தி.மு.க

“இது சமூகநீதிக்கான மண் என நிரூபிக்க மீண்டும் ஆயத்தமாவோம்” - தலைவர் கலைஞர் நினைவுநாளில் கி.வீரமணி சூளுரை!

தமிழ்நாட்டை எவரும் சூறையாடிவிட முடியாது, இந்தக் கொள்கைகளை யாரும் கவர்ந்து விட முடியாது!

“இது சமூகநீதிக்கான மண் என நிரூபிக்க மீண்டும் ஆயத்தமாவோம்” - தலைவர் கலைஞர் நினைவுநாளில் கி.வீரமணி சூளுரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி சூளுரை ஏற்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், அவர் குறிப்பிட்டுள்ளதாவது

“ ‘மானமிகு சுயமரியாதைக்காரன்’ என்று தன்னை ஒரு வரியில் விமர்சனம் செய்துகொண்ட, முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் உடலால் மறைந்து உணர்வால் நிறைந்து இரண்டு ஆண்டுகள் ஓடியிருக்கின்றன. என்றாலும் இந்த இரண்டு ஆண்டுகளில் அவர் நம்மோடு இல்லை என்று சொல்வதைவிட, காரிருளால் கதிரவனை மறைக்க முடியாது என்பதுபோல, அவர்கள் எந்த உணர்வை, எந்த லட்சியத்தை உருவாக்கினார்களோ, பல்கலைக் கொள்கலனாக, பல ஆற்றல்களை உள்ளடக்கிய ஒரு தலைவராக இருந்த அவர்கள், எதற்காக தன்னுடைய வாழ்நாள் முழுவதும், ஏன், கடைசிவரை போராளியாக இருந்தார்களோ, எந்த திராவிட சமுதாயத்தின் உரிமைகளுக்காக, எதையெல்லாம் செய்ய வேண்டும் என்று விரும்பினார்களோ, அந்த செயல்களெல்லாம் நடைபெற்று, இந்த இரண்டு ஆண்டுகளில் மிகப்பெரிய வெற்றியைத் தந்திருக்கின்றன என்றால், மறைந்தும் மறையாமல் நம் நெஞ்சங்களிலே, மக்கள் உள்ளங்களிலே கலைஞர் நிறைந்திருக்கிறார் என்பதுதான் அதற்குப் பொருள்.

அவர் வாழ்ந்த காலத்தில் கூட, பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், பதவிச் சிம்மாசனத்தைவிட, மக்களின் இதயச் சிம்மாசனம்தான் அவர் பெரிதும் விரும்பிய ஒன்றாகும்.

அவருடைய பணிகளில் மிக முக்கியமான ஜாதி ஒழிப்பானாலும், சமூக நீதிக் களத்தில் நிற்பதானாலும், மொழிப்போர் என்ற களமானாலும், பண்பாட்டுப் படையெடுப்பை தடுத்து நிறுத்தக்கூடிய உணர்வானாலும், இன்றைக்கு அவர் இல்லை என்பதைக் காட்டி, ஏதோ தமிழகத்தில் வெற்றிடம் வெற்றிடம் என்று சில வெறுமைகள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அது உண்மை இல்லையென்பதற்கு அடையாளமாக அவருக்குப் பின்னாலும் திராவிட முன்னேற்றக் கழகம் ஓர் எழுச்சி மிகுந்த பேருருவாகியிருக்கிறது. திராவிட இயக்கங்கள் ஓரணியில் நிற்கின்றன.

அதுமட்டுமல்ல, அவர் இருந்தால் என்ன செய்வாரோ, அப்படி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒப்பற்ற தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் அனைவரையும் இணைத்துச் செய்த சாதனைதான் சென்ற தேர்தலில் தமிழகம் முழுவதும் பெற்ற மாபெரும் வெற்றியாகும். அது இந்தியாவையே திரும்பிப் பார்க்கச் செய்த ஓர் உத்தியாகும்.

“இது சமூகநீதிக்கான மண் என நிரூபிக்க மீண்டும் ஆயத்தமாவோம்” - தலைவர் கலைஞர் நினைவுநாளில் கி.வீரமணி சூளுரை!

அதேபோல அண்மைக்காலத்தில் சமூக நீதியில் ஏற்பட்ட மிகப்பெரிய சவால்களையெல்லாம் சந்தித்து, அதற்காக நீதிமன்றங்களில் சட்டப் போராட்டம் நடத்தி, 50 விழுக்காடு இடஒதுக்கீட்டு உரிமையைப் பிற்படுத்தப்பட்டோருக்கு திராவிடர் இயக்கம் பெற்றுக் கொடுத்திருக்கிறது. பா.ஜ.க தவிர அனைத்து இயக்கங்களும் சமூகநீதிக்காக ஒரே குரலாய் ஒலித்திருக்கின்றன.

ஒடுக்கப்பட்ட மக்களுடைய எத்தகைய உரிமைகளைப் பறிக்க முடியாது என்பதற்காக சமூகநீதி இயக்கம் தொடங்கப்பட்டதோ, அதே சமூகநீதியை வெற்றிக் களத்திலே நிறுத்தி இருக்கிறார்கள் என்றால், கலைஞர் இல்லை என்று பொருள் இல்லை!

கலைஞர் - ஆளுமையாக, முழுமையான கொள்கையாக வாழ்கிறார்; லட்சியப் போராட்டமாக வாழ்கிறார்; களத்திலே போர்வாளாகத் திகழ்கிறார். அவர் தந்த படைக்கலன் அந்தப் பணியை செய்து கொண்டிருக்கிறது; படைகள் எப்போதும் பாசறையில் தயாராக இருக்கின்றன.

இந்த வகையிலேதான் கலைஞருடைய இரண்டாவது நினைவு நாள் என்பது மேலும் நம்மை திடப்படுத்திக்கொள்ளவும், தமிழ்நாட்டை எவரும் சூறையாடிவிட முடியாது, இந்தக் கொள்கைகளை யாரும் கவர்ந்து விட முடியாது என்பதை உறுதிப்படுத்தவும்தான்!

கலைஞர் காட்டிய கொள்கை வழியில், அந்த ‘மானமிகு சுயமரியாதைக்காரர்’, தந்தை பெரியாரின் அணுக்கத் தொண்டராக, துணிவான செயல்வீரராக, அண்ணாவின் தம்பியாக, இந்த இயக்கத்தை எப்படிக் கொண்டு போனாரோ, அதே போல திராவிட இயக்கம், தான் எதிர்கொள்ளக்கூடிய எல்லாவற்றையும் சந்தித்து, வருகின்ற பொதுத் தேர்தலில் மீண்டும் உண்மையான திராவிடர் ஆட்சியை உருவாக்கும்.

அவ்வாட்சியைத் கலைஞருக்கு காணிக்கையாக்குவேன் என்று தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் எடுத்த உறுதிக்கு பின்னாலே மிகப்பெரிய கொள்கை நெறி இருக்கிறது. பதவி வெறியோ, ஜாதி வெறியோ, மத வெறியோ எதுவும் தமிழ்நாட்டை ஆக்கிரமிக்க முடியாது. இது பெரியார் மண்; இது சமூக நீதி மண் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்திட, களத்திற்கு ஆயத்தமாக இருப்பதுதான் இந்த இரண்டாவது நினைவு நாளில் நாம் ஏற்றுக்கொள்ளும் சூளுரையாகும்.

வாழ்க பெரியார்! வாழ்க அண்ணா! வாழ்க கலைஞர்!”

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories