தி.மு.க

கல்வி வளர்ச்சியில் தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்றிய கலைஞர் அரசு : மகுடம் சூடிய தி.மு.க-9

இந்தியாவிலேயே முதன்முதலாக 1970 ஆண்டு மார்ச் மாதம் தி.மு.க ஆட்சியில் தமிழ்நாடு பாடநூல் கழகம் உருவாக்கப்பட்டது.

கல்வி வளர்ச்சியில் தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்றிய கலைஞர் அரசு : மகுடம் சூடிய தி.மு.க-9
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தி.மு.க ஆட்சியில் கல்வி வளர்ச்சி

1971-1972ஆம் ஆண்டில் 136 தொடக்கப் பள்ளிகளும் 50 உயர்நிலைப் பள்ளிகளும் ஆரம்பிக்கப்பட்டன. 1971-1972 ஆம் ஆண்டில் 136 தொடக்கப் பள்ளிகளும் 50 உயர்நிலைப் பள்ளிகளும் தொடங்கப்பட்டன. 1967 முதல் 1976 வரையிலான ஆட்சிக் காலத்தில் 724 தொடக்கப்பள்ளிகளும் 319 உயர்நிலைப் பள்ளிகளும் புதிதாக திறக்கப்பட்டன.

1989 முதல் 1991 வரையிலான தி.மு.கழக ஆட்சியில் 518 தொடக்கப்பள்ளிகள் புதிதாகத் திறக்கப்பட்டன. 208 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலை பள்ளிகளாகவும் 144 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டன.

2006-2011 தி.மு.க ஆட்சியின் போது 561 புதிய தொடக்கப்பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டன. 2,589 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும், 635 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும் 560 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டன. அரசு பள்ளிகள் கட்டிட மற்றும் வகுப்பறை வசதிகள் மேம்படுத்தி தரப்பட்டன.

அரசுப் பள்ளிகளுக்கு கற்றல் கற்பித்தல் மானியங்கள் வழங்கப்பட்டன. 1996 ஆம்ஆண்டு கரும்பலகைத் திட்டத்தின்கீழ் ஓர் ஆசிரியர் பள்ளிகளில் கூடுதலாக ஒரு ஆசிரியர் நியமிக்கப்பட்டார். தமிழகத்தில் முதன்முதலாக பள்ளிகளில் கணித ஆய்வகங்கள் ஏற்படுத்தப்பட்டன. அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 1999-2000 ஆண்டுகளில் கணினிக் கல்வி வகுப்புகள் தொடங்கப் பட்டன. பள்ளி மாணவர்களுக்கு கணினிகள் வழங்கப்பட்டன.

2008-2009 ஆம் ஆண்டில் 6 முதல் 10 வகுப்பு மாணவர்களுக்கு கணினி அறிவியில் பாடம் முதன்முதலாக திமுக அரசு காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. மேல்நிலைப் பள்ளிகளில் தொழில் கல்வி வசதிகள் செய்துதரப்பட்டன. 10 மற்றும் 12 வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தி.மு.க காலத்தில் 1997 முதல் வினாவங்கி ஏடுகள் மற்றும் வழிகாட்டி நூல்கள் வெளியிடப்பட்டன.

சென்னை மாநகராட்சியில் மேயராக மு.க.ஸ்டாலின் பதவி வகித்த காலத்தில் கல்வி முன்னேற்றத்தில் அவர் மிகுந்த அக்கறை செலுத்தினார். சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பொதுத் தேர்வு எழுதிய 12ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 55 சதவிதத்திலிருந்து 88 சதவிதமாக உயர்ந்தது.

கல்வி வளர்ச்சியில் தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்றிய கலைஞர் அரசு : மகுடம் சூடிய தி.மு.க-9

1996ம் ஆண்டிற்குப் பிறகு சென்னை மாநகராட்சியில் 8 தொடக்கப் பள்ளிகள் புதியதாக தொடங்கப்பட்டன. 12 தொடக்கப் பள்ளிகள் நடுநிலை பள்ளிகளாகவும் 22 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும் 6 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டன. சென்னையில் 10 மண்டலங்களில் 102 ஆசிரியர்களைக் கொண்டு 30 மழலையர் வகுப்புகள் (LKG, UKG) தொடங்கப்பட்டன. அவ்வகுப்புகளில் 4,500 மழலையர் படித்து பயன் பெற்றனர்.

நகராட்சிப் பள்ளிகளில் 1 முதல் 5 வகுப்பு வரை மத்திய உணவு பெரும் அனைத்து மாணவர்களுக்கும் பாட நூல்கள் சிலேட்டு பலகைகள் இலவசமாக வழங்கப்பட்டன. ஆங்கில மொழியைக் கற்பிக்கும் முறையை மேம்படுத்த ஆங்கில மொழி கற்பிக்கும் இயக்கம் தொடங்கப்பட்டது. 1996ம் ஆண்டிற்கு பிறகு சுமார் 2,000 ஆசிரியர்கள் பணி அமர்த்தப்பட்டனர். மாநகராட்சி வரலாற்றில் முதன்முதலாக இந்தியாவில் எந்த மாநகராட்சியும் இல்லாத வகையில் சென்னை மாநகராட்சியில் சமூதாய கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. அதேபோல் தொழில் பயிற்சி மையங்கள் ஆரம்பிக்கப்பட்டு நடத்தப்பட்டன.

சமச்சீர் கல்வி : மெட்ரிகுலேசன், ஆங்கிலோ இந்தியன் ஓரியன்டல் கல்வி ஆகிய பல்வேறு கல்வி முறைகளை ஆய்வு செய்து அவற்றிலிருந்த வேறுபாடுகளைக் களைந்து அனைத்து பள்ளிகளுக்கும் ஏற்ற தரமான ஒரே கல்வியாக சமச்சீர் கல்வியை திமுக அரசு நடைமுறைப்படுத்தியது. 2010 ஆண்டு தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் 1 முதல் 6 வரை சமச்சீர் கல்வி நடைமுறைப்படுத்தப்பட்டது. 2011 ஆண்டு 7, 8, 9, 10 ஆகிய வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வியை தி.மு.க அரசு நடைமுறைப்படுத்தியது. அனைத்து பாடகளுக்கும் பாட நூல்கள் தயாரித்து வழங்கப்பட்டன.

இந்தியாவிலேயே முதன்முதலாக 1970 ஆண்டு மார்ச் மாதம் தி.மு.க ஆட்சியில் தமிழ்நாடு பாடநூல் கழகம் உருவாக்கப்பட்டது. அனைத்து வகுப்பு மாணவர்களுக்கான பாடநூல்களை தயாரித்து வழங்குவது அதன் முக்கிய பணியாகும். தமிழகத்தில் முதன்முதலாக தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திற்கு ஆசிரியர் கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தால் ஒப்புதல் வழங்கப்பட்டது.

மாணவர்களின் நலனைப் போல் ஆசிரியர்களின் நலனிலும் திமுக அரசு அக்கறை காட்டியது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் தொட்டு ஆசிரியர்களுக்கும் அலுவலர்களுக்கும் இருந்த வந்த ரகசிய குறிப்பேடு முறையை திமுக அரசு 20.02.1972 அன்று நீக்கியது.

பணிக்காலத்தில் இயற்கை எய்திடும் ஆசிரியர்கள், அரசு ஊழியர், குடும்ப பாதுகாப்பு திட்டம் இந்தியாவிலேயே முதன்முதலாக 1974ஆம் ஆண்டு திமுக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. அக்குடும்பங்களுக்கு அரசு சார்பாக ரூ.1 இலட்சம் வழங்கப்பட்டது. அதேபோல் பணிக்காலத்தில் இறக்க நேரிடும் ஆசிரியர்கள் / அரசு ஊழியர்கள் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கும் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டது. ஆசிரியர் நல்வாழ்வு நிதிதிட்டம் 1996-97 அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி ஆசிரியர்கள் உடல்நலக்குறைவு ஏற்படும்போது சிகிச்சைக்காக நிதி உதவி வழங்கப்பட்டது.

1960 முதல் தமிழகத்தில் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது. எனினும் அத்திட்டத்தின் கீழ் தி.மு.க ஆட்சிக் காலத்தில் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கும் பிறகு மற்ற பள்ளி ஆசிரியர்களுக்கும் நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட்டன. நல்லாசிரியர் விருது என்பது டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது என்ற பெயரில் வழங்கப்படும் என்று 1997 ஆண்டு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் அறிவித்து செயல்படுத்தினார். விருதுக்கான தொகையும் அதிகரிக்கப்பட்டது. ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு, ஓய்வூதியம் போன்ற நல்ல திட்டங்கள் திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டன.

பார்வையற்ற மாணவர்களுக்கான பிரெய்லி புத்தகங்களை வெளியிட பூந்தமல்லியில் உள்ள பார்வையற்றோர் பள்ளியில் அச்சகம் ஒன்று 1968ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தமிழகத்தில் கல்வியில் பின்தங்கிய 13 மாவட்டங்களில் 18 மாதிரி பள்ளிகள் 2010-2011 தொடங்கி வைக்கப்பட்டன. பள்ளி மாணவர்களின் உடல்நலத்தை பாதுகாக்க 1999-2000 கல்வியாண்டில் தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் வாழ்வொளி திட்டம் செயல்படுத்தப்பட்டன.

10 மற்றும் 12 வகுப்பு முடித்து செல்லும் மாணவர்களுக்கு பள்ளிகளிலேயே ஜாதி சான்றிதழ், வாழ்விடச் சான்றிதழ். குடும்ப வருமானச் சான்றிதழ் ஆகியன வழங்கும் 1999-2000 கல்வியாண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்மூலம் 14,11,173 மாணவ மாணவியர் பயன்பெற்றனர்.

கல்வி வளர்ச்சியில் தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்றிய கலைஞர் அரசு : மகுடம் சூடிய தி.மு.க-9

மேல்நிலைப்பள்ளி தேர்வில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கும் திட்டம் 1989 ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. கிராமப்புற ஏழை மாணவர்கள் தொடர்ந்து கல்வி பெற ஆண்டுதோறும் ரூ.1000 கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. 10, 12 வகுப்பு தேர்விலும் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப்பெறும் மாணவர் மாணவியர்களின் கல்வி செலவு முழுவதும் அரசே ஏற்றுக்கொள்ளும் திட்டம் திமுக அரசால் 1996ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

பட்டதாரிகள் இல்லாத குடும்பங்களிலிருந்து தொழிற்கல்வி பிரிவில் சேரும் முதல் பத்து நிலை பெற்ற மாணவர்களின் கல்விச் செலவை 1996-1997ஆம் ஆண்டு கல்வி முதல் தமிழ்நாடு அரசு ஏற்றது. கிராமப்புற மாணவர்களுக்கு தொழிற்கல்வி அனைத்து பிரிவுகளிலும் 15 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் திட்டம் 1997-1998 கல்வியாண்டு முதல் நடைமுறைப் படுத்தப்பட்டது.

1967 ஆம் ஆண்டு முதல் ஒன்றிலிருந்து மூன்று வகுப்பு வரை படித்த மாணவர்களுக்கு பாட நூல்கள் இலவசமாக வழங்கப்பட்டன. இதன்படி 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெற்றனர். 2007-2008ஆம் ஆண்டு முதல் ஒன்றாம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும் தமிழ் பாட நூல்கள் இலவசமாக வழங்கப்பட்டன.

1990ஆம் கல்வி ஆண்டில் எட்டாம் வகுப்பு வரை படித்த மாணவ மாணவியர்களுக்கு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கும் இலவச பேருந்து சீட்டு வழங்கப்பட்டது. மு.க.ஸ்டாலின் அவர்களது முயற்சியால் 1996 ஆம் ஆண்டு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படித்த மாணவர்களுக்கு இலவச பேருந்து பயணச் சீட்டுகள் வழங்கப்பட்டன.

பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற விவசாயத் தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்விக்கு தமிழ்நாடு அரசு பேருதவி புரிந்தது.

இந்தியாவில் முதன்முதலாக திமுக ஆட்சியில் 1999-2000 கல்வியாண்டில் 676 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்புகளில் கணினிக் கல்வி அறிமுகப் படுத்தப்பட்டது. அடுத்த ஆண்டு 516 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கணினி கல்வி அறிமுகப் படுத்தப்பட்டது. சென்னை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் கணினி கல்வி அறிமுகப் படுத்தப்பட்டது.

திமுக ஆட்சியில் தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்ககம் தொடங்கப்பட்டது. 10 மற்றும் 12ம் வகுப்புகளில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்கள் தேர்வு கட்டணம் ரத்து செய்யப்பட்டது. இதன் மூலம் 10 லட்சம் மாணவ மாணவியர் பயன்பெற்றனர்.

பத்தாம் வகுப்பில் எல்லா பாடல்களையும் ஒரே தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயம் இருந்து ஏதாவது ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறாவிட்டால் மறுபடியும் எல்லா பாடங்களிலும் தேர்வு எழுத வேண்டும் என்பது நடைமுறையில் இருந்தது. இவ்வாறு பலமுறை படித்தும் தேர்வில் வெற்றி பெறமுடியாத மாணவர்களின் இடைநிற்றல் அதிகமாவதைத் தவிர்க்கும் வகையில் தனித்தனி பாடங்களில் தேர்வு பெறும் முறை கொண்டு வரப்பட்டது. மாணவர் எந்த பாடத்தில் தேர்வு பெறவில்லையோ அந்த பாடத்தை மட்டும் மறுபடியும் எழுதினால் போதும் என்ற விதிமுறை நடைமுறைப் படுத்தப்பட்டது. அதனால் இடைநிற்றல் குறைந்ததோடு மாணவர்கள் தேர்வில் வெற்றி பெறும் முறையும் எளிதாகப்பட்டது.

பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களும் கட்டாயம் தமிழ் மொழி கற்க வேண்டும் என்று 31-5-2006 அன்று கலைஞர் தலைமையிலான திமுக அரசு ஆணை பிறப்பித்தது. முதன்மை மொழியாக தமிழ் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்று 19-11 -1999 ஆம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது. தமிழ் மொழியை முதன்மை பாடமாகக் கொண்டு பயிலும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

அரசு பொது நூலகத்துறைக்கு என தனியாக ஒரு இயக்ககம் ஏற்படுத்தப்பட்டது. 2010-2011ம் ஆண்டில் தமிழகமெங்கும் 4028 நூலகங்கள் செயல்பட்டு வந்தன. 2007-2008 ஆம் கல்வியாண்டில் புதிய நூலகங்கள் திறக்கப்பட்டன. 100 உயர்நிலைப் பள்ளிகள், 70 மேல்நிலைப் பள்ளிகளில் நூலக வசதிகள் செய்து தரப்பட்டன. வாடகைக் கட்டடங்களில் இயங்கி வந்த 93 அரசு நூலகங்களுக்கு சொந்த கட்டிடங்கள் கட்டி தரப்பட்டன.

ரூபாய் 120 கோடி மதிப்பீட்டில் சென்னை கோட்டூர்புரத்தில் உலகத்தரம் வாய்ந்த அண்ணா நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டு தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

கல்வி வளர்ச்சியில் தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்றிய கலைஞர் அரசு : மகுடம் சூடிய தி.மு.க-9

இளைஞர்கள் நலனுக்காக புதிதாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை எனும் ஒரு துறை உருவாக்கப்பட்டு அதற்கு தனியாக ஒரு அமைச்சர் பதவியும் ஏற்படுத்தப்பட்டது. 2011 ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சி காலத்தில் 6,908 உடற்பயிற்சி மையங்கள் துவக்கப்பட்டன. நேரு விளையாட்டு அரங்கத்தில் பல புதிய கட்டுமானப் பணிகள் செய்து முடிக்கப்பட்டன பல விளையாட்டு அரங்கங்கள் ஏற்படுத்தப்பட்டன விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதற்காகவும் உலக அளவிலும் தேசிய அளவிலுமான போட்டிகளில் அவர்களை வெற்றி பெற வைப்பதற்காகவும் அவர்களுக்கு சிறப்பான பயிற்சிகள் வழங்கப்பட்டன. அவர்களுக்கு பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி அவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காகவும் மாற்றுத் திறனாளிகள் மற்றும் நலிவுற்றோருக்கு உதவுவதற்காகவும் உலக வங்கி உதவியுடன் 2006 ஆம் ஆண்டு வாழ்ந்து காட்டுவோம் திட்டம் திமுக அரசால் இத்திட்டம் 70 வட்டங்களில் 1,661 ஊராட்சிகளில் ரூபாய் 950 கோடி முதலீட்டில் செயல்படுத்த பட்டவை. தமிழக அரசு இதனை சிறப்பாக செயல்படுத்தியதற்காக உலக வங்கி தமிழக அரசைப் பெரிதும் பாராட்டிச் சிறப்பித்தது.

பள்ளி கல்விக்கு சமமாக கல்லூரிக் கல்வியும் பல்கலைக்கழக கல்வியும் மருத்துவ பொறியியல் சட்ட கல்வியும் திமுக ஆட்சியில் சிறப்பான முன்னேற்றத்தை எய்தியது. உரிய முக்கியத்துவம் வழங்கப்பட்டு பல உயர்கல்வி நிறுவனங்கள் அதற்காக உருவாக்கப்பட்டன. பள்ளிக் கல்வி வளர்ச்சிக்கு கர்ம வீரர் காமராஜர் பங்காற்றியதுபோல் தொடக்க கலவி முதல் பல்கலைகழகம் வரையிலான கல்வி வளர்ச்சிக்கு முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் பெரும் பங்காற்றினார்.

தமிழ்நாட்டின் முதலமைச்சராக 6-3-1967 அன்று பொறுப்பேற்ற பேரறிஞர் அண்ணா அவர்கள் 17-6-1967 தமிழ்நாடு சட்டமன்றத்தில் வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றும்போது தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு புகுமுக வகுப்பு வரை இலவச கல்வி வழங்கப்படும் என்று அறிவித்து நடைமுறைப் படுத்தினார். பின்னர் கலைஞர் அவர்கள் ஆட்சியில் உயர்நிலைப் பள்ளியில் இருந்து பட்டப் படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இலவசக் கல்வி வழங்கப்பட்டது.

அண்ணா பொறியியல் பல்கலைக்கழகம், எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக் கழகம், வேளாண்மை பல்கலைக்கழகம், கால்நடை பல்கலைக் கழகம், ஆசிரியர் பயிற்சி கல்வியியல் பல்கலைக் கழகம் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகம், கடல்சார் பல்கலைக் கழகம் என பல துறைகள் சார்ந்த பல்கலைக் கழகங்கள் திமுக ஆட்சியில் ஏற்படுத்தப்பட்டன.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக் கழகம் போன்ற பல பல்கலைக்கழகங்கள் தமிழ்நாட்டில் ஏற்படுத்தப் பட்டன. மாலை நேர கல்லூரிகள் 1971-72 ஆம் ஆண்டு முதல் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டன. அஞ்சல் வழிக் கல்வித் திட்டம் 1972-1973ல் தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில்தான் முதன்முதலாக தொடங்கப் பட்டது. கல்லூரி கல்வி தேர்வுகளில் செமஸ்டர் முறை திமுக ஆட்சி காலத்தில் அறிமுகப் படுத்தப்பட்டது.

1967-1968 ஆம் ஆண்டில் 11 புதிய கல்லூரிகளும் 1968-1969 ஆம் ஆண்டில் 10 புதிய கல்லூரிகளும், 1969-1970 ஆறு புதிய கல்லூரிகளும் 1970-1971 நான்கு புதிய அரசுக் கல்லூரிகளும், 15 தனியார் கல்லூரிகளும் தொடங்கப் பட்டன. 1972 ஆண்டு பொறியியல், மருத்துவக் கல்லூரிகளில் பயின்ற மாணவர்களுக்கு வட்டியில்லா கல்விக் கடன் வழங்கப்பட்டது. 1969 முதல் 1970 வரை இளம் அறிவியல் பட்ட வகுப்புகளில் தாவரவியல் விலங்கியல் பாடங்கள் தமிழ் மொழியில் பயிற்றுவிக்கப்பட்டன. 1970-71 முதல் 1974-1975 வரை புகுமுக வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 377 தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது

1971 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் 1972 மதுரையில் மதுரை பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டன. மதுரை, பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக் கழகங்களில் திருக்குறள் இருக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. அலகாபாத், கேரளம், கொல்கத்தா, ஆந்திரா பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள் 1968-1969 தி.மு.க ஆட்சிக்காலத்தில் ஏற்படுத்தப்பட்டன.

கல்லூரிகளில் முன்பு தமிழ் பயிற்று மொழியாக அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் ஆங்கில மொழியும் பயிற்று மொழியாக அறிவிக்கப்பட்டு தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளும் பயிற்சி மொழிகளாக அரசால் அறிவிக்கப்பட்டன.

தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு 1972 முதல் திமுக ஆட்சிக்காலத்தில் கல்வி கடன் வழங்கப்பட்டது. ஒவ்வொரு மாணவருக்கும் தலா ரூபாய் 970 முதல் 1850 வரை வழங்கப்பட்டது. 1971 முதல் 1975 வரையிலான திமுக ஆட்சியில் மொத்தம் 9 லட்சத்து 58 ஆயிரத்து 617 தாழ்த்தப்பட்ட மாணவ மாணவியர்களுக்கு கல்வி கடன் வழங்கப்பட்டது. பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு பாதி கட்டணம் செலுத்தினால் போதும் என்ற சலுகை வழங்கப்பட்டது.

கல்வி வளர்ச்சியில் தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்றிய கலைஞர் அரசு : மகுடம் சூடிய தி.மு.க-9

மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு நடைபெற்றுவந்த பொது நுழைவுத்தேர்வுகளை திமுக அரசு 6-12-2006 ரத்து செய்து அரசாணை பிறப்பித்து. 2007-2008 கல்வி ஆண்டு முதல் சட்டக்கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.

சென்னை பல்கலைக்கழகத்தில் திராவிட இயக்க ஆய்வு மையம் தொடங்கப்படுவதற்கு ஒரு கோடி ரூபாய் நிதியும், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் ஆய்வு மையம் தொடங்குவதற்கு ஒரு கோடி நிதியும், பாரதியார் பல்கலைக்கழகத்தில் நானோ தொழில்நுட்ப மையம் தொடங்குவதற்கு ஒரு கோடி நிதியும், சென்னையில் உயிர் தொழில்நுட்பவியல் ஆய்வு மையம் தொடங்குவதற்கு ஒரு கோடி நிதியும் திமுக ஆட்சியில் வழங்கப்பட்டது.

அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் விரிவுபடுத்தப்பட்டு திருச்சி, திருநெல்வேலி, கோயம்புத்தூர், விழுப்புரம், சென்னை ஆகிய மையங்களில் ஐந்து அண்ணா தொழில்நுட்ப பல்கலை கழகங்கள் இயங்கின. முதலமைச்சர் கலைஞர் அவர்களின் இடைவிடாத முயற்சிகளால் திருவாரூரில் ஒரு மத்திய அரசின் மைய பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. பின்னர் திருச்சி, கோயம்புத்தூர் ஆகிய நகரங்களிலும் இரண்டு மைய கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. 31-12-2008-ஆம் ஆண்டு சென்னை உத்தண்டில் கடல்சார் பல்கலைக்கழகம் மத்திய அரசின் சார்பாக தொடங்கப்பட்டது. 7-9-1990 அன்று திருநெல்வேலியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. 7-9-1989 அன்று திருச்சியில் புதிதாக அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. திமுக ஆட்சியில் உலகத் தமிழ் இணைய பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.

1989-91 திமுக ஆட்சியில் 91 புதிய கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டன. அரசு மகளிர் கல்லூரி இல்லாத பகுதிகளில் செயல்பட்ட ஆண்கள் கல்லூரிகளில் இருந்த மொத்த இடங்களில் 30 சதவீத இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டு அவை இருபால் கல்லூரிகளாக இயங்க வழிவகை செய்யப்பட்டது. ஆதிதிராவிடர் பழங்குடியின மற்றும் சீர்மரபினர் பிரிவுகளைச் சார்ந்த மாணவ மாணவியர்களுக்கு பட்டப் படிப்பு வரை இலவசக் கல்வி வழங்கப்பட ஆவன செய்யப்பட்டதோடு அவர்களுக்கு கல்வி உதவித் தொகையும் வழங்கப்பட்டது.

1997ஆம் ஆண்டு கல்வித்துறை இரண்டாகப் பிரிக்கப்பட்டது. உயர்கல்விக்கு என்று தனியாக உயர் கல்வித் துறை உருவாக்கப்பட்டது. உயர்கல்வித்துறை அமைச்சர் பதவி உருவாக்கப்பட்டது. அதேபோல் பள்ளிக் கல்விக்கு என்று தனியாக பள்ளிக் கல்வித்துறை ஒன்று தொடங்கப்பட்டு அதற்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பதவி உருவாக்கப்பட்டது.

17-9-1997ல் சேலத்தில் பெரியார் பல்கலைக் கழகமும் 20-9-1997 சென்னையில் டாக்டர் அம்பேத்கர் பல்கலைக் கழகமும் தொடங்கப்பட்டன. 1966 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் மூன்று பல்கலைக்கழகங்கள் இருந்தன. ஆனால் 2010ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் தமிழகத்தில் 26 அரசு பல்கலைக்கழகங்களும் 25 தனியார் பல்கலைக்கழகங்களும் இருந்தன. தமிழ்நாடு உயிர் தொழில் நுட்ப நிறுவனம் தமிழ்நாட்டில் ஆரம்பிக்கப்பட்டது. 1998-1999 முதல் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர முறை அறிமுகப்படுத்தப்பட்டது. தூத்துக்குடியில் 1998 ஆம் ஆண்டு தேசிய கடல்சார் கல்விக் கழகம் (Indian Maritime Academy) ஆரம்பிக்கப்பட்டது.

1996-2001 திமுக ஆட்சியில திருச்சியில் கி.ஆ.பெ.விசுவதநாதம் அவர்களின் பெயரில் மருத்துவக் கல்லூரியும் 1-10-2000ஆம் ஆண்டில் தூத்துக்குடியில் அரசு மருத்துவக் கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ் நாட்டில் ஆசிரியர் பயிற்சி கழகம் திமுக ஆட்சியில் 1-7-2008 அன்று திறந்து வைக்கப்பட்டது.

1-9-2008 முதலமைச்சர் கலைஞர் அவர்கள் தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்திற்கான கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார். பின்பு பணிகள் முடிக்கப்பட்டு கட்டிடம் திறந்துவைக்கப்பட்டது. திமுக ஆட்சியில் தமிழ்நாடு திறந்தவெளிப் பல்கலைக் கழகத்திற்கு சென்னை சைதாப்பேட்டையில் புதிய வளாகம் கட்டித் தரப்பட்டது. விழுப்புரம், திண்டிவனத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரிகள் திறக்கப்பட்டன. அரகண்டநல்லூரில் மத்திய அரசின் பாலிடெக்னிக் கொண்டுவரப்பட்டது. திண்டிவனம் மற்றும் விழுப்புரத்தில் அரசு பொறியியல் கல்லூரிகள் திறக்கப்பட்டன.

மாவட்டம் தோறும் மருத்துவக் கல்லூரிகள் ஆரம்பிக்கும் திட்டத்தின்படி விழுப்புரம், திருவாரூர், தர்மபுரி, சிவகங்கை, பெரம்பலூர், திருவண்ணாமலை ஆகிய ஆறு மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டன.

- பேராசிரியர் டாக்டர் சு.கிருஷ்ணசாமி, ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் & உலகச் சுற்றுச்சூழல் பேரமைப்பின் முன்னாள் உறுப்பினர்.

Related Stories

Related Stories