தி.மு.க

“கிடைத்ததைச் சுருட்டிக் கொண்டு ஓடிவிடத் தயாராக இருக்கும் அ.தி.மு.க அமைச்சர்கள்” - மு.க.ஸ்டாலின் பேச்சு!

மறைந்த நாகை மாவட்டக் கழக முன்னாள் செயலாளர் அம்பலவாணன் அவர்களது திருவுருவப் படத்தினை திறந்து வைத்து, புகழஞ்சலி உரையாற்றினார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

“கிடைத்ததைச் சுருட்டிக் கொண்டு ஓடிவிடத் தயாராக இருக்கும் அ.தி.மு.க அமைச்சர்கள்” - மு.க.ஸ்டாலின் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (12-08-2020) மாலை, மறைந்த நாகை மாவட்டக் கழக முன்னாள் செயலாளர் அம்பலவாணன் அவர்களது திருவுருவப் படத்தினை திறந்து வைத்து, புகழஞ்சலி உரையாற்றினார்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை விவரம் வருமாறு :

“எனது பேரன்புக்கும் பெருமதிப்புக்கும் உரியவராக இருந்த நாகை அம்பலவாணன் அவர்களுடைய திருவுருவப் படத்தை இன்றைய தினம் நான் திறந்து வைத்துள்ளேன்.

நான் எப்போது நாகப்பட்டினம் வந்தாலும் அப்போதெல்லாம் வயது வித்தியாசம் பார்க்காமல் ஒரு இளைஞரைப் போல ஓடிவந்து அன்போடு வரவேற்று, பரபரப்போடு பணிகளை ஆற்றி வந்த அம்பலவாணன் அவர்களை படமாகப் பார்க்க வேண்டிய சூழ்நிலையை இயற்கை உருவாக்கி விட்டது. இது பேரதிர்ச்சியைத் தருகிறது.

சிக்கல் என்ற ஊரைச் சார்ந்தவராக இருந்தாலும், எந்தச் சிக்கலும் இல்லாதவராக தானும் வளர்ந்து கழகத்தையும் வளர்த்தவர் நம்முடைய அம்பலவாணன் அவர்கள்.

தான் வளர்ந்தால் போதும் என்று நினைக்காமல் தன்னோடு பலரையும் வளர்க்கக் கூடிய மனிதராக இருந்தார்.

கொள்ளிடம் முதல் கோடியக்கரை வரை; குத்தாலம் முதல் முத்துப்பேட்டை வரை; நாகூர் முதல் நீடாமங்கலம் வரை கட்சியைக் கட்டுக்கோப்பாக வைத்திருந்து, நாகை மாவட்டத்தில் கழகத்தின் அரண் போல இருந்தவர் அம்பலவாணன் அவர்கள்.

கழகத்தை விட்டு யாரும் போய்விடாமல் பாதுகாத்தவர் மட்டுமல்ல; அப்படிச் சென்றவர்களையும் மீண்டும் அழைத்து வந்து தலைவர் கலைஞர் அவர்களிடம் ஒப்படைத்தவர் அம்பலவாணன் அவர்கள். ஒரு தொண்டர் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணமாக அடையாளம் காட்டக் கூடியவராக அம்பலவாணன் அவர்கள் இருந்தார்.

கழக வரலாற்றில் மிக முக்கியமான பொதுக்குழு என்பது தஞ்சை மாவட்டத்தில் நடந்த பொதுக்குழு ஆகும். எல்லா பொதுக்குழுவுக்கும் மிகுந்த மகிழ்ச்சியோடு வரும் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் தஞ்சை பொதுக்குழுவுக்கு மட்டும் பதற்றத்துடன் வந்தார்.

எதிர்பார்த்தது போலச் சரியாக நடந்து முடிய வேண்டும் என்று தலைவர் அவர்கள் நினைத்தார்கள். அதனைத் திறம்பட நடத்திக்காட்டிய பெருமை மரியாதைக்குரிய அண்ணன் கோ.சி.மணி அவர்களுக்கு உண்டு. அந்த நேரத்தில் கோ.சி.மணி அவர்களுக்கு தோளோடு தோழனாக நின்று தஞ்சைப் பொதுக்குழுவைத் திறம்பட நடத்திக் காட்டியவர் அம்பலவாணன் அவர்கள்.

அந்தக் காலகட்டத்தில் கொரடாச்சேரியில் நடந்த மாபெரும் பொதுக்கூட்டம் முக்கியமானது. அந்தப் பொதுக்கூட்டத்தை எழுச்சியோடு நடத்தி தலைவர் கலைஞர் அவர்களை உற்சாகப் படுத்தியவர் அம்பலவாணன் அவர்கள்.

“கிடைத்ததைச் சுருட்டிக் கொண்டு ஓடிவிடத் தயாராக இருக்கும் அ.தி.மு.க அமைச்சர்கள்” - மு.க.ஸ்டாலின் பேச்சு!

இதுமாதிரி பிரமாண்டமான விஷயங்களில் மட்டுமல்ல, சிறுசிறு விஷயங்களிலும் அவர் கவனமாக இருப்பார்.

அதில் முக்கியமானது, சிக்கல் கிளைக் கழகத்தில் வருகைப்பதிவேடு!

இந்த வட்டாரத்துக்கு வருகை தருபவர்கள் கையெழுத்தை வாங்குவதற்கு என்று ஒரு குறிப்பேடு வைத்திருப்பார் அம்பலவாணன். இந்த வட்டாரத்தின் வழியாக கழக முன்னணியினர் யார் சென்றாலும், அவர்களது கையெழுத்தையும் வண்டியை நிறுத்தி வாங்கிவிடும் வழக்கத்தை வைத்திருந்தார். அந்த நல்ல பழக்கம் அனைவராலும் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று. அதனைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தவர் அம்பலவாணன் அவர்கள்.

இப்படி எத்தனையோ நல்ல பழக்க வழக்கங்கள் கொண்டவராக அம்பலவாணன் அவர்கள் இருந்தார்கள். அதனால் தான் கழகத்தில் தொடர்ச்சியாக பல்வேறு பொறுப்புகள் வகிப்பவராக அவர் வளர்ந்தார்.

சிக்கல் கிளைக் கழகச் செயலாளராக இருந்துள்ளார். நாகை மாவட்டப் பொறுப்புக்குழுவில் இருந்தார். பின்னர் நாகை மாவட்டப் பொறுப்பாளராக இருந்தார். இரண்டு முறை நாகை மாவட்டச் செயலாளராக உயர்ந்தார். ஐந்து முறை தொடர்ந்து கழகத்தின் பொதுக்குழு உறுப்பினராக இருந்துள்ளார். தலைமைச் செயற்குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

இப்படி தன்னுடைய செயல்பாடுகளின் காரணமாக பல்வேறு பொறுப்புகளைப் பெற்றவர் அம்பலவாணன் அவர்கள்.

கழகப் பணிகளோடு அவர் நின்றுவிடவில்லை. ஏராளமான பொது அமைப்புகளோடு அவர் இணைந்து செயல்பட்டவர். துறைமுகம் பாதுகாப்புக் கழக ஆலோசனை உறுப்பினர், கீழத்தஞ்சை அரிசி ஆலைகள் சங்கத் தலைவர், சிக்கல் உயர்நிலைப்பள்ளி மேம்பாட்டுத் தலைவர், நாகை புனித அந்தோணியார் மேனிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர், பூம்புகார் கலைக்கல்லூரி ஆட்சிமன்றக் குழு உறுப்பினர், சிக்கல் நவநீதேசுவரர் கோவில் அறங்காவலர், திருவாரூர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை இயக்குநர், நாகப்பட்டினம் வட்ட வேளாண்மை பொறியியியல் சங்கத் தலைவர், ஒருங்கிணைந்த தஞ்சாவூர் வேளாண்மை விற்பனைக் குழுத் தலைவர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக ஆட்சி மன்றக்குழு உறுப்பினர், நாகை மாவட்ட வேளாண் விற்பனைக் குழுத் தலைவர், நாகை மாவட்ட மீன் வளர்ப்போர் சங்கத் தலைவர், இந்திய இயற்கை உழவர் இயக்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் - இப்படி ஏராளமான பதவிகளை வகித்தவர் அம்பலவாணன் அவர்கள்.

“கிடைத்ததைச் சுருட்டிக் கொண்டு ஓடிவிடத் தயாராக இருக்கும் அ.தி.மு.க அமைச்சர்கள்” - மு.க.ஸ்டாலின் பேச்சு!

கழகத்தைச் சேர்ந்தவர்கள் பொது அமைப்புகளில் பொறுப்புகளுக்கு வருவதால் கழகத்துக்கும் பெருமை கிடைக்கிறது. பொதுவானவர்களது பாராட்டும் கிடைக்கிறது. அத்தகைய பேரும் புகழும் கழகத்துக்குப் பெற்றுத் தருபவராக அம்பலவாணன் அவர்கள் இருந்தார்கள்.

அம்பலவாணன் அவர்களுக்குள் ஓர் ஆசிரியர் இருந்தார். அவருக்குள் ஒரு விவசாயி இருந்தார். அவருக்குள் பெரியாரும் அண்ணாவும் கலைஞரும் இருந்தார்கள். மொத்தத்தில் அவருக்குள் தி.மு.க.,வே இருந்தது.

அம்பலவாணன் அவர்களுடைய மூத்த மகளுக்கு நிறைமதி என்று பெயர் சூட்டியவர், பேரறிஞர் அண்ணா அவர்கள். பேரறிஞர் அவர்கள் சொன்னதை போல நிறைவான வாழ்க்கை வாழ்ந்து மறைந்துள்ளார் அம்பலவாணன் அவர்கள். அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் என்னுடைய வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுக்கு மட்டுமல்ல; கழகத்துக்கே ஏற்பட்ட இழப்பு இது!

அம்பலவாணன்களைப் போல உழைப்பதுதான் அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி என்பதையும் மாவட்டக் கழகச் செயல்வீரர்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இது கொரோனா காலம். அனைவரும் மிகுந்த பாதுகாப்புடன் இருக்க வேண்டும். கவனத்துடன் இருக்க வேண்டும். மூத்த கழகத் தொண்டர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வேறு உடல் நலக் குறைபாடு உள்ளவர்கள் இன்னும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

மக்களைப் பாதுகாக்கும் கடமையில் இருந்து மத்திய மாநில அரசுகள் தவறிவிட்டன. அதிலும் குறிப்பாக, தமிழக அரசு இந்தக் கொரோனாவைப் பயன்படுத்திக் கொள்ளையடித்துக் கொண்டு இருக்கிறது.

டெண்டரில் கொள்ளை, மருந்து கொள்முதலில் கொள்ளை, நோயால் பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை கொடுப்பதில் பொய்க்கணக்கு, மருந்து உபகரணம் வாங்கியதில் முறைகேடு என்று கொள்ளை ராஜ்யம் நடத்துகிறார்கள். கொரோனாவால் முதலமைச்சர் பழனிசாமியும் சில அமைச்சர்களும் லாபம் அடைந்து வருகிறார்கள். கொரோனாவால் யாருக்காவது நன்மை என்றால் இவர்களுக்குத்தான். இவர்களுக்கு மக்களைப் பற்றி எந்தக் கவலையும் கிடையாது.

இன்னும் சில மாதங்கள் இருக்கின்றன, கிடைத்ததைச் சுருட்டிக் கொண்டு ஓடிவிடத் தயாராக இருக்கிறார்கள். இந்தக் கூட்டத்தில் இருந்து நம்மையும் காப்பாற்ற வேண்டும், மக்களையும் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டு விடைபெறுகிறேன்.”

இவ்வாறு அவர் உரையாற்றினார்.

banner

Related Stories

Related Stories