தி.மு.க

“பேராசிரியர் பெருந்தகை நூற்றாண்டினை ஓராண்டு முழுவதும் கொண்டாடுவோம்” : தி.மு.க தீர்மானம்!

தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் “இனமானப் பேராசிரியர் பெருந்தகை நூற்றாண்டு தொடக்கம்” குறித்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

“பேராசிரியர் பெருந்தகை நூற்றாண்டினை ஓராண்டு முழுவதும் கொண்டாடுவோம்” : தி.மு.க தீர்மானம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தி.மு.க மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் “இனமானப் பேராசிரியர் பெருந்தகை நூற்றாண்டு தொடக்கம்” குறித்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

தி.மு.க மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:

“முதலில் நான் மனிதன். இரண்டாவது நான் அன்பழகன். மூன்றாவது நான் சுயமரியாதைக்காரன். நான்காவது நான் அண்ணாவின் தம்பி. ஐந்தாவது கலைஞரின் தோழன்” என்று தன்னை முன்மொழிந்து கொண்டவர் திராவிட முனனேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக ஏறத்தாழ 50 ஆண்டுகாலம் செயலாற்றிய கொள்கை வீரராம் நம் மதிப்பிற்குரிய இனமானப் பேராசிரியர் அவர்கள்.

அவரது நூற்றாண்டு 2021 டிசம்பர் 19-ஆம் தேதி தொடங்குகிறது. அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவராக இருக்கும்போதே பெரியாரின் பகுத்தறிவு - சுயமரியாதைக் கொள்கைகளை ஏற்று, பேரறிஞர் அண்ணாவின் அன்பையும் நட்பையும் பெற்று, திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னோடியாகத் திகழ்ந்து, பேரறிஞர் அண்ணா அவர்களின் மறைவுக்குப் பிறகு முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் நண்பராக - தோழராக - அண்ணனாக இருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தை நெருக்கடி நெருப்பாறுகளிலிருந்து காப்பாற்றுவதற்குத் துணை நின்ற கொள்கை இமயம் நம் இனமானப் பேராசிரியர்.

சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், மாநில அமைச்சர் எனப் பொறுப்புகளை வகித்தபோது தனது சிந்தனையையும் செயல்பாடுகளையும் தமிழர் நலனுக்காக வெளிப்படுத்தியவர். தலைவர் கலைஞருடன் இணைந்து நின்று ஈழத்தமிழர் உரிமைக்காக தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியைத் துச்சமெனத் தூக்கி எறிந்தபோது பேராசிரியர் அவர்களின் இலட்சிய உறுதி வெளிப்பட்டது.

“பேராசிரியர் பெருந்தகை நூற்றாண்டினை ஓராண்டு முழுவதும் கொண்டாடுவோம்” : தி.மு.க தீர்மானம்!

தலைவர் கலைஞர் அவர்களுக்கு எந்தளவு தோளோடு தோள் நின்றாரோ, அதுபோலவே நம் கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பு வகித்த பருவத்திலிருந்தே அவரின் கொள்கையுணர்வை வலுப்படுத்தி, அரசியல் நெறிப்படுத்தி, இயக்கத்தை வளர்க்கும் ஆற்றலைப் பெருக்கியவர் பேராசிரியர் பெருந்தகை அவர்கள்.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் இயக்கப் பணிகளிலும் சட்டமன்றப் பணிகளிலும் அரும்பெரும் ஆலோசனைகளை வழங்கி, தலைவரின் வளர்ச்சியில் மகிழ்ச்சி கண்டவர். கழகத்தின் கடைக்கோடித் தொண்டனுக்கும் திராவிட இயக்கக் கொள்கைகளைக் கொண்டு சேர்க்கும் வகையில் அவருடைய பேச்சாற்றல் அமைந்திருந்தது. பேராசிரியர் என்ற சொல்லுக்கேற்ப தத்துவப் பாடங்களை மேடைப் பேச்சின் வழியே எளிமையாக எடுத்துரைத்தவர்.

எந்நாளும் கொள்கை வழுவாமல், கழகமே உறவு என செயலாற்றி, பெருவாழ்வு வாழ்ந்த பெருமகனார் பேராசிரியர் அவர்கள் விரும்பியவாறு, தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழக அரசு, நமது கழகத் தலைவர் அவர்கள் தலைமையில் தனிப்பெரும்பான்மையுடன் அமைந்து, மக்களின் பெரும் நம்பிக்கையையும் வாழ்த்துகளையும் பெற்றுள்ள நிலையில், இனமானப் பேராசியர் அவர்களின் நூற்றாண்டு தொடங்குவது நமக்கு கிடைத்துள்ள நல்வாய்ப்பு.

மறைந்தாலும் நெஞ்சில் வாழும் பேராசிரியர் பெருந்தகை அவர்களின் நூற்றாண்டினை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஒவ்வொரு மாவட்டக் கழகத்தின் சார்பிலும் ஓராண்டு முழுவதும் தொடர்ச்சியாகக் கொண்டாடுவதுடன், ஒவ்வொரு கிளையிலும் பேராசிரியர் நூற்றாண்டு நிகழ்வுகளை நடத்தி, நலத்திட்ட உதவிகளை வழங்கியும், படிப்பகங்கள் - நூலகங்களைத் திறந்தும், இளைய தலைமுறையினருக்குப் பயிற்சி வகுப்புகளை நடத்தியும் இனமானப் பேராசிரியரின் புகழ் ஒளி பரவிடச் செய்திடுவோம் என இந்தக் கூட்டம் தீர்மானிக்கிறது.”

இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories