்கொண்டு மேலே சென்றார்.

கலைஞரும் நானும்-3 : “உன‌க்குப் பெண் பார்க்கிறேன் என்றார்..” : கலைஞர் குறித்து நினைவலைகளை பகிர்ந்த திருமா!

நாங்கள் நால்வரும் அந்த அறையிலிருந்தோம். நான் எனது மனநிலையை விளக்கினேன். ``ஐயா, இந்த மனநிலையில் என்னால் தேர்தல் பிரச்சாரம் செய்ய முடியாது. எனவே, நாங்கள் தேர்தலைச் சந்திப்பதிலிருந்து விலகிக் கொள்கிறோம். ஆனால், கூட்டணிக்கு ஆதரவு அளிக்கிறோம்.

எங்களுக்கு அளித்த இடங்களைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுங்கள்” எனக் கூறிவிட்டுக் கிளம்பினோம். நான்கைந்து அடிகள் எடுத்து வைத்ததும், கலைஞர் கூப்பிட்டார், ``வாங்க, அவசரப்படாதீங்க. இந்த விஷயத்தில் நிதானமாக யோசிங்க” என்றவர், இலங்கை விவகாரம் குறித்துத் தனது எண்ணத்தை முழுமையாகப் பகிர்ந்துகொண்டது என்னை நெக்குருகச் செய்தது.

கலைஞர் சொன்ன அறிவுரை!

``விடுதலைப்புலிகள் தலைவர் தனது முடிவு குறித்துத் தெரியாமல், இந்தப் போரில் இறங்கிவிட்டதாக நினைக்கிறீர்களா? அல்லது போர் இந்தக் கட்டத்துக்குப் போகும் எனக் கணிக்காமலிருந்ததாக நினைக்கிறீர்களா? அவை குறித்து அவருக்கு நன்கு தெரியும். இந்தப் போரின் இறுதி என்னவாக இருக்கும் எனத் தெரிந்துதான் பிரபாகரன் நிற்கிறார்.

கலைஞரும் நானும்-3 : “உன‌க்குப் பெண் பார்க்கிறேன் என்றார்..” : கலைஞர் குறித்து நினைவலைகளை பகிர்ந்த திருமா!

அவர் மட்டுமல்ல, தனது மனைவி, குழந்தைகள் என அனைவரையும் யுத்தகளத்தில் வைத்துக்கொண்டு போர் செய்து வருகிறார். நீங்களோ அரசியல் களத்தில் மக்களைச் சந்திக்கத் தயங்கினால் எப்படி? களத்தில் வென்று, நீங்கள் எந்த மக்களுக்காகப் பேச வேண்டும் என நினைக்கிறீர்களோ அதை நாடாளுமன்றத்தில் பேசுங்கள். உங்கள் குரலை அங்கு கொண்டு செல்லுங்கள்" என்றார்.

எல்லாவற்றையும் பேசி முடித்துவிட்டு, கண்ணாடியைக் கழற்றியவரின், கண்களில் கண்ணீர் துளிர்த்திருந்தது. அதைத் துடைத்துக்கொண்டே “பின்னர், உங்கள் விருப்பம்” என்று வழி அனுப்பி வைத்தார். அந்தத் தேர்தலில் 4 நாட்கள் மட்டுமே பிரச்சாரம் செய்தோம். நான் நாடாளுமன்றத்துக்கு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தேன்.

ஈழப் போராட்டம் மற்றும் விடுதலைப்புலிகளின் தலைமை ஆகியவற்றில் உண்மையான அக்கறை கொண்டிருந்தவர் கலைஞர். ஈழப்போரின் போக்கு அறியாதவர்கள் மட்டுமே, அந்த விவகாரத்தில் தி.மு.க.வைக் குறை கூறுவார்கள். டெசோ மாநாடு நடத்திய, அவர்களுக்கான ஆதரவினை, உதவிகளை உறுதி செய்தவர் கலைஞர்.

கலைஞரும் நானும்-3 : “உன‌க்குப் பெண் பார்க்கிறேன் என்றார்..” : கலைஞர் குறித்து நினைவலைகளை பகிர்ந்த திருமா!

உள்ளாட்சியில் கைகளைப் பற்றியவர்!

2006-ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலின்போது, நான் இருந்த எதிரணி கூட்டணியில் அதிருப்தியை உணர்ந்தேன். கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துவிட்டேன். `தி.மு.க. கூட்டணிக்கு வருகி றேன்' என வலிந்து கேட்கவும் முடியாது. இந்தச் சூழலில் தனித்து நிற்கலாம் என முடிவெடுத்திருந்த நேரத்தில், எனக்கு ஒரு போன் வருகிறது. எதிர்முனையில் கலைஞர் குரல், ``அறிவாலயம் வாங்க” என்றார். அந்த உள்ளாட்சித் தேர்தலில் எங்களுக்குக் கெளரவ‌மான இடங்களை ஒதுக்கி, வெற்றியை உறுதி செய்தார்.

அதேபோல, அருந்ததியர் இட ஒதுக்கீடு தொடர்பாக, சி.பி.எம். கட்சியினர் தொடர்ச்சியாகக் கோரிக்கைகளை வைத்து போராட்டங்களை நடத்தி வந்தனர். அப்போது கலைஞர் எங்களை அழைத்தார். அங்கு சென்றதும், "அருந்ததியர் இட ஒதுக்கீடு கேட்டுப் போராடுகிறார்களே… என்ன நினைக்கிறீங்க. அதுவும் மார்க்சிஸ்ட் தோழர்கள் 6 சதவிகிதம் கேட்கிறார்களே…

கலைஞரும் நானும்-3 : “உன‌க்குப் பெண் பார்க்கிறேன் என்றார்..” : கலைஞர் குறித்து நினைவலைகளை பகிர்ந்த திருமா!

அவ்வளவோ பேர் இருக்காங்களா?" எனக் கேட்டார். எங்கள் யோசனைகளைக் கேட்டுக் கொண்டவர், 'இது தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்துகிறோம்' என்றார். கலைஞர் நினைத்திருந்தால், அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மட்டும் அழைத்திருந்திருக்கலாம். ஆனால், உரிய முக்கியத்துவம் கொடுத்து யோசனைகள் கேட்பது என்ற கலைஞரின் அந்தப் பண்பு, கற்றுக்கொள்ளவேண்டியதாக இருந்தது.

நுண்ணுணர்வு மிக்க தலைவர்!

தேர்தல் பிரசார மேடைகள் மட்டுமல்லாமல், தோழமை அமைப்பு களின் மேடைகளிலும் கலைஞருடன் மேடைகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். எனது பேச்சுகளைக் கேட்டு, கருத்துகளைப் பகிர்ந்துகொள்வார். கலைஞர் அரங்கத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, எனது திருமணத்தை வலியுறுத்தியதுடன், பெண் பார்த்து, திருமணத்தைத் தலைமை தாங்கி நடத்தத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.

அவர் ஆட்சிக்கு வந்த பிறகு, கொண்டு வந்த திட்டங்களையெல்லாம் பட்டியலிட்டு, நான் அந்த மேடையில் பேசினேன். பிறகு தனது உரையில் பேசுகையில், நா தழுதழுக்க, `தம்பி திருமாவளவன் என்னை ஏதோ செய்துவிட்டார்' என நெகிழ்ந்தார்.

கலைஞரும் நானும்-3 : “உன‌க்குப் பெண் பார்க்கிறேன் என்றார்..” : கலைஞர் குறித்து நினைவலைகளை பகிர்ந்த திருமா!

பெரியாரின் சமூகநீதிக் கொள்கையை, முழுமையாக உள்வாங்கி, அதன் வழியே ஆட்சியை நடத்திச் சென்றவர். ஒடுக்கப்பட்ட, மக்கள், மூன்றாம் பாலினத்தவர், மாற்றுத் திறனாளிகள் என ஒவ்வொருவரையும் நுண்ணுணர்வுடன் அணுகியவர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் தலைவராக மட்டுமல்ல, என்னை, அவர்களின் குடும்பத்தில் ஒருவராகப் பாவித்துக் கொண்டவர். ஒருமுறை எனது கருத்துக்காக, கைகளைப் பற்றி நெஞ்சுக்கு நேரே பிடித்து அழுத்திக்கொண்டார்.

அந்தப் பிடிமானம் கொள்கைப் பிடிமானம். கலைஞர் என்ற சொல் இருக்கும்வரை, அந்தக் கரங்களின் சூடு என் நெஞ்சில் நிற்கும்!''

...பகிர்வார்கள்

Related Stories

Related Stories