தி.மு.க

“கலைஞர் வழிநின்று, சொன்னதைச் செய்வோம்! செய்வதைச் சொல்வோம்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி!

நாளைய தினம் கொளத்தூர் தொகுதியில் கழக வேட்பாளராக நான் போட்டியிடுவதற்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்யவிருக்கிறேன் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“கலைஞர் வழிநின்று, சொன்னதைச் செய்வோம்! செய்வதைச் சொல்வோம்!” :  தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

“நாளை கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்துவிட்டு நேராக முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த திருவாரூர் சென்று அங்கிருந்து தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குகிறேன்” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இன்று (14.3.2021) மாலை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை - அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

“எங்களுடைய அழைப்பை ஏற்று வருகை தந்திருக்கும் ஊடகத்துறை நண்பர்களுக்கு, பத்திரிக்கை துறை நண்பர்களுக்கு தலைமைக் கழகத்தின் சார்பில் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.உங்களுக்கு மட்டுமல்ல, உங்கள் மூலமாக இதை பார்த்து கொண்டிருக்கும் தமிழ்ப் பெருங்குடி மக்களுக்கும் என்னுடைய இதயப்பூர்வமான நன்றியைத் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

கடந்த ஜனவரி மாதம் 25-ஆம் தேதி நம்மை இன்றைக்கும் இயக்கிக் கொண்டிருக்கும் - நம்மை என்றைக்கும் இயக்கும் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் வாழ்ந்த கோபாலபுர இல்லத்தின் வாசலில், நான் ஒரு சபதம் ஏற்றேன். சபதம் மட்டுமல்ல; ஒரு உறுதிமொழியையும் நான் ஏற்றுக் கொண்டேன்.

“கலைஞர் வழிநின்று, சொன்னதைச் செய்வோம்! செய்வதைச் சொல்வோம்!” :  தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி!

தமிழகத்தில் இருக்கும் மக்களுடைய பிரச்சினைகளை, நாம் ஆட்சிப் பொறுப்பேற்று, அடுத்த 100 நாட்களில் அந்த அடிப்படைப் பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டும். குடிநீர்ப் பிரச்சினை, சாலை வசதிகள், ஓய்வு ஊதியம், முதியோர் உதவித்தொகை அதேபோல, பேருந்து வசதிகள், மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் இதுபோன்ற மக்களின் அடிப்படை பிரச்சினைகளை எல்லாம் தீர்த்து வைக்க வேண்டும். அதுவும் நாம் ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் அவற்றைத் தீர்த்து வைக்க வேண்டும் என்று முடிவு செய்து, அதற்காக ஒரு திட்டத்தை உருவாக்கி, “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற பெயரில் அந்தத் திட்டத்திற்கான பயணத்தைத் தொடங்கினேன்.

கடந்த ஜனவரி மாதம் 25-ஆம் தேதி அறிவித்து, 29-ஆம் தேதி திருவண்ணாமலையில் தான் அந்த பயணத்தை நான் தொடங்கினேன். அதைத்தொடர்ந்து 187 தொகுதிகளில் என்னுடைய சுற்றுப் பயணத்தை நான் நடத்தி இருக்கிறேன். 234 தொகுதிகளுக்கும் செல்லவேண்டும் என்று தான் முடிவு செய்து அந்த பயணத்தைத் தொடங்கினேன்.

ஆனால் எதிர்பாராதவிதமாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்ட காரணத்தால் அந்தப் பயணத்தில் ஒரு சுணக்கம் ஏற்பட்டது. அதை எல்லாம் கொஞ்சம் ஒத்திவைக்க வேண்டிய ஒரு சூழ்நிலைக்கு நான் ஆளாக்கப்பட்டேன். அதற்கு என்ன காரணம் என்பது உங்களுக்குத் தெரியும். கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை, அதற்குப் பிறகு அவர்கள் தொகுதிப் பங்கீடுகள், அதைத்தொடர்ந்து கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் நேர்காணல், அதற்குப் பிறகு வேட்பாளர்களின் தேர்வு இவையெல்லாம் நடந்திருக்கிறது.

அதைத் தொடர்ந்து நேற்றைய தினம் தேர்தல் அறிக்கை வெளியிட்டுயிருக்கிறோம் அல்லவா, அந்த தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிகளில் முழுமையாக நாங்கள் ஈடுபட வேண்டிய அவசியம் இருந்ததால் அதற்குத் தடை ஏற்பட்டது.

அதனால் அந்த பயணத்தை என்னால் முழுமையாக முடிக்க முடியவில்லை; அதைத் தொடர முடியவில்லை. எனவே 234 தொகுதிகளில் 187 தொகுதிகளில் நான் வலம் வந்திருக்கிறேன். இன்னும் மீதம் இருப்பது 47 தொகுதிகள் தான்.

அந்த தொகுதிகளில் மனுக்களை நேரடியாக சென்று என்னால் பெற முடியவில்லை. ஆனால் அந்த 47 தொகுதிகளில் நான் செல்லாமலேயே மனுக்களை வாங்கும் பணி தொடங்கியிருக்கிறது. விரைவில் அறிவாலயத்திற்கு அந்தப் பெட்டிகள் வந்து சேர இருக்கின்றன.

நான் மக்களிடம் இருந்து வாங்கியிருக்கும் மனுக்களைப் பொறுத்தவரையில், இப்போது நீங்கள் எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் முன்னால் அது அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இவை எல்லாம் மனுக்கள் என்று கருதாதீர்கள், மக்களின் இதயங்களாக அவை காட்சி அளித்துக் கொண்டிருக்கின்றன.

திருவண்ணாமலையில் ஜனவரி மாதம் 29-ஆம் தேதி தொடங்கி, சென்னையில் பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி வரையில் அந்தப் பயணத்தை நடத்தியிருக்கிறோம். 32 மாவட்டங்களில் இருக்கும் 187 தொகுதிகளில் மக்களை சந்தித்து இருக்கிறோம். 38 நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறோம். இந்த நிகழ்ச்சியில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நேரடியாக வந்து கலந்து கொண்டிருக்கிறார்கள். 17 இலட்சத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் இணையதளம் மூலமாகவும் - நேரடியாகவும் பெறப்பட்டிருக்கிறது என்பதையும் நான் இங்கே உங்களுக்கு தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

“கலைஞர் வழிநின்று, சொன்னதைச் செய்வோம்! செய்வதைச் சொல்வோம்!” :  தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி!

இங்கே நீங்கள் இந்தக் குறும்படத்தில் பார்த்தீர்கள். இதில் நான் மறக்க முடியாத நிகழ்ச்சியாக பலவற்றைச் சொல்ல வேண்டும். ஆனால் நேரம் இல்லை. அது தேவையும் இல்லை. ஆனால் ஒன்றிரண்டை மாத்திரம் நான் நினைவுபடுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன். சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

திருவண்ணாமலை மாவட்டம் - ஆரணி தொகுதியில் இந்த “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்தபோது அதில் பலபேர் பேசினார்கள்.

அப்போது ஆரணியை சேர்ந்த சகோதரி எழிலரசி என்கிற ஒரு மாணவி பேசினார். அது பத்திரிகைகளில் வந்திருக்கிறது. சமூக வலைதளங்களில் வந்திருக்கிறது நீங்கள் பார்த்திருப்பீர்கள். இருந்தாலும் அதை நான் நினைவுப் படுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன். எழிலரசி அவர்கள் பேசும்போது, அழுத கோலத்தோடு தான் பேசினார். என்னுடைய வீடு தீப்பிடித்து எரிந்து விட்டது. அந்த விபத்தில் என்னுடைய தாயார் மறைந்து விட்டார். என்னுடைய தந்தை ஏற்கனவே ராணுவத்தில் இருந்து பணியாற்றி அவரும் இறந்துவிட்டார். நான் என்னுடைய தம்பியோடு இருக்கிறேன். 2, 3 மாதத்திற்கு முன்பு இந்த சோக நிகழ்ச்சி நடந்து இருக்கிறது. அரசின் சார்பில் நிதி தரப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 2 மாதமாகிவிட்டது. இதுவரையில் அந்த நிதி வழங்கப்படவில்லை. 2 லட்சம் ரூபாய் நிதி தருவதாக எங்களுக்கு செய்தி சொன்னார்கள். ஆனால் 2 மாதமாகிவிட்டது. நான் முதலமைச்சருக்கு மனு எழுதியிருக்கிறேன். மாவட்ட ஆட்சித்தலைவருக்கு மனு கொடுத்திருக்கிறேன். சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்திருக்கிறேன். இதுவரையில் எந்தப் பதிலும் எனக்கு இல்லை. இப்போது உங்களிடம் மனு கொடுக்கிறேன். இதுதான் என்னுடைய கடைசி மனு” என்று பேசினார்.

எழிலரசி என்ற அந்த சகோதரியை அழைத்து சமாதானம் செய்தேன். இன்று இரவு வரை பொறுத்திருங்கள். இன்று இரவிற்குள் அரசு எந்த உதவியும் செய்யவில்லை என்றால் நாளை காலை தி.மு.க. வந்து உங்களுக்கு உதவி செய்யும். கவலைப்படாதீர்கள் என்று சொல்லிவிட்டு வந்தேன்.

அவ்வாறு சொல்லிவிட்டு வந்ததற்குப் பிறகு, அந்த நிகழ்ச்சி முடிந்ததற்கு பிறகு 2 மணி நேரத்தில் அரசின் சார்பில் அந்த சகோதரிக்கு 2 லட்சம் ரூபாய் நிதி சென்று சேர்ந்திருக்கிறது. இதில் என்ன வேடிக்கை என்றால் இந்த செய்தி சமூக வலைதளங்களில் வந்துவிட்டது. உடனே அ.தி.மு.க.வின் ஐ.டி.விங்கின் சார்பில், 2 மாதத்திற்கு முன்பு அந்த நிதியை கொடுத்துவிட்டோம். ஸ்டாலின் நாடகம் நடத்தி விட்டு செல்கிறார் என்று சொல்லி இருக்கிறார்கள்.

அதற்கு பிறகு அந்த சகோதரியை நம்முடைய நிருபர்கள் சென்று சந்தித்து கேட்டிருக்கிறார்கள். அந்த சகோதரி, “இல்லை, இல்லை. 2 மாதத்துக்கு முன் வரவில்லை. ஸ்டாலினிடம் நான் சொன்னதற்கு பிறகுதான் அரசு சார்பில், அவசரமாக வங்கி மூலமாக இரவோடிரவாக எனக்கு அந்தப் பணத்தைச் செலுத்தி இருக்கிறார்கள்” என்று சொல்ல, அதுவும் வீடியோவாக வந்திருக்கிறது.

அதேபோல தேனியைச் சார்ந்த யாழினி என்கிற ஒரு சகோதரி, இதய நோய்க்கு சிகிச்சை செய்வதற்காக அரசு மருத்துவமனைகளில் முயற்சியை மேற்கொண்டு இருக்கிறார். அப்போது அரசு மருத்துவமனைகளில் இருதய சிகிச்சைக்கு இலவசமாக செய்ய வேண்டும் என்றால் ரேசன் கார்டு இருக்க வேண்டும். அந்த ரேஷன் கார்டு இல்லை. அதனால் சிகிச்சை செய்ய முடியாது என்று மறுத்து இருக்கிறார்.

அந்த கோரிக்கையை அந்த சகோதரி தேனியில் நடைபெற்ற “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற அந்த நிகழ்ச்சியில் அந்த சகோதரி சொன்ன போது கவலைப்படாதீர்கள். இதற்கு உரிய நடவடிக்கைக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசுகிறேன். அன்று இரவே அந்த யாழினியின் குழந்தையை அழைத்துக்கொண்டு அந்த மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை செய்து முடித்திருக்கிறேன்.

இதே போல எத்தனையோ நிகழ்ச்சிகள். அரசு செவி சாய்க்காத காரணத்தால் நம்முடைய கழகத் தோழர்களே நேரடியாகச் சென்று, உதவிகளை, அவர்களுக்கு வேண்டிய என்னென்ன பணிகள் - மருத்துவமனையில் சேர்க்க வேண்டுமா அல்லது அவர்களுக்கு உடனடியாக ஏதாவது செய்ய வேண்டுமா என்பதை அறிந்து நம்முடைய தோழர்கள் செய்திருக்கிறார்கள்.

“கலைஞர் வழிநின்று, சொன்னதைச் செய்வோம்! செய்வதைச் சொல்வோம்!” :  தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி!

உள்ளபடியே அந்த நிகழ்ச்சிகள் எல்லாம் - எவ்வளவு தான் நான் பொதுப் பணியில் ஈடுபட்டு மக்களுக்கு பணியாற்றிக் கொண்டிருந்தாலும் - இதன் மூலமாக நிறைவேற்றப்படுவதை எண்ணிப் பார்க்கும் போது, மறக்க முடியாத நிகழ்ச்சியாக, அது என்னுடைய இதயத்தில் ஆழமாக பதிந்து இருக்கிறது.

அப்படிப்பட்ட லட்சக்கணக்கான மக்களுடைய அந்த கோரிக்கைகள், அந்த வேண்டுகோள்கள், அந்த பிரச்சினைகள் அனைத்தும் இங்கே இந்த பெட்டியில் வைத்து பூட்டப் பட்டிருக்கிறது. இந்தப் பெட்டி பூட்டப்பட்டிருக்கிறது என்றால், நான் ஏற்கனவே சொன்னது போல, மே 2-ஆம் தேதி உறுதியாக, எந்தவித ஐயப்பாடும் இல்லாமல், எந்தவித சந்தேகமும் இல்லாமல், ஒரு இம்மி அளவிற்கு கூட சந்தேகமில்லாமல் நாம் தான் - திராவிட முன்னேற்றக் கழகம் தான் ஆட்சிக்கு வரப் போகிறது. அதில் எந்த விவாதத்திற்கும் இடம் இல்லை.

எனவே ஆட்சி அமைந்ததற்கு பிறகு அடுத்த நாள் இந்தப் பெட்டிகள் எல்லாம் திறக்கப்படும். திறக்கப்பட்டு தமிழக மக்களுடைய கோரிக்கைகள் அனைத்தும் 100 நாட்களுக்குள் நிறைவேற்றப்படும் என்ற உறுதிமொழியை நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

எனவே ஊடகங்களின் வாயிலாக - இப்போது மீண்டும் தமிழ்நாட்டு மக்களுக்கு இந்த மனுக்களைத் தந்திருக்கும் அத்தனை பேருக்கும் மீண்டும் அந்த உறுதிமொழியை - இந்த நிகழ்ச்சி மூலமாக நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

தமிழ்நாட்டின் அந்தந்தத் தொகுதி மக்களின் கோரிக்கைகளையும், எந்த கோரிக்கையாக இருந்தாலும், இன்றைக்கு இருக்கும் முதலமைச்சர் 10 ஆண்டு காலமாக நடைபெற்று கொண்டிருக்கும் இந்த ஆட்சி, நிறைவேற்றவில்லை. இந்தப் பிரச்சினைகள் எல்லாம் சாதாரண பிரச்சினைகள் தான்.

இந்த பிரச்சினைகளுக்கு ஏதோ பல கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும், திட்டம் தீட்ட வேண்டும், மத்திய அரசின் அனுமதி வாங்க வேண்டும் என்பதெல்லாம் இல்லை. இது எல்லாம் அடிப்படை பிரச்சினைகள். இது எல்லாம் மக்கள் அன்றாடம் சந்திக்கும் அடிப்படை பிரச்சினைகள். இதைக் கூடத் தீர்த்து வைக்க முடியாத நிலையில் ஒரு ஆட்சி இன்றைக்கு தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது.

