தி.மு.க

பெண்கள் கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகள் பெற்று முன்னேற பெரும்பங்காற்றிய கலைஞர் அரசு : மகுடம் சூடிய தி.மு.க-8

பெண்கள் கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகளும் பெற்று முன்னேறி அவர்கள் பல பதவிகளை அடைய திராவிட முன்னேற்றக் கழக அரசு பெரும் பங்கு ஆற்றியது.

பெண்கள் கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகள் பெற்று முன்னேற பெரும்பங்காற்றிய கலைஞர் அரசு : மகுடம் சூடிய தி.மு.க-8
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தி.மு.க ஆட்சியில் மகளிர் முன்னேற்றம்

குழந்தைத் திருமணம் தீண்டாமை, விதவைகள் மறுமண மறுப்பு, உடன்கட்டை ஏறுதல், தேவதாசி முறை, ஜாதியக் கொடுமைகள் போன்றவை பெண் முன்னேற்றத்திற்கு பெரும் தடைகளாக இருந்தன.

அந்த பாதிப்பான நிலையிலிருந்து பெண் சமூகத்தை மீட்டு பெண்களை சுயமரியாதை உள்ளவர்களாகவும், ஆற்றல்மிக்கவர்களாகவும் ஆக்கி பெண்மைக்கு பெருமை சேர்த்திட, நாதுராம் ஜோதிபா பூலே, ஈஸ்வர சந்திர வித்யாசாகர், மகாத்மா காந்தி, தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் போன்ற தலைவர்களும் பல அரசியல், சமுதாய இயக்கங்களும் ஆற்றிய பங்கு மகத்தானது.

தீண்டாமை, குழந்தைத் திருமணம், தேவதாசி முறை, உடன்கட்டை ஏறுதல், விதவை மறுமண மறுப்பு போன்ற தீய சமூக தடைகள் விடுதலை பெற்ற இந்தியாவில் அரசியல் சாசன அடிப்படையில் சட்டபூர்வமாக செல்லாது என்று அறிவிக்கப்பட்டு தடை செய்யப்பட்டன.

பெண்களின் முன்னேற்றத்திற்கு வேண்டிய சட்டங்களை இயற்றி திட்டங்களை நிறைவேற்றி பெண்கள் கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகளும் பெற்று முன்னேறி அவர்கள் பல பதவிகளை அடைய திராவிட முன்னேற்றக் கழக அரசு பெரும் பங்கு ஆற்றியது. பெண் முன்னேற்றத்திற்கு தி.மு.க அரசும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களும் ஆற்றிய பணிகள் பெண்கள் முன்னேற்றத்திற்கு பெரும் பணிகளாக அமைந்துள்ளன. மகளிர் முன்னேற்றதில் தி.மு.கவின் பங்கு மகத்தானது.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பெண் கல்வி, பெண் விடுதலை, பெண் உரிமை, பெண்கள் முன்னேற்றம் ஆகியவற்றில் மிகுந்த அக்கறை கொண்ட தலைவராக உள்ளார். அவர் சென்னை மாநகராட்சியின் மேயராக, தமிழக அரசின் உள்ளாட்சித்துறை அமைச்சராக, துணை முதலமைச்சராக பதவி வகித்த காலங்களில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் மகளிர் முன்னேற்றம் அடைய பெரும் பங்காற்றினார். கல்வி, உயர்பதவி, தொழில் துறை ஆகியவற்றில் பெண்கள் மேன்மை பெறவும், பெண்கள் அதிகமான அளவில் வேலைவாய்ப்பு பெறவும், ஏழ்மையில் உள்ள பெண்கள் ஏற்றம் பெறவும் பல திட்டங்களை நிறைவேற்றி பாடுபட்டு வருகிறார்.

திமுகவின் முன்னோடி இயக்கமான நீதிக்கட்சியும் நீதிக்கட்சி அரசும் பெண்கள் முன்னேற்றத்திற்கு பெரும்பங்கு ஆற்றின. 10-5-1921 அன்று சட்டம் இயற்றி பெண்களுக்கு வாக்குரிமை வழங்கியது நீதிக்கட்சி அரசு. இது பெண்மைக்கு நீதிக்கட்சி சூட்டிய பொன் மகுடம் ஆகும்.

1920 முதல் 1926 வரை ஆட்சியில் இருந்த நீதிக்கட்சி அரசு சென்னை மாகாண சட்டமன்றத்தில் பெண் உறுப்பினர்கள் யாரும் இல்லை என்பதை உணர்ந்து பெண்களை சட்டமன்ற உறுப்பினர்களாக்க முயற்சி எடுத்தது.

நீதிக்கட்சி ஆதரவுடன் ஆட்சி அமைத்து முதலமைச்சராக இருந்த டாக்டர்.சுப்பராயன் அவர்கள் ஆட்சிக் காலத்தில் பெண்கள் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புகள் உருவாக்கித் தரப்பட்டன. சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினர் தேர்தலில் 1926 ஆம் ஆண்டு முதன்முதலாக போட்டியிட்ட முதல் பெண் எஸ்.கனரா ஆவார். ஆனால் அவர் தேர்தலில் வெற்றி பெறவில்லை. அதனால் இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்கள் சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி அவர்கள் சென்னை மாகாண சட்டமன்ற துணை சபாநாயகராக நியமிக்கப்பட்டார். உலக அளவில் பெண் ஒருவர் சட்டமன்றத்தின் துணை சபாநாயகராக ஆக்கப்பட்டது சென்னை மாகாணத்தில்தான் என்பது பெருமையான ஒன்றாகும்.

துணை சபாநாயகர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்கள் 2-2-1929 அன்று முன் மொழிந்து தேவதாசி ஒழிப்பு மசோதாவை சென்னை மாகாண சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். மிக நெடிய விவாதத்திற்கு பிறகு அம் மசோத நிறைவேறி தேவதாசி முறை தடைசெய்யப்பட்டது.

பெண்கள் கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகள் பெற்று முன்னேற பெரும்பங்காற்றிய கலைஞர் அரசு : மகுடம் சூடிய தி.மு.க-8

1968-69 ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சி காலத்தில் 12,688 மகளிர் மன்றங்கள் செயல்பட்டன. 1970-71ஆம் ஆண்டும் அதற்கு அடுத்த ஆண்டும் நூற்றுக்கணக்கான மகளிர் மன்றங்கள் தமிழகம் முழுக்க அரசின் முயற்சியால் புதிதாக ஏற்படுத்தப்பட்டன. மகளிர் மன்றங்களுக்கு தொழில் கருவிகள் வழங்கப்பட்டன. பணிபுரியும் மகளிருக்கான மகளிர் தங்கும் விடுதிகள் ஆரம்பிக்கப்பட்டன. 1972 ஆண்டு மகளிர் சேவை திட்டம் ஆரம்பிக்கபட்டு செயல்படுத்தப்பட்டது. 1972-73 ஆம் ஆண்டு 13 லட்சத்து 31 ஆயிரம் பெண்களுக்கு தொழில் பயிற்சி அளிக்கப்பட்டது.

அதே ஆண்டு 14 ஒன்றியங்களில் ஏற்படுத்தப்பட்ட 271 மகளிர் மன்றங்களுக்கு ஒரு லட்சத்தி 70 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டது. 1973 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழ்நாடு காவல்துறையில் காவலர்களாக பெண்கள் நியமிக்கப்பட்டனர். 1973-74ல் பணிக்குச் செல்லும் மகளிருக்கு தங்கும் விடுதிகள் நடத்திய சேவா சங்கத்திற்கு அரசு நிதி உதவி வழங்கியது.

1973-74 பஞ்சாயத்து ஒன்று வீதம் தமிழ்நாட்டில் 13,124 மகளிர் மன்றங்கள் செயல்பட்டன. ஒவ்வொரு மகளிர் மன்றத்திற்கு பராமரிப்பு செலவுக்காக அரசு ரூபாய் 4,000 வழங்கியது. 10,082 மகளிர் மன்ற உறுப்பினர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டன.

மகளிர் நலத் திட்டங்களை செயல்படுத்த 241 தொண்டு நிறுவனங்களுக்கு ரூபாய் 4,077 மானிய நிதி வழங்கப்பட்டது. 50 பெண்கள் நல கிளைகளுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. 5,000 பெண்கள் அமைப்புகள் செயல்படுத்தப்பட்டன. 13 ஒன்றியங்களில் மகளிர் குழுக்கள் செயல்பட்டன.

1989-91 தி.மு.க ஆட்சியில் அரசுப் பணிகளில் பெண்களுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதற்கான சட்டம் 1990 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. ஆரம்பப்பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பதவிகளில் பெண்கள் மட்டுமே நியமிக்கப்பட்டனர்.

இந்தியாவிலேயே முதன்முதலாக உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதிலும் 44,143 பெண்கள் உள்ளாட்சி நிர்வாகங்களில் பதவி வகித்தனர். தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு திட்டம் 1989 முதல் செயல்படுத்தப்பட்டது. மகளிர் சுய உதவி குழு முதன்முதலாக 1989 ஆம் ஆண்டு தர்மபுரியில் ஆரம்பிக்கப்பட்டது.

இந்தியாவிலேயே முதன்முதலாக குடும்பத்தில் பெண்களுக்கு சமபங்கு வழங்கப்படும் என்று சட்டம் 6-5-1989 அன்று திமுக அரசால் இயற்றப்பட்டது. ஏழை மகளிருக்கு பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வி வழங்கும் திட்டம் நிறைவேற்றப்பட்டது. பெண்கள் நடத்தும் தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டன.

1989-91 காதி மற்றும் கதர் துறையில் 3,31,000 பெண்களுக்கு பதவிகள் வழங்கப்பட்டன. அவர்களில் 1,25,000 பெண்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். பெண்களுக்கு தொழிற் பயிற்சி வழங்கப்பட்டது.

1-1-1999 அன்று மகளிர் சிறு வணிகக் கடன் திட்டம் சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர் மற்ற மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் மகளிர் சிறு வணிகக் கடன் வழங்கப்பட்டது. சிறு வியாபாரம் செய்யும் மகளிருக்கு தினசரி வழங்கப்பட்ட கடன் தொகை ரூபாய் 500 முதல் 5,000 வரை ஆகும். இத்திட்டத்தின் மூலம் 1,44,913 பேருக்கு ரூபாய் 18 கோடி சிறு வணிகக் கடனாக வழங்கப்பட்டது.

பெண்கள் நடத்தும் நியாயவிலைக் கடைகள் மதுரையில் 1998 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் பெண்கள் மட்டுமே நடக்கும் 230 நியாய விலைக்கடைகள் செயல்பட்டன. முதல் தலைமுறையாக தொழில் தொடங்கும் 250 பெண்களுக்கு மானிய நிதி உதவி வழங்கப்பட்டது. தொழில் வளாகங்கள் பெண் தொழில் முனைவோருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. மீனவர் மகளிர் கூட்டுறவு சங்கம் ஏற்படுத்தப்பட்டு மோட்டார் பொருத்திய வாகனங்கள் இலவசமாக வழங்கப்பட்டன மீனவ மகளிருக்கு நிதி உதவி வழங்கப்பட்டது.

திராவிட முன்னேற்றக் கழக அரசு மகளிர் முன்னேற்றத்திற்கு பல சிறப்பு திட்டங்களை நிறைவேற்றியது. அவற்றின் மூலமாக லட்சக்கணக்கான பெண்கள் பலன் பெற்று வாழ்வில் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்து உள்ளனர்.

பெண்கள் கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகள் பெற்று முன்னேற பெரும்பங்காற்றிய கலைஞர் அரசு : மகுடம் சூடிய தி.மு.க-8

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம்

இந்த ஏழைப் பெண்கள் திருமண உதவித் திட்டம் 1989 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டத்தின்படி 18 வயது நிரம்பிய எட்டாம் வகுப்பு படித்த ஏழை பெண்களும், ஐந்தாம் வகுப்பு வரை படித்த தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் சமூகங்களைச் சார்ந்த பெண்களும் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்தனர்.

சமூக நலத்துறை மூலம் நடைமுறைப்படுத்தப்பட்ட இத்திட்டத்தின்படி 1-4-1989 முதல் 11-1-1991 வரை 34,595 பெண்களுக்கு மொத்தம் 17 கோடியே 30 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது.

1996 ஆண்டு திமுக ஆட்சியில் பயனாளிகளின் கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு எனவும் உதவித் தொகை ரூபாய் பத்தாயிரம் எனவும் நிர்ணயிக்கபட்டது. 2,28,593 ஏழை மகளிருக்கு ரூபாய் 228 கோடியே 60 லட்சம் வழங்கப்பட்டது. 2001-2006 அதிமுக ஆட்சியில் இத்திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.

இத்திட்டம் 3-6-2006 முதல் திட்ட உதவி தொகை 15 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்பட்டது. பின்னர் 20-3-2008 முதல் இத்தொகை 20,000 ரூபாய் ஆகவும் 1-4-2010 முதல் இந்த நிதி உதவி 25,000 ஆகவும் உயர்த்தி வழங்கப்பட்டது. அகதிகள் முகாம்களில் இருந்த ஏழைப் பெண்களுக்கும் இந்த நிதி உதவி வழங்கப்பட்டது. 2006-2011 திமுக ஆட்சிக்காலத்தில் 4,66,756 ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு ரூபாய் 880 கோடியே 55 லட்சம் நிதி வழங்கப்பட்டது.

அஞ்சுகம் அம்மையார் நினைவு கலப்புத் திருமண உதவித் திட்டம்

1967-69ல் அறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்தபோது தமிழ்நாட்டில் கலப்புத் திருமணங்கள் ஊக்குவிக்கப்பட்டன. 1969-1976 திமுக ஆட்சியிலும் கலப்பு திருமண உதவித் திட்டம் செயல்படுத்தப்பட்டது. 1989-1990 வரையிலான திமுக கலப்புத் திருமணம் செய்துகொண்ட 1101 தம்பதியர்களுக்கு ரூபாய் 58 கோடியே 94 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது. 1996-2001-ல் திமுக ஆட்சியில் இந்த உதவித் தொகை ரூபாய் 10,000ஆக உயர்த்தி வழங்கப்பட்டது.

மணமக்களில் ஒருவர் ஆதிதிராவிடர் எனில் 1997 முதல் இந்த உதவித் தொகை ரூபாய் 20,000 ஆக உயர்த்தி வழங்கப்பட்டது. 1996-2001 இல் திமுக ஆட்சியில் கலப்புத் திருமணம் செய்துகொண்ட 3281 தம்பதியர்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டது. 2010 முதல் இந்த நிதி உதவி ரூபாய் 25,000 ஆக உயர்த்தி வழங்கப்பட்டது. 2006-2010 திமுக ஆட்சி காலத்தில் கலப்பு திருமணம் செய்துக் கொண்ட 11383 தம்பதியர்களுக்கு ரூபாய் 20 கோடியே 89 இலட்சத்து 60 ஆயிரம் நிதி வழங்கப்பட்டது.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு உதவித் திட்டம்

1989-91 திமுக ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஏழை கர்ப்பிணி பெண்களுக்கு உதவி தொகை வழங்கும் இத் திட்டம் மூலமாக 3,71,805 பேர்கள் பயன் அடைந்தனர். 1996-2001 திமுக ஆட்சியில் 7,33,731 ஏழை கர்ப்பிணி பெண்களுக்கு ரூபாய் 28 கோடியே 75 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது.

பங்காரு அம்மையார் பெண்கள் முன்னேற்றத் திட்டம்

இத்திட்டம் 1989 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. 1996-2001 கால திமுக ஆட்சியில் 28 மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. 10,06,969 பெண்கள் இத்திட்டத்தில் மூலம் பயன் பெற்றனர். அவர்களில் 1,26,882 பெண்களுக்கு ரூ.73 கோடி கடன் வழங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் 58,391 மகளிர் குழுக்கள் அமைக்கப்பட்டன.

அன்னை தெராசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவி திட்டம்

1984-85 அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட இத்திடடம் 1996-2001 திமுக ஆட்சியில் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் படி 1996-97 நிதியுதவி ரூ.2,000 ஆகவும், 1997-98 நிதியுதவி ரூ.3,000 ஆகவும் 1998-99ல் நிதியுதவி ரூ.5,000 ஆகவும், 1999-2000ல் நிதியுதவி ரூ.7,000 ஆகவும் உயர்த்தி வழங்கப்பட்டது.

1996-2000 வரையிலான திமுக ஆட்சியில் 360 மகளிர்க்கு ரூ.16,28,00,000 நிதியுதவி வழங்கப்பட்டது. 2010ஆம் ஆண்டு இந் நிதியுதவி ரூ.25,000 ஆக உயர்த்தப்பட்டது. 2006-2011ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் 2,220 பெண்களின் திருமணங்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.

ஈ.வெ.ரா.மணியம்மையார் நினைவு ஏழை விதவைகளின் மகள் திருமண நிதியுதவி திட்டம்

அதிமுக ஆட்சியில் 1981-82ல் துவங்கப்பட்ட இத்திட்டம் 1989-90 திமுக ஆட்சிக்காலத்தில் செயல்படுத்தப்பட்டது. 10,44,000 பெண்களுக்கு மேற்குறிப்பிட்ட திட்டத்தின் மூலம் தலா ரூ.1,000 நிதியுதவி வழங்கப்பட்டது. 1999ஆம் ஆண்டு இத்திட்டத்தின் நிதியுதவி ரூ.7,000 ஆக உயர்த்தப்பட்டது. 2006-2011 திமுக ஆட்சியில் இத்திட்டத்தின் மூலம் 16365 பேருக்கு நிதி உதவி வழங்கப்பட்டது.

டாக்டர் தர்மாம்பாள் நினைவு விதவை மறுமணத்திட்டம்

1975 ஆம் ஆண்டு இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. 1989-1990 திமுக ஆட்சியில் 378 பெண்கள் தலா 5000ரூபாய் வீதம் உதவித்தொகை பெற்றனர். 1996-2001 திமுக ஆட்சியில் ஒவ்வொரு பயனளாளிகளுக்கும் ரூ.10,000 வீதம் 904 விதவை பெண்களுக்கு மட்டும் ரூ.66 கோடியே 88 லட்சம் வழங்கப்பட்டது. 2006-2011 திமுக ஆட்சியில் இந்த நிதியுதவி ரூ.25,000 ஆக உயர்தப்பட்டு 16,365 பேருக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.

ஈ.வெ.ரா.நாகம்மையார் நினைவு மகளிர் இலவச படிப்புத் திட்டம்

1989ல் இத்திட்டம் துவங்கிவைக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 1989-90 திமுக ஆட்சிக் காலத்தில் 5444 பெண்கள் பயனடைந்தார்கள். 1996-2001 திமுக ஆட்சிக் காலத்தில் இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டது.

சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம்

1996-2001 திமுக ஆட்சியில் விதவைகள் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் ஆதரவற்ற ஏழை பெண்களுக்காக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. 14,365 ஏழை பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. 2006-2011 திமுக ஆட்சியில் இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டது.

சத்தியா அம்மையார் பால்வாடி திட்டம்

1996-2001 திமுக ஆட்சியில் 175 பால்வாடிகள் செயல்பட்டன. 17,700 குழந்தைகள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்றனர்.

சிவகாமி அம்மையார் பெண்குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்

ஆண் குழந்தைகள் இல்லாத நிலையில் இரண்டு பெண் குழந்தைகளுடன் கருத்தை செய்து கொள்ளும் ஏழை பெண்கள் ஒவ்வொருக்கும் அவர்களுடைய ஒவ்வொரு பெண்குழந்தைகளின் பெயரில் ரூ.1,500 வைப்பு நிதியாக வைக்கப்பட்டு அக் குழந்தை வளர்ந்து 20 வயது ஆகும்போது. வட்டியிடன் முழுத் தொகையும் வழங்கப்பட்டது. இத் திட்டத்தின் மூலம் 1,15,897 குழந்தைகள் பயன்பெற்றன.

ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் பெற்றிருந்து ஆண் குழந்தைகள் இல்லாத நிலையில் குடும்ப கட்டுப்பாடு செய்துகொள்ளும் தாய்மார்களுடைய பெண் குழந்தைகளின் பெயரில் ரூ.3,000/- வைப்பு நிதி வழங்கப்பட்டது. அக்குழந்தை வளர்ந்து 20 வயதாகும்போது வட்டியுடன் முழு தொகையும் வழங்கப்பட்டது. ரூ.300/-கோடி செலவில் 2006-2011 திமுக ஆட்சிக்காலத்தில் இத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் 1,97,047 பெண் குழந்தைகள் பயன்பெற்றனர்.

மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு இலட்சக்கணக்கான பெண்கள் பயன்பெற்றனர். 223 பண்ணை மகளிர் சுய உதவிக் குழுக்களும் 3,500 வேளாண்மை மகளிர் சுய உதவிக் குழுக்களும் அமைக்கப்பட்டு நிதி உதவிகள் வழங்கப்பட்டன.

குழந்தைகள் நலன்

பேரறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்த போது 1968 ஆம் ஆண்டு சென்னை எழுப்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை வளாகத்தில் குழந்தை காப்பகங்கள் ஆரம்பிக்கப்பட்டன. 1972-73 ஆண்டு திமுக ஆட்சியில் சேலம் மாவட்டம் பழங்குடியினர் பகுதியில் 1,300 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்கப்பட்டது.

1972ஆம் ஆண்டு குழந்தைகள் நல திட்டம் செயல்படுத்தப்பட்டது.

1973-74ஆம் ஆண்டு கேர் உதவித் திட்டத்தின் மூலம் 1,000 முன்பருவ பள்ளிகள் செயல்பட்டன. 710 முன்பருவ பள்ளிகளில் பாலகர் உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டது. மத்திய அரசின் 100 சதவீத மானியத்துடன் மாதிரி உணவு திட்டம் குழந்தைகள் நல மையங்கள் மூலம் செயல்படுத்தப்பட்டது. ஒருங்கிணைந்த குழந்தைகள் நல திட்டத்தின் கீழ் 50 முன்பருவ பள்ளிகளும் 10 மழலையர் பள்ளிகளும் நடத்தப்பட்டன. 1974-75ல் 2543 முன்பருவ பள்ளிகள் செயல்பட்டன. கிராமப்புற நகர்ப்புற குழந்தைகள் வளர்ப்பு திட்டங்கள் செயல்படுத்தபட்டன. 2006-2011 திமுக ஆட்சியில் தமிழகத்தில் 54,439 குழந்தைகள் மையங்கள் செயல்பட்டன.

- பேராசிரியர் டாக்டர் சு.கிருஷ்ணசாமி, ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் & உலகச் சுற்றுச்சூழல் பேரமைப்பின் முன்னாள் உறுப்பினர்.

Related Stories

Related Stories