தி.மு.க

“இதைச் செய்தாலே போதும்.. நம் வெற்றி உறுதி” : DMK IT Wing நிர்வாகிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை!

“மலையளவு பொய்யாக இருந்தாலும், அதை உடைக்க உண்மை ஒன்றே போதும். அதை யாரும் மறந்துவிடாதீர்கள். நீங்கள் உண்மைகளை மக்களிடம் எடுத்துச் சொன்னாலே போதும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

“இதைச் செய்தாலே போதும்.. நம் வெற்றி உறுதி” : DMK IT Wing நிர்வாகிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

"புதிய திறமையாளர்களை அடையாளம் கண்டு, புது யுகம் எங்களது யுகம் என ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளைத் தொடருங்கள்!" என திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

இன்று (05-02-2022) மாலை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பில் நடைபெற்ற காணொலிக் கலந்துரையாடலில் பங்கேற்று, கழகத் தகவல் தொழில்நுட்ப அணியினருக்கு வழிகாட்டுதல்களை வழங்கி உரையாற்றினார்.

அவர் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:

திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கும் அணிகளில் ஒன்றான தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பில் இந்தக் கலந்துரையாடல் கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ள அதன் செயலாளர் டி.ஆர்.பி.ராஜா அவர்களுக்கு முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த அணியை உருவாக்கி இதில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராசன் சிறப்பாகச் செயல்பட்டு வந்தார். நிதி அமைச்சராக ஆன பிறகு இரண்டையும் சேர்த்து கவனிக்க இயலாத அளவுக்குப் பணிச்சுமையில் தள்ளப்பட்டார். 'இந்தப் பொறுப்பில் இருந்து நான் விலகிக் கொள்கிறேன்’ என்று அவர் என்னிடம் சொன்னார். அதைத் தொடர்ந்து தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளராகச் சட்டமன்ற உறுப்பினர் ராஜா நியமிக்கப்பட்டிருக்கிறார்.

அவரும் சட்டமன்ற உறுப்பினராகவும், மாநிலத் திட்டக் குழு உறுப்பினராகவும் இருக்கிறார். அத்துடன் தகவல் தொழில்நுட்பப் பிரிவையும் சேர்த்து கவனிக்க முன்வந்துள்ளார்.

கழகத்தின் அடிப்படைக் கொள்கை மீது அழுத்தமான நம்பிக்கையும் - செயல் திறனும் - மக்கள் பணியும் - அதே நேரத்தில் தகவல் தொழில்நுட்ப அறிவும் கொண்ட ராஜாவைப் போன்றவர்கள் இப்பொறுப்பினை முன்வந்து ஏற்றுக்கொண்டு இருப்பது உண்மையிலேயே பாராட்டுக்குரியது. துடிப்பானவர்கள் கையில் இந்த அணி இருப்பதைப் பார்த்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

தகவல் யுகமான இந்தக் காலக்கட்டத்தில் தகவல் தொழில்நுட்ப அணியின் முக்கியத்துவம் அதிகமாக இருப்பதை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள். செய்திகளுக்காக அடுத்த நாள் காலை வரை மக்கள் காத்திருந்த காலக்கட்டத்தில் இருந்து, இணையவசதியால் நொடிக்கு நொடி செய்திகளை தெரிந்து கொள்ளும் டிஜிட்டல் யுகத்துக்கு வந்துவிட்டோம். எல்லா நிகழ்ச்சிகளையும் இருக்கும் இடத்தில் இருந்தே மக்கள் நேரலையில் பார்த்து தெரிந்து கொள்கிறார்கள். அதனால், தகவல் தொழில்நுட்ப அணியினரான நீங்கள், எல்லோரையும் விட கூடுதல் வேகத்தோடு பணியாற்ற வேண்டும்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நெருங்கி வருகிறது. கழக அரசின் சாதனைகளை இளைஞர்களிடையே – சமூக வலைத்தளங்களில் இயங்குபவர்களிடையே கொண்டு சேர்க்க வேண்டிய கடமையும் பொறுப்பும் உங்களுக்குத்தான் உள்ளது.

ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு நான் எப்படிப் பணியாற்றி வருகிறேன் என்று நான் உங்களுக்குச் சொல்லத் தேவையில்லை. நாள்தோறும் மக்களோடு மக்களாக இருக்கிறேன்.

கோட்டையில் உட்கார்ந்து உத்தரவு போடுபவனாக மட்டுமின்றி – மக்களுக்கு அந்த உத்தரவுகளின் பயன் முறையாகப் போய்ச் சேருகின்றனவா என்பதைக் கவனிக்கும் பணியையும் செய்துகொண்டு இருக்கிறேன். இதற்குச் சாட்சியாகப் பல புகைப்படங்களும் காணொளிகளும் செய்திகளும் உள்ளன.

சிலர் போல போட்டோஷாப் செய்யாமல் இருப்பதால்தான் நடுநிலையாளர்களின் நம்பிக்கையை நாம் பெற்றிருக்கிறோம். அகில இந்திய அளவிலான ஊடகங்கள் நம்மைப் பாராட்டி வருகின்றன. இதையெல்லாம் நீங்கள் மக்களுக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்க வேண்டும்.

இந்தியாவில் எந்த மாநில அரசும் செய்யாத சாதனைகளை நாம் செய்துகொண்டு வருகிறோம். கொடுத்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றியிருக்கிறோம்.

* மகளிருக்குக் கட்டணமில்லாப் பேருந்து வசதி

* ஆவின் பால்விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு

* பெட்ரோல் லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு

*முகாம் வாழ் இலங்கைத் தமிழர்க்கு 317 கோடி ரூபாயிலான திட்டங்கள்

* தந்தை பெரியார் பிறந்தநாள் சமூகநீதி நாளாகக் கொண்டாட்டம்

* அயோத்திதாச பண்டிதருக்கு நினைவு மணி மண்டபம்

* விழுப்புரத்தில் சமூகநீதிப் போராளிகளுக்கு மணிமண்டபம்

* நெசவாளர் கோரிக்கையை ஏற்று பஞ்சுக்கு ஒரு விழுக்காடு நுழைவு வரி ரத்து

* தமிழ்நாடு ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல ஆணையம் உருவாக்கம்

* கொரோனாவால் ஏற்பட்ட இடைநிற்றல், கற்றல் இழப்பு ஆகியவை பெற்றோர்கள் இடையே பெரும் கவலையை உண்டாக்கியது. அந்தக் கவலையைப் போக்க வந்ததுதான் “இல்லம் தேடிக் கல்வி” என்ற திட்டம். இன்று, உலகப் புகழ்பெற்ற பொருளியல் அறிஞர் ஜீன் திரேஸ் அவர்களே இந்தத் திட்டத்தை ஜார்க்கண்ட் மாநிலத்திலும் தொடங்க வேண்டும் என்று அந்த மாநில அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளார் என்றால் இதன் வீச்சு எந்த அளவுக்கு இருக்கிறது என்று நீங்கள் உணர்ந்து கொள்ளலாம். இன்றைக்கு 1 லட்சத்து 73 ஆயிரத்து 792 குழந்தைகள் அவரவர் வயதுக்கு ஏற்ற வகுப்புகளில் வெற்றிகரமாகச் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

* “மக்களைத் தேடி மருத்துவம்” என்கிற மகத்தான திட்டத்தின் வழியாக மருத்துவச் சேவையை இல்லங்களுக்கே கொண்டு சேர்க்கும் பணியில் இதுவரை 48,07,359 பேர் பயனடைந்திருக்கிறார்கள்.

* “இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48 திட்டம்”என்ற திட்டத்தின்படி சாலை விபத்துகளில் சிக்கி விலை மதிப்பற்ற உயிர்கள் பறிபோவதைத் தடுத்து வருகிறோம். தமிழ்நாட்டில் எந்த மூலையில் ஒருவர் விபத்துக்குள்ளானாலும் - முதல் 48 மணி நேர சிகிச்சையை அரசே ஏற்றுக்கொண்டுள்ள கருணைமிக்க திட்டம் இது. இதன்படி இதுவரை 12,922 உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கிறது.

* கடந்த ஏழு மாதங்களில் மூன்று உலக முதலீட்டாளர் மாநாடுகளை நடத்தியிருக்கிறோம். 56 ஆயிரத்து 230 கோடி முதலீடுகள் திரட்டப்பட்டுள்ளது. 1 லட்சத்து 74 ஆயிரத்து 999 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் 109 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இவற்றில் இதுவரை 21 ஆயிரத்து 508 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் துவங்கப்பட்டுவிட்டன.

* தமிழ்நாடு நிதி நுட்பக் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.

* தமிழ்நாடு ஏற்றுமதி ஊக்குவிப்புக் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.

* உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் 2 லட்சத்து 29 ஆயிரத்து 216 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

* நகர்ப்புற ஏழை மக்களுக்கான வேலைவாய்ப்புத் திட்டம் கீழ் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு - 18 ஆயிரத்து 526 பேருக்கு வேலைக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

* மகளிருக்கு பேருந்துகளில் அளிக்கப்பட்ட இலவசப் பயணம் நல்ல பலனைத் தந்துள்ளது. 40 விழுக்காடாக இருந்த மகளிர் பயணம், 61 விழுக்காடாக உயர்ந்துள்ளது.

* இந்த நிதியாண்டில் - 4 லட்சத்து 2 ஆயிரத்து 829 பேர் கொண்ட 29 ஆயிரத்து 425 புதிய மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

* இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு - 1,628 கோடி ரூபாய் மதிப்புள்ள 432 ஏக்கர் பரப்பளவு திருக்கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

* கொரோனா நிவாரண நிதி 4 ஆயிரம் ரூபாயை 2 கோடியே 15 லட்சம் குடும்பங்கள் பெற்றுள்ளார்கள்.

* கொரோனா கால நிவாரணமாக 13 பொருட்களை 2 கோடியே 15 லட்சம் குடும்பங்கள் பெற்றுள்ளார்கள்.

* 18 லட்சத்து 30 ஆயிரம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள் பயன்பெறும் வகையில் அவர்களுக்கான அகவிலைப்படி அதிகரிக்கப்பட்டுள்ளது.

* 5 பவுனுக்கு கீழே நகைக்கடன் பெற்ற 13 லட்சத்து 50 ஆயிரம் குடும்பங்களுக்கு கடன் ரத்து செய்யப்பட்டுள்ளது.

* மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான 2 ஆயிரம் கோடி மதிப்பிலான கடன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

* தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு 21 பொருட்கள் கொண்ட பொங்கல் பரிசை 2 கோடியே 15 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கி இருக்கிறோம்.

- இப்படி துறைவாரியாக நான் சொல்லிக்கொண்டே போகலாம்.

கோப்புகள் எப்போதும் - எந்தச் சூழலிலும் தேங்கக் கூடாது என்று தலைவர் கலைஞர் அவர்கள் சொல்வார். அந்த அடிப்படையில், என்னிடம் வரும் அனைத்துக் கோப்புகளையும் அந்தந்த மாதத்துக்குள் முடிவுகளை எடுத்து முடித்திருக்கிறேன்.

இவை அனைத்தையும் தமிழ்நாட்டு இளைஞர்கள், இணையத்தள மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது.

இந்தச் சாதனைகளைச் சொன்னாலே போதும் – தி.மு.க.வின் வெற்றி எளிதாகிவிடும். திமுக மீதான நம்பிக்கை அதிகம் ஆகும். இந்த சாதனைகளை மறைக்கவும் - திசைதிருப்பவும்தான் எதிரணியினர் முயற்சி செய்கிறார்கள்.

நமக்கு எதிராக, எதிரணியினர் செய்து வருகிற பணிகள் எது என்று கேட்டால் - நம் மீது அவதூறுகள் பரப்புவதும், பொய்கள் சொல்வதும்தான். உண்மையான – ஆக்கப்பூர்வமான விமர்சனமாக இருந்தால் அதை நாம் ஏற்றுக் கொள்ளலாம். அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் அவர்கள் பொய்களை, உண்மை போலக் காட்ட நினைக்கிறார்கள்.

இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் கடந்த எட்டுமாத காலத்தில் மகத்தான சாதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. அதனைத் தாங்கிக் கொள்ள முடியாதவர்கள், நூற்றுக்கணக்கான கோயில்களை இடித்து விட்டதாகப் பொய்ச்செய்தி பரப்பி வருகிறார்கள். எங்கே, எப்போது, ஏன் என்று எந்த ஆதாரத்தையும் அவர்கள் தருவது இல்லை. ஆனால் அவர்கள் பரப்பும் பொய்ச் செய்திகள் வேகமாகப் பரவுகின்றன. இந்த நிலையில், உண்மையில் அந்தத் துறையின் சார்பில் நாம் முன்னெடுத்து வரும் திட்டங்களை ஆதாரங்களோடு வெளியிடுவதுதான் அதற்கான சரியான பதிலாக இருக்க முடியும்.

மலையளவு பொய்யாக இருந்தாலும், அதை உடைக்க உண்மை ஒன்றே போதும். அதை யாரும் மறந்துவிடாதீர்கள். நீங்கள் உண்மைகளை மக்களிடம் எடுத்துச் சொன்னாலே போதும். எதிரணியினர் நம்மைக் கோபப்படுத்துவார்கள், ஆத்திரப்படுத்துவார்கள். அதற்கு நாம் எதிர்வினையாற்ற வேண்டும் என்பதுதான் அவர்கள் எதிர்பார்ப்பது.

அவர்களைப் போல நீங்கள் செய்யாதீர்கள். நாம் மிகப்பெரிய இயக்கம் - அதுவும் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் இயக்கம். அவர்கள் போல நாம் நடந்துகொள்ள முடியாது. வெறும் கரண்டி பிடித்துள்ளவன் கையை எப்படி வேண்டுமானாலும் ஆட்டலாம். ஆனால் எண்ணெய்க் கரண்டியைக் கையில் வைத்துள்ள நாம் அந்த மாதிரி செய்ய முடியாது. ஆட்சியில், அதிகாரத்தில் நாம் இருப்பதால் அவர்கள் அளவுக்குக் கீழே இறங்கி சண்டை போட முடியாது. எனவே எச்சரிகையுடன்தான் நாம் நம்முடைய வாதங்களை வைக்க வேண்டும். இதை நீங்கள் எப்பவும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

சாதியைச் சொல்லித் திட்டுவார்கள். மதத்தை வைத்துத் திட்டுவார்கள். பெண்களாக இருந்தால் ஆபாசமாகத் திட்டுவார்கள். நமது குடும்பத்தை இழிவுபடுத்துவார்கள். அதுதான் அவர்களின் பண்பாடு!

'வாழ்க வசவாளர்கள்' என்கிற அடிப்படையில்தான் நாம் செயல்படவேண்டும்! இதுதான் நமது பண்பாடு.

பதில் சொல்கிறோம் என்று நினைத்துக் கொண்டு புதுப் பிரச்சினையை உருவாக்கக் கூடாது. சமீபகாலமாகத் தேவையற்ற சில விமர்சனங்களை நம்முடைய இணையதளத் தோழர்களில் சிலர் செய்கிறார்கள். அதையும் நான் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். என் கவனத்துக்கு எதுவும் தப்புவதில்லை.

தலித் தலைவர்கள் குறித்தும் - இலங்கை விவகாரங்கள் குறித்தும் - அவசியமற்ற விவாதங்களைச் சிலர் செய்வது மூலமாகக் கழகத்துக்கு அவர்கள் நன்மையைச் செய்யவில்லை; கெட்ட பெயரைத்தான் தேடித் தருகிறார்கள். அதுபோன்ற செயல்களைச் செய்யாதீர்கள்.

நம்மிடம் சொல்வதற்கு ஏராளமான சாதனைகள் இருக்கின்றன. நம்மிடம் சொல்வதற்கு வரலாறு இருக்கிறது. நமது முன்னோடியான தலைவர்கள், மிகப்பெரியவர்கள் - லட்சிய வேட்கை கொண்டவர்கள் – அதற்காகப் பல தியாகங்களைச் செய்தவர்கள்! இதைச் சொன்னாலே போதும். தேவையில்லாததைச் சொல்ல வேண்டாம்.

தொலைக்காட்சி ஊடகங்கள் - இணையத்தளங்கள் - ஃபேஸ்புக் - ட்விட்டர் ஆகியவற்றின் வரிசையில் அதிகப்படியான மக்களால் படிக்கப்படுவது வாட்ஸ்அப் செய்திகள்தான். புதிய புதிய வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்குங்கள். நம்மைப் போல சிந்தனைகள் கொண்டவர்கள் மட்டுமே இருக்கிற குழுக்களில் கொள்கைகள் – செய்திகளை விவாதிக்கலாம். ஆனால், அதன் மூலமாக நமது சாதனைகளை – வரலாற்றைச் சாதாரண மக்களிடம் கொண்டு சேர்க்க முடியாது. அதனால் குடும்ப வாட்ஸ்அப் குழுக்கள், பொதுவான குழுக்கள் ஆகியவற்றில் நம்முடைய செய்திகளைப் பகிருங்கள். பொய் சொல்வதற்கே சிலர் கூச்சப்படாதபோது, உண்மையைப் பேசுவதற்கு நீங்கள் ஏன் தயங்குகிறீர்கள்? அந்தத் தயக்கத்தை உடைத்து எறியுங்கள்.

உண்மையான செய்திகளை எல்லோருக்கும் கொண்டு சேர்ப்போம். அதற்கு உங்களை நீங்களே கூர்தீட்டிக் கொள்ளவேண்டும்; செம்மைப்படுத்திக் கொள்ளவேண்டும். அதற்கு நிறையத் தகவல்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். நிறைய படிக்க வேண்டும். யார் எந்தக் குற்றச்சாட்டு வைத்தாலும் அதற்கு உடனடியாகப் பதில் சொல்லத் தயாராக இருக்க வேண்டும். சுயவிளம்பரங்களை விடவும் கழகம்தான் பெரிது – கழகக் கொள்கைகள்தான் பெரிது என்பதை உணர வேண்டும். இந்தக் காலத்தில் DATAதான் மிகப்பெரிய POWER என்று நான் உங்களுக்குச் சொல்லத் தேவையில்லை. ஒரு விவகாரத்தில் நீங்கள் எந்த அளவு தெளிவாக இருக்கிறீர்களோ, அதுதான் உங்களுடைய பலம் என்பதை நீங்களே அறிவீர்கள்.

தகவல் தொழில்நுட்ப அணியின் வேலைகளுடன் மக்களுக்கு நீங்கள் உதவியாகவும் இருக்க வேண்டும். அதாவது, அனைத்து மாவட்டக் கழக அலுவலகங்களிலும் 5 கணிணிகளை அமைத்து, பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, பிறப்புச் சான்றிதழ், இறப்புச் சான்றிதழ் உள்ளிட்டவற்றை பெறுவதற்கும் - முதலமைச்சர் தனிப் பிரிவுக்கான புகார் மனுக்கள் அனுப்புவது போன்ற செயல்களுக்கும் உதவியாக இருக்க வேண்டும். இதுபற்றி மாவட்டக் கழகச் செயலாளர்களுக்கு நான் அறிவுறுத்தியிருக்கிறேன்.

அதேபோல, சமூக வலைதளங்களில் சிறப்பாகச் செயல்படும் மாவட்டக் கழகச் செயலாளர்களுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட அமைப்பாளர்கள் உதவியாக இருக்க வேண்டும்.

மேடைப் பேச்சில் எழுத்துத் திறத்தில் வல்லவர்களான திராவிட இயக்கத்தினர் – திராவிட முன்னேற்றக் கழகத்தினர், டிஜிட்டல் யுகத்தில், ஃபேஸ்புக் – ட்விட்டர் – யூடியூப் – இன்ஸ்டாகிராம் என்று அனைத்துத் தளங்களிலும் தங்களது படைப்பாற்றலால் கழகக் கொள்கைகளைக் கொண்டு சேர்க்கும் தீரர்களாக உருவாக வேண்டும். புதிய திறமையாளர்களை அடையாளம் காணுங்கள்! அவர்களது படைப்பாற்றலை ஊக்குவியுங்கள்! அவர்களது படைப்புகளின் வழியாகக் கழகக் கொள்கைகளை எட்டுத்திக்கும் கொண்டு செல்லுங்கள்! கருப்பும் சிவப்பும் இணையத்தை ஆளட்டும்! புது யுகம் எங்களது யுகம் என ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளைத் தொடருங்கள் என்று சொல்லி விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்.

இவ்வாறு அவர் உரையாற்றினார்.

banner

Related Stories

Related Stories