தி.மு.க

“என்னுடைய செல்லப்பிள்ளை கலைஞர் என்று பெரியார் அடிக்கடி சொல்லுவார்”: நினைவலைகளை பகிரும் ஆசிரியர் கி.வீரமணி

"சம்பளம் வாங்காத ஆசிரியர்" கலைஞரும் நானும் -1

“என்னுடைய செல்லப்பிள்ளை கலைஞர் என்று பெரியார் அடிக்கடி சொல்லுவார்”: நினைவலைகளை பகிரும் ஆசிரியர் கி.வீரமணி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

முதலமைச்சராக 19 ஆண்டுகள், தி.மு.க.வின் தலைவராக 50 ஆண்டுகள், சளைக்காமல் எழுதிய பத்திரிகையாளர், வெற்றிகரமான வசனகர்த்தா என கலைஞரின் பன்முக ஆளுமை எப்போதும் வியப்பளிப்பவை. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என எத்தனை பரபரப்பில் இருந்தாலும், தனது நெருங்கிய வட்டத்தில் இருந்தவர்களுக்கு நேரம் ஒதுக்கத் தவறியதே இல்லை. கலைஞரின் கனவை, நினைவை, செயலாற்றலை, சொல்வன்மையை, கலைஞரின் உத்தியை உடனிருந்து அறிந்தவர்கள், அந்த நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் பக்கமாக உருப்பெறுகிறது `கலைஞரும் நானும்' தொடர். 

திராவிடர் இயக்கத்தின் பேராளுமைகளில் ஒருவர். தந்தை பெரியாரின் வழி வந்த கொள்கை மாணவர். முத்தமிழறிஞர் கலைஞரின் நேசமிகு இளவல். கழகத் தலைவரோடும் இணைந்து பயணிக்கும் கொள்கை உறவுக்காரர், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தன் 80 ஆண்டு கால பொது வாழ்விலிருந்து முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுடனான தன் அனுபவங்களைப் பகிர்கிறார்.

“என்னுடைய செல்லப்பிள்ளை கலைஞர் என்று பெரியார் அடிக்கடி சொல்லுவார்”: நினைவலைகளை பகிரும் ஆசிரியர் கி.வீரமணி

“மாணவப் பருவத்திலிருந்தே கலைஞரும் நானும் நட்புறவோடு இருந்தவர்கள். தஞ்சை மாவட்டத்தில் அவரும் நானும் போகாத கிராமங்கள் இல்லை. இன்னும் சொல்லப்போனால் பேருந்து வசதி இல்லாத கிராமங்களுக்குக்கூட சைக்கிள் ஹேண்டில் பாரில் என்னை உட்கார வைத்துக்கொண்டு பயணித்துப் பிரசாரம் செய்துவிட்டு வந்த காலங்கள் உண்டு.

 1946-ம் ஆண்டு ‘திராவிட மாணவர்கள் மாநாடு’ என்று ஒரு மாநாடு நடந்தது. அப்போது அடிக்கடி மாணவர் கூட்டங்கள், மாநாடுகள் நடப்பது வழக்கம். அந்த மாநாட்டில் கலந்துகொண்டு நான் கொடியை ஏற்றி வைத்தேன். திருவாரூரிலிருந்து கருப்பு சர்வாணியை போட்டுக்கொண்டு வருகிறார் கலைஞர். அவரின் உடல் முழுவதும் அம்மைக் கொப்பளங்கள். அதோடு வந்து, ஒப்புக்கொண்ட நிகழ்ச்சியைத் தள்ளி வைக்கக் கூடாது என்று மாநாட்டை நடத்தினார்.

“என்னுடைய செல்லப்பிள்ளை கலைஞர் என்று பெரியார் அடிக்கடி சொல்லுவார்”: நினைவலைகளை பகிரும் ஆசிரியர் கி.வீரமணி

என்றும் மாறாத நட்பு

அதுவும் கருப்புச் சட்டை எந்த அளவு வெப்பம் தாக்கி இருக்கும் என்று பாருங்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு தலைப்பு கொடுத்துப் பேசச் சொன்னார்கள். அதில் எனக்கு ‘போர்க்களம் நோக்கி’ என்ற தலைப்பைக் கொடுத்துப் பேசச் சொன்னார்கள். எனக்கு அப்போது 12 வயது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டது முதல் கலைஞர் கண்மூடும் வரை, அவருடன் பயணித்தேன்.

இடையிலே கொள்கை ரீதியாக ஒருசில உரசல்கள் நிகழ்ந்திருக்கலாம். மற்றபடி அந்த நட்பு என்றைக்கும் மாறாததாகவே இருந்துவந்தது. அந்த உரசல்கள் கூட யார் பெரிய கொள்கைவாதி என்ற அடிப்படையில் நிகழ்ந்தவையே அன்றி வேறில்லை. நீரை விட கெட்டியானது ரத்தம்… ரத்தத்தை விட கெட்டியானது கொள்கை உறவு. இதுதான் இந்த இயக்கத்தில் உள்ள தனிச் சிறப்பு.

“என்னுடைய செல்லப்பிள்ளை கலைஞர் என்று பெரியார் அடிக்கடி சொல்லுவார்”: நினைவலைகளை பகிரும் ஆசிரியர் கி.வீரமணி

சுயமரியாதைக்கார‌ செல்லப்பிள்ளை

திராவிட முன்னேற்றக் கழகம் பிரிந்தபோதுகூட, கலைஞரும் பெரியாரும் ஒருவரை ஒருவர் சந்திக்காமலிருந்தபோதுகூட, வழியிலே தங்கள் பயணங்களுக்கு இடையே சந்திக்க நேர்ந்தால், கலைஞர் அவர்கள் பெரியார் அவர்களிடம் நலம் விசாரிப்பார்கள். அய்யா அவர்களும் இயக்கப் பிரிவினை பற்றி எல்லாம் எண்ணாமல், ‘என்னுடைய செல்லப்பிள்ளை கலைஞர்’ என்று சொல்லுவார். அய்யா இந்த வார்த்தையை அடிக்கடி பயன்படுத்தி இருக்கிறார். ‘கலைஞர் என்னுடைய செல்லப்பிள்ளை மாதிரி’ என்று பலமுறை அவர் கூறியிருக்கிறார்.

  ‘குண்டு வீச்சு விமானி’ என்ற புனைப்பெயரில், ‘குடிஅரசு’ இதழில் கலைஞர் எழுதுவார். 

1929-ஆம் ஆண்டு செங்கல்பட்டில் ‘முதல் சுயமரியாதை மாநாடு’ நடந்தது. அதில் பெண்களுக்குச் சொத்துரிமை வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது கலைஞருக்கு வயது 4. பின்னாளில் அவரே முதல்வராகி அந்தத் தீர்மானத்தை சட்டம் ஆக்கினார். அது பெரியாரின் பாராட்டைப் பெற்றது.

“என்னுடைய செல்லப்பிள்ளை கலைஞர் என்று பெரியார் அடிக்கடி சொல்லுவார்”: நினைவலைகளை பகிரும் ஆசிரியர் கி.வீரமணி
psrpi5

கொள்கை அளவில் நாங்கள் எப்போதும் ஈரோட்டு குருகுலவாசிகள். பத்திரிகையாளர் ஒருவர் கலைஞரிடம் உங்களைப் பற்றி ஒரு வரியில் விமர்சித்துக் கொள்ளுங்கள் என்று கேட்டபோதுகூட, ‘மானமிகு சுயமரியாதைக்காரன்’ என்ற‌வர் கலைஞர்.

முதல் ஆசிரியர்!

கலைஞர் அவர்களிடம் ஒரு கட்டுரையைக் கொடுத்தாலோ ஒரு புத்தகத்தைக் கொடுத்தாலோ பார்த்ததுமே அதில் உள்ள பிழைகளை ஓர் ஆசிரியரைப் போல் கிடுகிடுவெனத் திருத்திவிடும் வல்லமை பெற்றவர். ‘விடுதலை’ பத்திரிகை கோபாலபுரத்திலிருக்கும் கலைஞர் வீட்டில் போட்ட பிறகுதான் அடையாறி லிருக்கும் என் வீட்டில் போடுவார்கள்.

சில முறை அலைபேசியில் அழைத்து, ‘ஆசிரியர்… என்ன விடுதலையில் இந்த தலைப்பில் உள்ள செய்தி மாறி வந்திருக்கு’ என்று கேட்பார். நானும் சிரித்துக்கொண்டே ‘என்னங்க விடுதலைக்கு முதல் ஆசிரியர் நீங்கதான். உங்களுக்குத்தான் முதலில் பத்திரிக்கை போடுகிறார்கள். நீங்கள் திருத்தம் சொன்னால் அதைப் போட்டுவிட வேண்டியதுதான். ஈரோட்டில் ஆரம்பித்தது, இப்போதும் நீங்கள் சம்பளம் வாங்காமல். ‘விடுதலை’யின் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டுதானே இருக்கிறீர்கள்’ என்று வேடிக்கையாகக் கூற, இருவரும் சிரித்துக்கொள்வோம்.

“என்னுடைய செல்லப்பிள்ளை கலைஞர் என்று பெரியார் அடிக்கடி சொல்லுவார்”: நினைவலைகளை பகிரும் ஆசிரியர் கி.வீரமணி

‘தம்பி’க்கே தகுதி!

அண்ணாவின் மரணத்துக்குப் பிறகு, ‘தி.மு.க.வின் அடுத்தத் தலைமை சரியாக இருக்க வேண்டியது முக்கியமானது. அண்ணா வகுத்த பாதையிலிருந்து நழுவக்கூடாது. இந்தக் கொள்கை மிகவும் பலமான கொள்கை. வாராது வந்த மாமணி போன்றது இந்த ஆட்சி வாய்ப்பு’, என்று தந்தை பெரியார் மிகுந்த கவலையுடன் யோசித்துக்கொண்டிருந்தார்.

அதுபற்றி பலரிடமும் கருத்துக் கேட்ட நிலையிலே ஒரு நாள் முழுவதும் அய்யா அவர்கள் ஆழமாகச் சிந்தித்துக் கொண்டிருந்தார். மறுநாள் காலையில் நான் சென்று அவரைச் சந்தித்தேன். ‘என்ன நினைக்கிறீர்கள்?’ என்று கேட்டேன்.

“என்னுடைய செல்லப்பிள்ளை கலைஞர் என்று பெரியார் அடிக்கடி சொல்லுவார்”: நினைவலைகளை பகிரும் ஆசிரியர் கி.வீரமணி

‘கருணாநிதி வந்தால்தான் சிறப்பாக இருக்கும். இந்தக் காலத்திலே கொள்கை உறுதியோடு இருக்கக்கூடியவர்கள், பல்வேறு எதிர்ப்புகளுக்குத் தலையைக்கொடுக்க வேண்டியிருக்கும். கட்சியை வழிநடத்திச் செல்வதற்கும், ஆட்சியை வழிநடத்திச் செல்வதற்கும் தயாராக இருக்கவேண்டும். அந்தத் தகுதி கலைஞருக்குத்தான் உண்டு. உடனடியாக நீங்கள் போய் கலைஞரைச் சந்தித்து நான் அவரையே ஆட்சிக்குத் தலைமையேற்க வலியுறுத்தியதாகச் சொல்லுங்கள்’ என்றார்.

பெரியாரின் வெற்றித் தொலைநோக்கு 

நேரடியாக கோபாலபுரம் போனேன். கலைஞரிடம் விஷயத்தைச் சொன்னேன். ‘இது அய்யா அவர்கள் உங்களுக்கு கூறிய கட்டளை’ என வலியுறுத்தினேன். பெரியாருடைய தொலைநோக்கு எவ்வளவு சரியாக இருந்தது என்று எண்ணிப் பாருங்கள். அன்றைக்கு மட்டும் கலைஞர் அவர்கள் அந்தப் பொறுப்பை ஏற்காமலிருந்திருந்தால் இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகம் எந்த நிலையில் இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். அதன் விளைவாகத்தான் ‘திராவிட மாடல்’ என்பதை இன்று உலகம் முழுவதும் பாராட்டி பலரும் அதை ஆய்வு செய்து வரக்கூடிய சூழலையும் நாம் பார்க்கின்றோம்.'' 

...பகிர்வார்கள்.

நன்றி : இளைஞர் அணி வெளியீடுகள் - முரசொலி பாசறை

Related Stories

Related Stories