தி.மு.க

தாயகத் தமிழர்களின் நலன் காக்க திமுகவில் உதித்தது வெளிநாடு வாழ் இந்தியர் நல அணி.. மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

கழகத்தின் புதிய அணி, வலிவும் பொலிவும் பெற்று தொடர்ந்து வளர்ந்திடும் வகையில் அனைவரும் ஒருங்கிணைந்து உத்வேகத்துடன் செயலாற்றிட அன்புடன் அழைக்கிறேன் என மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

தாயகத் தமிழர்களின்  நலன் காக்க திமுகவில் உதித்தது வெளிநாடு வாழ் இந்தியர் நல அணி.. மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

"இன்று (ஜனவரி 9) வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிற நிலையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலான வெளிநாடு வாழ் இந்தியர் (NRI) நல அணி தன் பணியை அனைவரும் போற்றத் தக்க வகையில் சிறப்புடன் தொடங்கி, உலகெங்கும் வாழும் தாயகத் தமிழர்களின் உரிமை - நலன் காக்க, தக்க வண்ணம் துணை நிற்கும்!" என திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்,

அதில், “ “யாதும் ஊரே, யாவரும் கேளிர்”; “யாதானும் நாடாமால் ஊராமால்”; என்றெல்லாம் பரந்து விரிந்த உலகளாவிய சிந்தனை நோக்கில் செறிவான கருத்துகளை வழங்கிச் சென்ற தமிழ்ச் சான்றோர் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி; உலகத் தமிழர்கள் அனைவரையும் ஒட்டிப் பிறந்த உடன்பிறப்புகளாகக் கொண்டு விளங்கிடும் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். 1957-ஆம் ஆண்டு முதன்முறையாகக் கழகம் தேர்தல் களத்தைச் சந்தித்தபோது வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலேயே, தமிழர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் உள்ள தூதரகங்களில் தமிழ் தெரிந்த அதிகாரிகளை நியமித்திட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்த இயக்கம் இது.

உடல் உழைப்புத் தொழிலாளர்களாக மட்டுமே தமிழர்கள் பெருமளவில் வெளிநாடுகளைத் தேடிச்சென்ற நிலை மெல்ல மெல்ல மாறி, தி.மு.க.வின் சமூகநீதிக் கொள்கைகளாலும் - பொது நுழைவுத் தேர்வு ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகளாலும் தமிழகத்தில் பலரும் பொறியியல் - மருத்துவம் பட்டம் பெற்று, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகள், வளைகுடா நாடுகள், தென்கிழக்கு ஆசிய நாடுகள், ஆப்பிரிக்கா, தென் அமெரிக்க நாடுகள் உள்பட உலகின் பல பகுதிகளிலும் பணியாற்றி வருகிறார்கள்.

தாயகத் தமிழர்களின்  நலன் காக்க திமுகவில் உதித்தது வெளிநாடு வாழ் இந்தியர் நல அணி.. மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

திராவிட இயக்க உணர்வும் - தமிழர்கள் என்ற பீடும் பெருமையும் கொண்ட வெளிநாடு வாழ் இந்தியர்களாக அவர்கள், தங்கள் தாய்த் தமிழகத்தின் நலனை என்றும் மறக்காதவர்கள். அத்தகைய வெளிநாடு வாழ் இந்தியர்களான தமிழர்களை ஒருங்கிணைக்கவும், அவர்களின் சுயமரியாதை மற்றும் கண்ணியம் காக்கும் உரிமைகள் மற்றும் நலன்கள் குறித்து, இந்திய வெளியுறவுத்துறை - தூதரகங்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்லவும், சமூக வலைதளங்கள் வாயிலாக அவர்கள் ஆற்றி வரும் இயக்கப் பணிகளை மேம்படுத்தி - கழகத்திற்கு மேலும் வலுசேர்த்திடவும், திராவிட முன்னேற்றக் கழகத்தில் புதிய அணியாக வெளிநாடு வாழ் இந்தியர் (NRI) நல அணி உருவாக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கழகப் பொதுச்செயலாளர் அண்ணன் துரைமுருகன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கழக சட்டதிட்ட விதி 6, பிரிவு 2-ன் அடிப்படையில் வெளிநாடு வாழ் இந்தியர்களைக் கழக உறுப்பினர்களாக இணைப்பதற்கும் - ஒவ்வொரு நாட்டிலும், கழக அமைப்புகளை உருவாக்குவதற்கும், முறைப்படுத்துவதற்கும் கழக சட்டதிட்ட விதி 31- பிரிவு 20-ன் கீழ் ‘வெளிநாடு வாழ் இந்தியர் (NRI) நல அணி’ என்ற ஒரு புதிய அணி அமைக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியின் செயலாளராக தம்பி டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ., அவர்களும், இணைச் செயலாளர்களாக டாக்டர் செந்தில்குமார் எம்.பி., அவர்களும், புதுக்கோட்டை எம்.எம்.அப்துல்லா அவர்களும் பொதுச்செயலாளர் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (ஜனவரி 9) வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிற நிலையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலான இந்த அணி தன் பணியை அனைவரும் போற்றத் தக்க வகையில் சிறப்புடன் தொடங்கி, உலகெங்கும் வாழும் தாயகத் தமிழர்களின் உரிமை - நலன் காக்க, தக்க வண்ணம் துணை நிற்கும். தலைவர் கலைஞர் அவர்கள் வெளியிட்ட தி.மு.கழகத் தேர்தல் அறிக்கையில், வெளிநாடு வாழ் தமிழர்களுக்காகத் தமிழகத்தில் புதிய துறை உருவாக்கப்படும் என்ற வாக்குறுதியும், தமிழ் மக்களின் பேராதரவுடன் விரைவில் அமையவிருக்கும் தி.மு.க. தலைமையிலான ஆட்சியில் நிறைவேற்றப்படும். கழகத்தின் புதிய அணி, வலிவும் பொலிவும் பெற்று தொடர்ந்து வளர்ந்திடும் வகையில் அனைவரும் ஒருங்கிணைந்து உத்வேகத்துடன் செயலாற்றிட அன்புடன் அழைக்கிறேன்.”

banner

Related Stories

Related Stories