தி.மு.க

“முத்தமிழறிஞர் கலைஞர் என்பது வெறும் பெயரல்ல; அது தமிழ்நட்டின் வரலாறு” - நடிகர் பொன்வண்ணன் பெருமிதம்!

பேச்சு, எழுத்து, அரசியல் ஆளுமை உள்ளிட்ட பல கலைகளில் தனித்திறமையோடு வாழ்ந்து காட்டியவர் முத்தமிழறிஞர் கலைஞர் என நடிகர் பொன்வண்ணன் புகழாரம் சூட்டியுள்ளார்.

“முத்தமிழறிஞர் கலைஞர் என்பது வெறும் பெயரல்ல; அது தமிழ்நட்டின் வரலாறு” - நடிகர் பொன்வண்ணன் பெருமிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் -மாவட்டச் செயலாளரும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருமான பி.கே. சேகர்பாபு,‘கலைஞர் எனும் வரலாறு’ என்ற தலைப்பில், ‘கருத்தரங்கம்' ஒன்றினை, ஜூன் 2 அன்று, பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் உள்ள லட்சுமி மகாலில் மிகவும் சிறப்புற நடத்தினார்.

இக்கருத்தரங்கில், ``கலைஞர் எனும் வரலாறு கலை’’ எனும் தலைப்பில், நடிகர் பொன்வண்ணன் உரையாற்றினார். அவ்வுரையில் அவர், "கலைஞர் எனும் வரலாறு. ` கலைஞர்’என்பது வெறும் பெயரல்ல; அதனுள் தமிழக வரலாறு அடங்கியுள்ளது - என்று குறிப்பிட்டார்.

அவரது உரை வருமாறு:-

1924ல் ஆரம்பித்த ஒரு வரலாறு. இன்று இந்த சபையின் மூலம் நினைவு கூரப்படுகிறது!. வணங்கப்படுகிறது..! மனித இனம் அதனது பயணத்தில் குகை வழி ஓவியக்கலைகளில் தொடங்கி 64 கலைகளை வரையறுத்துக் கொண்டது. உலகத்தின் எல்லா நிலப்பரப்புகளிலும் வாழ்ந்த பூர்வக் குடிகளுக்குள்ளும் பொதுவாகவே அந்த 64 கலைகளும் இருந்திருக்கிறது.

அந்தக் கலைகளை தன் அடையாளமாக வாழ்நாள் முழுக்க பல்வேறு நிலைகளில் அடையாளப்படுத்தி வாழ்ந்தவர்களில் முதன்மையானவராக நம் முன் கலைஞர் அவர்கள் இருக்கிறார்கள்.. முதல் உலகப்போருக்குப் பிறகு 1924ம் ஆண்டு என்பது உலகம் முழுக்க மாபெரும் வரலாற்று மாற்றங்கள் நடந்து கொண்டிருந்தது. அந்தக் காலகட்டத்தில் பிறந்தவர்தான் கலைஞர். தட்சணா மூர்த்தி என்ற பெற்றோர் வைத்த பெயர் கருணாநிதியாகவும் அடுத்து கலைஞர் ஆகவும் முத்தமிழறிஞர் என்றும் மாறியதற்கு கிட்டத்தட்ட 85 வருட ஓட்டம் இருந்திருக்கிறது. இது வெறும் பெயர் மாற்றமல்ல.. அதனுள் தமிழக வரலாறும் அடங்கிக் கிடக்கிறது..!

“முத்தமிழறிஞர் கலைஞர் என்பது வெறும் பெயரல்ல; அது தமிழ்நட்டின் வரலாறு” - நடிகர் பொன்வண்ணன் பெருமிதம்!

இலக்கியக் கலை!

18 வயதில் அவர் "முரசொலி" பத்திரிகையை ஆரம்பித்து தன்னை பத்திரிகையாசிரியர் என்கிற கலையில், ஈடுபடுத்திக் கொண்டவர். அவருடைய 22 வயதில், கும்பகோணத்தில் ஒரு மேடை நாடகத்தை அரங்கேற்றி தன்னை ஒரு நடிகனாக "நாடகக் கலையில்"" தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். அதனுடைய தொடர்ச்சியாக, மேடைப் பேச்சுகள் - பேச்சுக் கலை என்பதை அவர் 22 வயதிலிருந்து தனக்குள் உள்வாங்கிக் கொண்டவர். ஈரோட்டிலிருந்து குடிஅரசு பத்திரிகை, காஞ்சிபுரத்திலிருந்து வெளிவந்த திராவிட நாடு என்ற இரண்டு பத்திரிகைகளும் மிகப்பெரிய ஆளுமைகளாலும், மிகப்பெரிய வரலாற்றுச் சாதனையாளர்களாலும் நடத்தப்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில், அவர்களோடு தன்னை இணைத்துக் கொண்டு, அரசு இயல் கலையிலும் தன்னை முன்னிறுத்திக் கொண்டவர்.

திரைக்கலையிலும் முதன்மையானவர்!

அடுத்து சங்க இலக்கியம் சார்ந்து, அவரது எழுத்து, கவிதைகள் வழியாக "இலக்கியக் கலையிலும்" தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். 1950 ஆம் ஆண்டுகளில் தொடங்கிய அவருடைய திரைப்பயணத்தில் மந்திரி குமாரி, பராசக்தி, போன்ற படங்களுக்கு கதை வசனம் எழுதியதின் வழியாக "திரைக் கலையிலும்" தன்னை ஈடுபடுத்திக் கொண்டு முதன்மையானவர். அதனுடைய தொடர்ச்சியாக அரசியல் ஆளுமை என்று எடுத்துக் கொண்டால், இதே சென்னையில், சென்னை மாநகராட்சித் தேர்தலில் பொறுப்பேற்று மிக முக்கியமான முதல் வெற்றியை பெற்று , அதை அண்ணாவிடம் சமர்ப்பித்தவர் கலைஞர் அவர்கள். அந்த தினத்திலிருந்து "அரசியல் ஆளுமை என்ற கலையை தன்வசப்படுத்திக் கொண்டவர். அண்ணா அவர்கள் காலமாகிய பிறகு, அன்றைக்கு இருந்த அரசியல் சூழ்நிலையில், இயக்கத்தில் இருந்த மிகப்பெரிய போட்டிகளுக்கிடையே, அவர் திறமையின் காரணமாக, "முதலமைச்சர் என்ற மிகப்பெரிய பொறுப்புக்கு வந்தவர். இந்தச் சாதனைகள் எல்லாம் முப்பது வயதுக்குள் சாத்தியப்படுத்தினார்.

கலைஞரின் ரசனைக்கான வெளிப்பாடுகள்!

தமிழ்நாடு முதல்வரான பிறகு அவர் முன்னெடுத்து வடிவமைத்த கட்டிடங்கள், நூலகங்கள், சிலைகள், வரலாற்று ஓவியங்கள், இலக்கியங்கள் என அனைத்தும் அவரின் ரசனைக்கான வெளிப்பாடுகளாக இன்றும் சாட்சியாக இருக்கின்றது..! தமிழக வரலாற்றில், கலையுடனும், ஆளுமையுடனும் திகழ்ந்தவர் என்பதற்கு உதாரணமாக இப்பொழுதும் சொல்லப்படுவர் சோழர்கள் காலத்தில் வாழ்ந்த இராஜராஜ சோழன் ஆவார். அவரைப்போல், கிட்டத்தட்ட ஆயிரத்து சொச்சம் ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு ஆளுமையுள்ள, கலை ரசனையுள்ள நடனம், இசை, ஓவியம், ஆளுமை, அரசியல், சாணக்கியம் - இப்படி கலைகளை நாம் எந்தவிதமாகப் பிரித்தாலும் சரி, குடும்பம், உறவுகள், நகைச்சுவை, பேச்சு, கவிதை, எழுத்தாற்றல் இப்படி எந்த ஆளுமைகளையும் நாம் கலைகளாகப் பிரித்து உணர்ந்தாலும் சரி அத்தனைக்கும் தனித்தனிப்பட்ட முறையில், கலைஞர் அவர்கள் பக்கம் பக்கமாக பேசக்கூடிய அளவிற்கு, தனித்திறமையோடு வாழ்ந்து காட்டியவர்.

“முத்தமிழறிஞர் கலைஞர் என்பது வெறும் பெயரல்ல; அது தமிழ்நட்டின் வரலாறு” - நடிகர் பொன்வண்ணன் பெருமிதம்!

கலைஞர் என்கிற பட்டம் எம்.ஆர். இராதா அவர்களால், தூக்குமேடை நாடகத்தின் போது கொடுக்கப்பட்டது என்று வரலாறு பதிவு செய்தாலும், அந்தப் பட்டம் கொடுக்கப்படுவதற்கு முன்பு, கிட்டத்தட்ட 40 ஆண்டு காலகட்டத்தில், அவர், அவருடைய சாதனைகளைப் பதிவு செய்த பிறகுதான், அந்தப் பட்டம் கொடுக்கப்படுகிறது. பெயருக்கு மேடையில் கொடுக்கப்பட்ட பட்டமல்ல. அனைத்து கலைகளிலும் அவருக்கிருந்த ஈடுபாடு, அதை வெளிப்படுத்தியபோது மக்கள் கொடுத்த அங்கீகாரம் என்பது இன்று தம் முன் சாட்சியங்களாக இருக்கின்றது..! கலைஞர் என்கிற பட்டம்! நான் திரைத்துறையில் இருப்பதினால், என் பெயருக்கு பின்னால் திரைக்கலைஞர் என்று குறிப்பிடுவார்கள்..! ஓவியம் எனக்குத் தெரியும் என்பதால் என்னை "ஓவியக் கலைஞர்" என்றும் சொல்வார்கள்.

அப்படி, எந்தவொரு கலைஞர்களாக இருந்தாலும் அவர்களின் திறமையின் அடிப்படையில்தான் "கலைஞர் என்ற பெயர் சொல்லப்படுகிறதே தவிர- "கலைஞர்" என்கிற ஒரு சொல்லாடல், அடையாளமாக இருக்கிறார் என்றால், அதற்கான உழைப்பும், அர்ப்பணிப்பும் பிரமிக்கத்தக்கவை..! சொல்லாடலின் வலிமை - கலைகளின் எந்த கோணத்திலிருந்து பார்த்தாலும் "கலைஞர்" ஒரு முழுமையான "கலைஞராக" இருக்கிறார். கலைஞரின் 98 வது பிறந்தநாளில் என் நினைவுகளை உங்களோடு பகிர்ந்து கொண்டதில் எனக்கு மகிழ்ச்சி..! அனைவருக்கும் என் அன்பு நன்றிகள்!

இவ்வாறு பொன்வண்ணன் தனது உரையில் பேசியுள்ளார்.

banner

Related Stories

Related Stories