அவர்களைப் பொறுத்தவரையில் எதில் கொள்ளை அடிக்கலாம். எதில் லஞ்சம் வாங்கலாம். போகின்ற கடைசி நேரத்தில் எவ்வளவு கொள்ளை அடிக்கலாம். சாகின்ற நேரத்தில் “சங்கரா சங்கரா” என்று சொல்வது போல, ஆட்சி முடிகின்ற கடைசி நேரத்தில் என்ற புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். பல திட்டங்களை அறிவித்து கொண்டிருக்கிறார்கள்.

அதையெல்லாம் மக்கள் நிச்சயமாக ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் முதலமைச்சர் தொகுதியாக இருக்கும் எடப்பாடி தொகுதிக்கு இதே நிகழ்ச்சிக்கு நான் சென்றிருந்தேன்.

அங்கு தான் அதிகமான மக்கள் வந்தனர். அந்த அளவிற்கு முதலமைச்சருடைய தொகுதி இருந்துகொண்டிருக்கிறது. இதுதான் இன்றைக்கு இருக்கும் நிலை. எனவே கோடிக்கணக்கான செலவு செய்து, வெற்றி நடைபோடும் தமிழகம் என்று மக்களுடைய வரிப் பணத்தில் விளம்பரம் தான் செய்து கொண்டிருக்கிறார்களே தவிர, முதலமைச்சர் தொகுதி மட்டுமல்ல, அமைச்சர்களின் தொகுதிகளாக இருந்தாலும், அது ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் தொகுதிகளாக இருந்தாலும், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் தொகுதிகளாக இருந்தாலும் எதைப் பற்றியும் இந்த ஆட்சி கவலைப்படாத நிலையில்தான் இருக்கிறது.

அதனால்தான் இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது மக்கள் நம்பிக்கை வைத்து, இந்த மனுக்களை எங்களிடத்தில் ஒப்படைத்திருக்கிறார்கள்.

கலைஞர் அடிக்கடி சொல்வார், “சொன்னதைச் செய்வோம் செய்வதைத் தான் சொல்வோம்” என்று, அவருடைய மகனாக இருக்கும் இந்த ஸ்டாலினும் “சொன்னதைச் செய்வேன் செய்வதைத் தான் சொல்வான்” அந்த வழிநின்று நிச்சயமாக 100 நாட்களில் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பேன் என்ற உறுதியை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

“கலைஞர் வழிநின்று, சொன்னதைச் செய்வோம்! செய்வதைச் சொல்வோம்!” :  தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி!

எப்படி இதை செய்யமுடியும் - நிறைவேற்ற முடியும் என்ற சந்தேகம் சிலருக்கு இருக்கலாம். பொறுத்திருந்து பாருங்கள். ஆட்சிப் பொறுப்பேற்ற 100 நாட்களுக்குள் இதற்கென்று ஒரு தனி துறை உருவாக்கப்படும். தேர்தல் அறிக்கையில் கூட அதை நாங்கள் குறிப்பிட்டு காட்டி இருக்கிறோம்.

மாவட்ட ரீதியாக பிரித்து, அதை பரிசீலித்து, தொகுதி வாரியாக - ஊராட்சி வாரியாக முகாம்கள் அமைக்கப்பட்டு இவற்றை நிச்சயமாக நிறைவேற்றுவோம். இதற்கென்று நியமிக்கப்படும் துறை, அதில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகள் இந்த வேலையைத் தவிர வேறு எந்த வேலையும் செய்யக்கூடாது.

இதை முடித்துவிட்டு, இதெல்லாம் முடித்துவிட்டோம் என்று 100 நாட்களுக்குள் எங்களிடத்தில் வந்து சொல்ல வேண்டும். எனவே அ.தி.மு.க. செய்த தவறுகளை, தி.மு.க. ஆட்சி சரிசெய்யும் என்ற நம்பிக்கையை மீண்டும் சொல்ல விரும்புகிறேன். இந்தப் பிரச்சனைகள் எல்லாம் முடிவடைகிறபோது, நான் பெருமையோடு சொல்ல விரும்புகிறேன். தமிழகத்தில் இதனால் 1 கோடி குடும்பங்கள் நிச்சயமாக பயன் பெறும். 1 கோடி குடும்பங்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டிருக்கும்.

இதை அண்ணா மீது ஆணையாக சொல்கிறேன். அண்ணா சிலைக்கு – கலைஞர் சிலைக்குப் முன்னால் நின்று சொல்கிறேன். கலைஞர் மீது ஆணையாக, நிச்சயமாக இதெல்லாம் நிறைவேற்றுவோம். தேர்தல் அறிக்கையில் 120-வது பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. புதிய திட்டங்கள் செயலாக்க அமைச்சகம் தொடங்கப்படும் என்று. நீங்கள் படித்திருப்பீர்கள். பார்த்திருப்பீர்கள்.

அந்த அமைச்சகம் இந்தத் தேர்தல் அறிக்கையில் சொன்னவற்றை மட்டுமல்ல, 100 நாட்களுக்குள் நிறைவேற்றப்பட வேண்டிய இந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதில் முழுமையாக ஈடுபடும் என்ற நம்பிக்கையை நான் தெரிவித்துக் கொண்டு - 100வது நாள் அன்று முதலமைச்சராக இதேபோல உங்களையெல்லாம் சந்தித்து இதுதொடர்பான செய்திகளை எல்லாம் நிச்சயமாக உங்களிடத்தில் வெளியிடுவேன் என்பதையும் கூறிக்கொள்கிறேன்.

நாளைய தினம் கொளத்தூர் தொகுதியில் கழக வேட்பாளராக நான் போட்டியிடுவதற்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்யவிருக்கிறேன். வேட்புமனுத் தாக்கல் செய்து விட்டு நேராக கலைஞர் பிறந்த திருவாரூருக்கு தான் செல்கிறேன். தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குகிறேன். கலைஞருடைய அந்த திருவாரூர் தொகுதியில் இருந்து தான் என்னுடைய பிரச்சார பயணம் தொடங்கப்படவிருக்கிறது.

அதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பிரச்சார பயணம் திட்டமிடப்பட்டிருக்கிறது. விரைவில் அந்த தேதி, எந்தெந்த மாவட்டம் என்பது அறிவிக்கப்படவிருக்கிறது. ஏற்கனவே மக்கள் கிராம சபைக் கூட்டங்களை நடத்தி இருக்கிறோம். உங்கள் தொகுதி ஸ்டாலின் என்ற அந்த நிகழ்ச்சியை முடித்து இருக்கிறோம். விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் அந்த பிரச்சார பயணத்தை நடத்தி இருக்கிறோம்.

கடந்த 6 மாதங்களாக பல முறை. ஒரு முறை அல்ல, பலமுறை தமிழ்நாட்டை குறுக்கும் நெடுக்குமாக நான் சுற்றி வந்திருக்கிறேன். அந்த அளவிற்கு பிரச்சாரம் நடந்து இருக்கிறது. எனவே இன்னும் இருப்பது மிக குறைவான நாட்களே. எனவே கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஒரு பக்கத்தில் பிரச்சாரத்தை தொடங்கிவிருக்கிறார்கள். நம்முடைய கழக முன்னணியினர் ஒரு பக்கத்தில் பிரச்சார பயணத்தை தொடங்கவிருக்கிறார்கள்.

எனவே இந்த நிகழ்ச்சியின் மூலமாக தமிழக மக்களுக்கு நான் வைக்கும் வேண்டுகோள். 10 ஆண்டு காலமாக இந்த தமிழகம் பாழ்பட்டு போய்விட்டது. பாழ்பட்டுப்போயிருக்கும் தமிழகத்தை மீட்டெடுக்க ஒன்று திரள்வோம். அணிதிரள்வோம். வெற்றி காண்போம்” எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories